காசு (நாணயம்) :
இவற்றிலிருந்து சங்க காலத்தில் பண்டமாற்று வாணிகம் நடந்ததை அறிகிறோம். ஆனால், பண்டமாற்று வாணிகம் நடந்த அந்தக் காலத்தில் காசு வழங்கப்படவில்லை என்று கருதுவது கூடாது. அதே காலத்தில், செம்பு, வெள்ளி, பொன் காசுகளும் வழங்கி வந்தன. அந்தக் காசுகள் விலையுயர்ந்த பொருள்களை வாங்குவதற்குக் பயன்படுத்தப்பட்டன்.
பண்டமாற்று நடந்ததைச் சங்க நூல்களிலிருந்து தெரிந்து கொள்வது போலவே, காசுகள் வழங்கி வந்ததையும் சங்கச் செய்யுட்களிலிருந்து அறிகிறோம். அந்தக் காசுகள் நெல்லிக் காயின் வடிவம் போல உருண்டு சிறிதுதட்டையாக இருந்தன என்று அறிகிறோம். இதனை மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் கூறுகிறார். பாலை நிலத்து வழி யிலே இருந்த நெல்லி மரங்களிலிருந்து உதிர்ந்துள்ள நெல்லிக் காய்கள், பொற்காசுகள், உதிர்ந்து கிடப்பன போலக் காணப் பட்டன என்று அவர் கூறுகிறார்.
‘புல்லிலை நெல்லிப் புகரில் பசுங்காய் கல்லதர் மருங்கில் கடுவளி உதிர்ப்பப் பொலஞ்செய் காசிற் பொற்பத் தாஅம் அத்தம்’
(புகர் இல்-துளை இல்லாத, கெட்டியான; கடுவளி பெருங்காற்று; பொலம் செய் காசு- பொன்னாற் செய்த காசு)
உகா மரத்தின் பழம் போல மஞ்சள் நிறமாகப் பொற்காசுகள் இருந்ததைக் காவன் முல்லைப் பூதனார் கூறுகிறார்.
குயில்கண் அன்ன குரூஉக் காய்முற்றி மணிக்கா சன்ன மானிற இருங்கனி உகாஅய் மென்சினை உதிர்வன கழியும் வேனில் வெஞ்சுரம்’
(குரூஉ – குரு = நிறம்; காசு அன்ன – காசு போன்ற; உகா – உகா மரம்; சினை – கிளை)
பொற்காசுகளை மாலையாகச் செய்து மகளிர் அரையைச் சுற்றி (மேகலை போல) அணிந்து கொண்டதைக் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் கூறுகிறார்)
ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த பொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல்’
( புறம், 353:1-2)
காசுகளை மாலையாகச் செய்து அரையில் அணிந்திருந்த பெண் ஒருத்தியை மதுரைப் போத்தனார் கூறுகிறார்.
‘அம்மா மேனி ஐதமை நுசுப்பின் பல்காசு நிரைத்த கோடேத் தல்குல்
மெல்லியல் குறுமகள்.’
(ஐது – அழகிய, நுசுப்பு இடுப்பு, இடை, குறுமகள் இளம்பெண்)
காசுமாலை அணிந்த இன்னொரு பெண்ணை ஓதலாந்தை யார் கூறுகிறார்.
‘பொலம் பசும் பாண்டில் காசு நிறை அல்குல் இலங்குவளை மென்றோள்.
களங்காய்க் சுண்ணி, நார்முடிச் சேரலைப் பாடிய காப்பியாற்றுக் காப்பியனார்க்கு 40 நூறாயிரம் பொன் (நான்கு) இலட்சம் அவன் பரிசாகக் கொடுத்தான் என்று கூறப்படுகிறது (பதிற்றுப் பத்து நான்காம் பத்து, பதிகம்) இங்குப் பொன் என்பது பொற்காசு என்று தோன்றுகிறது. ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் மேல் 6ஆம் பத்துப்பாடிய காக்கைப்பாடினியார் நச்செள்ளை யார்க்கு அவ்வரசன், நகை செய்து அணிவதற்காக ஒன்பது காப்பொன்னையும் நூறாயிரம் காணமும் (காணம் – அக் காலத்தில் வழங்கின பொற்காசு) கொடுத்தான். செல்வக் கடுங் கோவாழியாதனைப் பாடிய கபிலருக்குப் பரிசாக அவ்வரசன் நூறாயிரம் காணம் வழங்கினான் என்று ஏழாம் பத்துப் பதிகம் கூறுகிறது. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை அரிசில் கிழாருக்கு ஒன்பது நூறாயிரம் காணம்
பரிசாகக் கொடுத்தான் என்பதைப் பதிற்றுப்பத்து 8ஆம் பத்துப் பதிகத்தினால் அறி கிறோம். இளஞ்சேரல் இரும்பொறை தன்னைப்
பாடிய பெருங் குன்றூர் கிழார்க்கு முப்பத்திராயிரம் காணம் பரிசாகக் கொடுத் தான் என்பதை 9ஆம் பத்துப் பாயிரத்தினால் அறிகிறோம்.
பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ண னார்க்குச் சோழன் கரிகாலன் நூறாயிரங்காணம் பரிசு வழங்கி னான். இவ்வாறு, காணம் என்னும் பொற்காசு அக்காலத்தில் வழங்கி வந்ததை அறிகிறோம். செங்கம் என்னும் ஊரில் (தொண்டை நாடு), ஈயக் காசுகள் வழங்கி வந்ததை அங்கிருந்து கிடைத்த பழங்காசுகளிலிருந்து அறிகிறோம். அந்த ஈயக் காசுகளில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதனால் அவை கடைச்சங்க காலத்தில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு வழங்கி வந்தவை என்பது தெரிகிறது. அந்தக் காசில் உள்ள எழுத்துக்கள் தேய்ந்து உருத்தெரியாமல் மழுங்கிப் போனமை யால் அவ்வெழுத்துக்களின் வாசகத்தை அறிய முடியவில்லை. அந்தச் சான்றுகள் எல்லாம் அக்காலத்தில் காசு வழங்கி வந்தது என்பதைச் சந்தேகம் இல்லாமல் தெரிவிக்கின்றன.
இந்தக் காசுகள் அல்லாமல், அக்காலத்தில் கடல் கடந்த கப்பல் வாணிகத்தின் மூலமாக உரோம (யவன) தேசத்து நாணயங்கள் தமிழ்நாட்டில் வழங்கி வந்தன. அக்காசுகள் சமீப காலத்தில் ஏராளமாகப் புதையல்களிலிருந்து கிடைத்துள்ளன. அந்தக் காசுகளைப் பற்றிப் பின்னர்க் கூறுவோம்.
பழங்காலத் தமிழர் வாணிகம் – மயிலை சீனி.வேங்கடசாமி
(நூலிலிருந்து)
விலை: 120/-
வெளியீடு: நாம் தமிழர் பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/pazhankaala-tamilar-vaanigam-2/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers