பல்லவர் கட்டுத்தளிகள் – சீ.கீதா, மு.நளினி இரா.கலைக்கோவன்

2,000

இந்த நூல் ஒவ்வொரு கோவிலின் கட்டிட அமைப்பையும் விரிவாக சொல்கிறது. நேரில் பார்ப்பதுபோல ஒவ்வொரு கட்டிட உறுப்பையும் அதன் வகைமையையும் வார்த்தையாக்கி சொல்லிச்செல்வது கலைக்கோவனின் எழுதும் முறை. கோவில் கட்டிடக்கலை அடிப்படை தெரிந்தவர்கள் படிக்கப்படிக்க மனக்கண்ணில் கோவிலின் ஒவ்வொரு பகுதியும் விரிந்துசெல்லும். அதுபோலவே சிற்பங்கள் குறித்த விவரணையும் அமைந்துள்ளது வெவ்வேறு மூர்த்தங்களின் அணிகள், முத்திரைகள், அமர்ந்த நிலை, கரணங்கள் இவை அனைத்தையும் பதிவு செய்கிறது ஆசிரியர் குழு.

Add to Wishlist
Add to Wishlist

Description

அறுபத்து மூன்று நாயன்மார்கள் கதைகளில் திருநின்றவூர் பூசலாரின் கதை மிகவும் வித்தியாசமானது. அந்தணரான அவர் சிவனுக்கு ஒரு கோவில் கட்ட முயற்சிக்கிறார். அவரால் பொருள் திரட்ட முடியவில்லை, ஆகவே அவரது மனதில் இறைவனுக்கு ஆகம முறைப்படி கோவில் ஒன்றை எழுப்புகிறார். அதே சமயத்தில் காஞ்சியில் பல்லவ அரசன் எழுப்பிய கற்கோவிலில் சிவன் எழுந்தருளும் நாள் வந்தது , அரசனது கனவில் இறைவன் தான் பூசலார் கட்டி முடித்த கோவிலில் அதே நாள் எழுந்தருள்வதாகவும், காஞ்சிக் கோவிலுக்கு வேறுநாள் பார்க்கும்படியும் அரன் சொல்கிறார். மன்னன் அதிசயித்து அடியவரது கோவிலைத் தேடிச்சென்று அப்படி ஒன்று இல்லாதது கண்டு திகைக்கிறான். பூசலார் மனத்தால் கோவில் கட்டியமையை வேந்தனுக்கு சொல்கிறார், பல்லவன் பூசலாரைப் பணிந்து காஞ்சி மீள்கிறான். தொண்டை நாட்டவரான பூசலார் அப்பர் சம்பந்தர் காலத்திற்கும் சுந்தரர் காலத்திற்கும் இடைப்பட்ட காலம் என்கிறார் இராசமாணிக்கனார்.

மேலே சொன்ன கதை பெரியபுராணத்தில் மன்னியசீர் சருக்கத்தில் சேக்கிழாரால் பாடப்பட்டுள்ளது. பூசலார் ஆகம முறைப்படி மனக்கோவில் அமைப்பதையும், உபானம், சிகரம் போன்ற ஆலயத்தின் உறுப்புக்களையும் தனது பாடல்களில் கிழார் குறிப்பிடுகிறார், அவ்வகையில் கோவில் கலை குறித்த இலக்கிய ஆவணமாகவும் இப்பாடல்கள் முக்கிய இடம் பெறுகின்றன. சோழர்களின் கலை சாதனைகளாகிய தஞ்சை, கங்கைகொண்ட சோழபுர சிவாலயங்கள் சேக்கிழார் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. அவற்றை விதந்தோதாது நாயன்மார் கதைகளோடு இயைந்த தில்லை, ஆரூர் போன்ற பெருங்கோவில்களின் சிறப்புகளையே சேக்கிழார் பாடுகிறார். எனினும் பூசலார் கதையில் காஞ்சியில் பல்லவர் எழுப்பிய கற்றளியை சேக்கிழார் குறிப்பிட மறக்கவில்லை.

கோவில் கட்டிடக்கலை குறித்த தமிழ் வெளியீடுகளில் எப்போதாவது நிகழும் அற்புதங்களில் ஒன்று இராசமாணிக்கனார் ஆய்வு மைய வெளியீடாக வந்திருக்கும் பல்லவர் கட்டுத்தளிகள் என்ற புத்தகம். வரலாற்றாய்வாளரும் கண் மருத்துவருமான இரா கலைக்கோவனுடன் ஆய்வாளர்கள் மு நளினி மற்றும் சீ கீதா ஆகியோர் இணைந்து நானூற்று எழுபத்தி இரண்டு பக்கங்கள் கொண்ட இந்த நூலை உருவாக்கியுள்ளனர்.

