சத்தியமூர்த்தி நகர் தோன்றிய வரலாறு

சத்தியமூர்த்தி நகர் தோன்றிய வரலாறு :

இவ்வாய்வின் வரையறைக்குட்பட்ட சத்தியமூர்த்தி நகர் தோன்றிய வரலாறு பற்றியும் அதற்கு முன்னர் அவர்களுடைய நிலை பற்றியும் ரங்கசாமி நாயக்கர் (65) என்ற குடுகுடுப்பைக்காரர் கூறிய தகவல்கள் பின்வருமாறு “ரங்கசாமி நாயக்கருடைய முப்பாட்டன் குடியிருந்த ஊர் மதுரை மாவட்டம் அணைப்பட்டி அருகிலுள்ள எத்துரு மலைப்பட்டி அவர் ஏழு வயதுச் சிறுவனாக இருக்கும்போது அவருடைய பெற்றோர் அங்கிருந்து கிளம்பி நிலக்கோட்டைக்கு அருகிலுள்ள புதுப்பட்டி என்ற ஊரில் குடியேறினர். பின்னர் அந்த ஊரிலிருந்து கிளம்பி பரவை, கீழமாத்தூர், சம்மட்டிபுரம் என ஒவ்வொரு ஊராகச் சென்று தங்கினர். இறுதியில் 1957 ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி நகருக்குக் குடி வந்தனர். அப்போது தற்சமயம் ஊர் அமைந்துள்ள இடமானது, நீர்ப்பிடிப்பு குறைவாக உள்ள பரவைக் கண்மாயின் மேட்டுப் பகுதியாகும். அந்த இடமானது அரசுக்குச் சொந்தமான ‘புறம் போக்கு’ நிலம். குடுகுடுப்பைக் காரர்கள் இரவோடு இரவாக அவ்விடத்திற்குச் சென்று சிறிய கூரைக்குடிசைகளை அமைத்தனர். அந்தக் காலகட்டத்தில் ‘சமயநல்லூர் அனல் மின்நிலையத்தில் நடராஜபிள்ளை என்பவர் ஒப்பந்தக்காரராக இருந்தார். அவருடைய ஒப்பந்தத்தின் கீழ் குறைந்த கூலியில் வேலை செய்வதற்குக் குடுகுடுப்பைக்காரர்களில் சிலர் முன் வந்தனர். எனவே அவர்கள் நிலையாகத் தங்குவதற்கு, அனல்மின் நிலையத்திற்குப் பின்புறம் உள்ள பரவைக் கண்மாயில் மேட்டுப் பகுதியில் ‘பட்டா’ வாங்கித் தருவதில் நடராஜபிள்ளை உதவிகள் செய்தார்.

கொடிமங்கலத்தைச் சார்ந்த பால்ஐயர் அப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். மதுரை மேலப்பொன்னகரத்தில் குடியிருந்த அவரிடம் குடுகுடுப்பைக்காரர்கள் நேரில் சென்று மனு கொடுத்து விவரத்தைச் சொன்னார்கள். அதனால் பலன் ஏதுமில்லை.

பின்னர் ஒப்பந்தக்காரர் நடராஜபிள்ளை, “முதலமைச்சர் காமராஜர் அனல்மின்சார நிலையத்திற்கு வரப்போகிறார். எனவே அவரிடம் நேரில் விஷயத்தைச் சொல்லி மனுக் கொடுங்கள்” என்று ஆலோசனை கூறினார்.

அதன்பேரில் குடுகுடுப்பைக்காரர்கள்,குடுகுடுப்பை இனத்தாருடைய அப்போதைய தலைவர் ‘பங்காரு’ தலைமையில் முதலமைச்சர் காமராஜரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். முதலமைச்சர் காமராஜர், “நீங்கள் இங்கு நிரந்தரமாகத் தங்குவீர்களா?” என்று குடுகுடுப்பைக்காரர்களைப் பார்த்துக் கேட்டார். அவர்கள் கடவுள் ஜக்கம்மாவின் பெயரால் ஊரில் நிரந்தரமாகத் தங்குவதாகச் சத்தியம் செய்து கொடுத்தனர். அப்போது காமராஜர் ஊருக்கு ‘சத்தியமூர்த்தி நகர்’ என்று பெயரிட்டார். அத்துடன் நிலத்தைப் பட்டா செய்து தருவதாகக் கூறினார். அதன்பேரில் தமிழ்நாடு அரசாங்கம் 1961 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி 2 ஏக்கர் 55 சென்ட் நிலத்தைக் குடுகுடுப்பைக்காரர்களுக்குப் பட்டா போட்டுக் கொடுத்தது. அரசு தந்த நிலத்தை ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஐந்து சென்ட் என்ற கணக்கில் பங்கிட்டுக்கொண்டனர்.

பரவைக் கண்மாயின் மேட்டுப் பகுதியில் ஊர் தோன்றியமையால் தரைமட்டம் சற்றுத் தாழ்வாக இருந்தது; எங்கும் கத்தாழைப் புதர்கள் மண்டிக் கிடந்தன; மிகுந்த சிரமத்துடன் கத்தாழையை வெட்டி அப்புறப் படுத்தினர். அனல் மின்நிலையத்தில் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்ட நிலக்கரியில் எரிந்த சாம்பலைக் கொட்டி ஊரை மேடாக்கினார்கள். சில குடுகுடுப்பைக்காரர்கள் பெரிய குடிசைகள் கட்டினர்.

குடுகுடுப்பைக்காரர்கள், தங்களுடைய குடுகுடுப்பைத் தொழில் காரணமாக ஆண்டின் பெரும் பகுதியில் வெளியூர் சென்று தங்கி விடுகின்றனர். ஊரில் நிலையாகத் தங்கியிருக்கும் ஆட்கள் மிகவும் குறைவு. அந்தக் காலகட்டத்தில் குடுகுடுப்பைக்காரர்களுக்காக அரசு தந்த இடங்களை, வேற்று இனத்தார் சென்று ஆக்கிரமித்துக்கொண்டனர். எனவே தற்போது தேவர், நாடார், கள்ளர், செட்டியார் போன்ற பிற இனத்தார்களும் சத்தியமூர்த்தி நகரில் வாழ்ந்து வருகின்றனர் என்று குடுகுடுப்பைக்காரர்கள் கூறுகின்றனர்.

குடுகுடுப்பைக்காரர்களுக்கு, தற்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் சுமார் 3 சென்ட் நிலம் உள்ளது. அந்த இடங்களில் பலர் கூரை வீடுகளும், சிலர் ஓட்டு வீடுகளும் கட்டி நிலையாக வாழ்ந்து வருகின்றனர். ஊரில் சுமார் 700 வீடுகளில் சுமார் 400 குடுகுடுப்பைக்காரர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
(நூலிலிருந்து)

குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல் (இனவரைவியல் ஆய்வு) – ந.முருகேசபாண்டியன்
விலை: 80/-
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Buy this book online: https://www.heritager.in/product/kudukudupaikaarar-vazhviyal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers