தமிழக வரலாற்றில், தொடர்ச்சியான எழுத்துச் சான்றுகள் பெற்ற மரம் பனை என்பார் எழுத்தாளர் ஆ.சிவசுப்பரமனியம்.
ஊர்நாட்டுப் பகுதிகளில் பனைமரம் பற்றிய ஒரு நாட்டுபுற பாடல் உண்டு.
“கட்டுகு கவுராவேன்
கன்னுகுட்டிக்கு தும்பாவேன்
கட்டிலுக்கு கயிராவேன்
களைத்து வாராவனுக்கு நுங்காவேன்
பசித்து வாரவனுக்கு பழம்மாவேன்
ருசிக்க வாராவனுக்கு கிழங்காவேனு ”
இது தென்னைக்கும் பொருந்தும். கொடுப்பதில் வள்ளவர்கள் இருவரும். அதன் வழியே பனையிலிருந்து கிடைக்கும் கள்ளும் தெளுவும் கருப்பட்டி பொருட்களையும் வரலாற்றோடு இணைத்து பார்ப்போம்.
தொல்பழங்கால கல்வெட்டுகளில்:
மதுரை மாவட்டம் அழகர் மலையில் பாணித வணிகன் கொடை கொடுத்ததைக் கூறும் கி.மு முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று உள்ளது. இதில் பாணிதம் என்பது பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் இனிப்பு பண்டத்தை குறிக்கிறது (கரும்புச்சாறு என்னும் கருத்தும் உள்ளது).வணிகன் நெடுமலன் சமணபடுக்கை அமைக்கக் கொடுத்த கொடை பற்றிய செய்தி.
இரண்டாவதாக கரூர் குளித்தலைக்கு அருகில் கிடைத்த பனைத்துறை எனும் ஊரைச் சேர்ந்த வெஸன் என்பவர் சமண முனிவர்களுக்குப் படுக்கை அமைத்துக் கொடுத்ததை குறிக்கும் “பனை(த்) துறை வெஸன அதட் அனம்” எனும் பொயுமு முதலாம் நூற்றாண்டு கல்வெட்டு.
இதில் பனைத்துறை எனும் சொல் பனை மரங்கள் நிறைந்த பகுதியை குறிக்கிறது. பனை மரங்களை வைத்து ஒரு ஊரின் பெயர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வழக்கத்தில் இருந்தது என்பதை அறியமுடிகிறது.
அடுத்ததாகக் கொடுமணம் (கொடுமணல்) அகழாய்வில் கிடைத்த உடைந்த பானையோட்டில் உள்ள தமிழி எழுத்துப்பொறிப்பு “ய தண் வெண் நீர் அழி இய் தடா” இதில் வரும் “தண் வெண் நீர்” வார்த்தைகள் கள்ளைக் குறிப்பதாக சுப்பராயலு (2010:242:243) அய்யராவதம் மகாதேவன் (2014:50) படித்துள்ளனர். வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் கள்ளின் தொன்மையை அறிய முடிகிறது.
பழந்தமிழர் வரலாற்றில் பனையின் சிறப்புகளையும் அதிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களையும் பழந்தமிழர் பயன்படுத்தியதற்கான சான்றுகள் மிகையாகச் சங்க இலக்கியங்களில், தொல்தமிழ் கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன.
சங்க பாடல்களில் பனை பொருட்கள்:
நமக்குப் பரிச்சயமான ஔவையார் மன்னன் அதியனைப் பற்றி பாடும் போது,
சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே;
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே; (புறம் 235)
சிறிதளவு கள்ளைப் பெற்றால் எமக்குத் தருவான்; பெருமளவு கள்ளைப் பெற்றால் எமக்கு அளித்து நாம் பாட அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான்; என்கிறார்
புறநானுறு, அகநானுறு, புறப்பொருள் வெண்பாமாலை போன்ற எளிய மக்களின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்தும் இலக்கியங்களில் வெட்சி கரந்தை போர்களில் இருந்து வென்று வரும் வீரர்களை மகிழ்விக்கும் வகையில் உண்டாட்டு(ஊனும் கள்ளும்) கூடி மகிழ்ந்ததையும் அறியமுடிகிறது.
நாடு காக்கும் போரில் இறந்துபட்ட வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகற்களுக்கும் கள்ளு படைத்து வழிபட்ட வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.பாணர்கள் நெடுந்தூரம் நடந்த களைப்பு நீங்க கள்ளுண்டதையும் சங்க இலக்கிய குறிப்புகள் மூலம் ஆண் பெண் இருபாலருக்கும் கள்ளு (மருத்துவ காரணங்களுக்குட்பட்டு) பொதுவான பானமாக இருந்துள்ளதை அறிய முடியும்.
என்னதான் வள்ளுவர் கள்ளுண்ணாமையை பற்றிக் கூறி இருந்தாலும், மனிதனின் நற்பண்புகளை அளவிடப் பனை மரத்தையே அளவீடாகக் கொண்டுள்ளார் என்பதை
“திணைத்துணை நன்றி சேயினும் பனைத் துணையாக் கொள்வார் பயன்தெரி வார்”
என்ற குறளின் மூலம் அறிய முடியும்.
இடைக்கால வரலாற்றிலும் பனை:
பிற்கால வரலாற்றிலும் பனை பொருட்களான கருப்புக்கட்டி கோயில்களில் அமுது படைக்கும் முக்கியப் பொருளாக இருந்துள்ளமைக்கும் ஏராளமான கல்வெட்டுகள் சான்றமைகின்றன.
இரண்டாம் இராசராசன் ஆட்சிக் காலத்தில் திருத்துறைப்பூண்டி கல்வெட்டு ஒன்று திருஅமுது படையல் பொருளாக கருப்புக்கட்டி வைக்க ஆணையிட்டதைக் குறிக்கிறது.
கொங்கு சோழர் மரபின் வீரராஜேந்திரன் 12 ம் ஆட்சியாண்டு கடத்தூர் கல்வெட்டும் கருப்புக்கட்டி அவலமுது படைக்க வழங்கப்பட்டதைக் குறிக்கிறது.திருமுருகன்பூண்டி கல்வெட்டில் இராசராசபுரத்தை சேர்ந்த பெண்ணொருத்தி அப்பம், பணியாரம் படைக்க கருப்புக்கட்டி வழங்கியதைக் குறிக்கிறது.(தெ.இ.க30:43)
வாடிப்பட்டி அருகிலுள்ள தென்கரை மூலநாத சுவாமி கோயில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டொன்றும் கருப்புக்கட்டி அமுது எனக் குறிக்கிறது. மேலும் ,சோழர்கள் காலத்தில் பனங்களூர் நாடு தென்பனங்காடு என நாட்டுப் பிரிவுகளும், ஏராளமான ஊர்ப் பெயர்களும் பனையின் பெயரில் இருந்துள்ளதை அறியமுடிகிறது (சுப்பராயலு 2014:37).
விஜயநகரப் பேரரசு காலத்திய செப்பேடு ஒன்று கருப்புக்கட்டி உற்பத்தியாளர்களுக்கு விதிக்கப்பட்ட வரியினை தெரிவிக்கிறது.
பொயுமு 17 ஆம் நூற்றாண்டு கிழவன் சேதுபதி செப்பேடு ஒன்று “பனையேறி சாணான்குடி ஒன்றுக்கு திருப்பணி வேலைக்கு முப்பது பல கருப்புக்கட்டியும்” என பனையேறும் தொழிலாளர்கள் வரியைக் குறிக்கிறது. இவ்வாறாக வரலாற்றுக்கு முந்தைய காலத்திருந்து இன்றுவரை தொடர்ச்சியாக வரலாற்றில் வாழ்ந்து வருகிறது பனை.
பனையிலிருந்து பதநீர் எடுக்கும் முறை:
தாகத்தை அடக்க எத்தனையோ குளிர் பானங்கள் வந்தாலும் இந்த பதநீருக்கு ஈடாகாது. குடிக்கும் போது கசப்பாகவும் பின் வாய் முழுக்க இனிப்பாகவும் கசப்பையும் மறந்து மேலும் குடிக்க இந்த இனிப்பு சுவை தூண்டும்.
கருப்பட்டிக்காவும் பதநீர் மற்றும் கள்ளுக்காகவும் மரம் நின்று வளர்வதற்காகவும் பனைமரத்திலும் தென்னைமரத்திலும் இந்த முட்டிகள் கட்டப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்படும் மரங்களின் பாலைகள் (குருத்துகள்)முதலில் நன்றாகத் தட்டி விடப்படும். பின் மட்டையில் இருந்து அவனி(நார்) உரிக்கப்பட்டு பாலையை நன்றாக இறுக்கிக் கட்டிவிடப்படுகிறது. இதனால் பாலை விரியாது. பின் பாலையின் இருபுறமும் நன்றாகச் செதுக்கி விடப்பட்டு மண்பானை ஒன்று குருத்து முழுவதும் மூடும் படியாக கட்டப்படுகிறது.
மரத்தில் உள்ள பாலைகளின் அளவைப் பொருத்து மரத்திற்கு இரண்டு மூன்று பானைகள் கட்டப்படும்.
தினமும் காலையில் அல்லது மாலையில் பாலையில் இருந்து கசியும் திரவம் பானையில் சேகரிக்கப்பட்டு இறக்கப்படுகிறது.
சேர்க்கப்படும் சுண்ணாம்பின் அளவைப் பொருத்து சுவை மாறுபடும். சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் சேர்க்காமல் குடித்தால் கள்ளு.
கட்டப்படும் பானையில் உட்புறம் சுண்ணாம்பினால் பூசப்படுகிறது. கள்ளாகக் குடிக்க வேண்டும் என்றால் சிறிது புளித்த பதநீரை பானையில் சேர்த்து பாலையில் கட்டிவிடுவார்கள்.
இறக்கப்படும் திரவத்தின் இனிப்பு சுவையின் காரணமாக தேன்பூச்சிகள் உடன் இருக்கும் இதற்கு மரத்தில் இருந்து உரிக்கப்படும் பன்னாடையில் வடிக்கப்பட்டு அப்படியே கள்ளாகவும் சுண்ணாம்பு சேர்த்து பதநீராகவும் குடிக்கலாம்.
ஒரு நாளைக்கு ஒரு மரத்தில் இருந்து மூன்று முதல் நான்கு லிட்டர் பதநீர் அல்லது கள்ளு கிடைக்கும். இது மரத்தின் ஈரப்பதத்தைப் பொருத்து அளவு மாறுபடும். சேகரித்த பதநீருடன் கொட்டைமுத்து மற்றும் சுக்கு சேர்த்து பெரிய மொடாவில் குறிப்பிட்ட நேரத்திற்குக் கொதிக்க வைக்கப்படும். பின்னர் அச்சுகளில் ஊற்றி ஆறவைக்கப்பட்டு அச்சு வெல்லம் தயார் செய்யப்படுகிறது.
பனையிலிருந்து பெறப்படும் அனைத்துப் பொருட்களும் கிராம மக்களின் பொருளாதார வளர்ச்சி முதுகெலும்பு என்றால் மிகையாகாது.ஆனால் இன்றைய நிலையில் கோடி எண்ணிக்கையில் இருந்த பனை மரங்கள் சில லட்சங்கள் என குறையுமளவிற்கு உள்ளது.
விவசாய்களின் வளர்ச்சிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் எந்த வித தீங்கிழைக்காத பனையை நாம் ஏன் மறந்தோம் இல்லை மறக்கடிக்கப்பட்டோம் என்பதே! பனை நம் வாழ்வென்போம்.
– ஆதிரை சின்னச்சாமி