இந்நூலின் ஆசிரியரான கலைக்கோவன் வரலாற்றாய்வாளர் இராசமாணிக்கனாரின் மகன். மா இராசமாணிக்கனார் எழுதிய பல்லவர் வரலாறு , பெரிய புராண ஆராய்ச்சி ஆகிய நூல்கள் இவ்வளவு காலம் கழித்தும் ஆர்வலர்கள் வாசிப்பிலுள்ள ஆக்கங்கள். இராசமாணிக்கனாரின் பெயரில் அமைந்த ஆய்வு மையத்தின் இயக்குனருமான கலைக்கோவன் அவரது ஆய்வு மையத்தினருடன் இணைந்து சோழர் கற்றளிகள், தென்னகக்குடைவரைகள் குறித்த முக்கியமான நூல்களை வெளியிட்டுள்ளார். வரலாறு என்ற பெயரில் வெளிவந்த இணைய இதழும் இந்த ஆய்வு மையத்தின் முன்னோடி முயற்சியே. இராசமாணிக்கனார் ஆய்வு மைய வெளியீடுகள் அதன் தரவுகளின் நம்பகத்தன்மைக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிப்பவை. பாண்டியர் பல்லவர் இருமரபினரும் இன்று நாம் காணும் கோவில்களுக்கு முன்னோடியாக ஒருகல் தளி, குடைவரை, கட்டுத்தளி ஆகிய மூன்று வகை கோவில்களையும் செய்தவர்கள். பல்லவர் கட்டிடக்கலை குறித்து இம்மையம் முன்பே வெளியிட்டுள்ள மகேந்திரர் குடைவரைகள், பல்லவர் ஒருகல் தளிகள் ஆகிய நூல்களை அடுத்ததாக இந்த பல்லவர் கட்டுத்தளிகள் நூல் வெளிவந்துள்ளது.

பல்லவர் எழுப்பிய கட்டுத்தளிகளான இருபத்தி ஒன்பது ஆலயங்களை இந்த நூல் கட்டிடக்கலை நோக்கில் பதிவு செய்கின்றது. அவற்றில் மாமல்லையின் ஆறு ஆலயங்கள், காஞ்சிபுரத்தின் பதினோரு ஆலயங்கள், உத்திரமேரூரின் இரு ஆலயங்கள் தவிர பிற இடங்களிலுள்ள பத்து ஆலயங்களும் அடங்கும். இருபத்து ஒன்பதில் ஐந்து விண்ணகரங்கள் ஒரு சமண ஆலயம் தவிர ஏனையவை சிவாலயங்கள். பல்லவர் கட்டுத்தளிகள் என்றால் பொதுவாக நினைவுக்கு வருபவை காஞ்சி கைலாசநாதர் கோவிலும், மாமல்லை கடற்கரை கோவிலும்தான். இந்நூலில் அதிகமும் அறியப்படாத விளக்கணாம்பூண்டி விசலேஸ்வரம், ஆலம்பாக்கம் மாடமேற்றளி போன்ற ஆலயங்களும் பல்லவர் ஆலயங்களா என்று தெரிந்துகொள்ளமுடியாதபடி புனரமைப்பு செய்யப்பட்டுவிட்ட கூரம், நெமிலி பெருமாள் ஆலயங்களும் கூட பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நூல் ஒவ்வொரு கோவிலின் கட்டிட அமைப்பையும் விரிவாக சொல்கிறது. நேரில் பார்ப்பதுபோல ஒவ்வொரு கட்டிட உறுப்பையும் அதன் வகைமையையும் வார்த்தையாக்கி சொல்லிச்செல்வது கலைக்கோவனின் எழுதும் முறை. கோவில் கட்டிடக்கலை அடிப்படை தெரிந்தவர்கள் படிக்கப்படிக்க மனக்கண்ணில் கோவிலின் ஒவ்வொரு பகுதியும் விரிந்துசெல்லும். அதுபோலவே சிற்பங்கள் குறித்த விவரணையும் அமைந்துள்ளது வெவ்வேறு மூர்த்தங்களின் அணிகள், முத்திரைகள், அமர்ந்த நிலை, கரணங்கள் இவை அனைத்தையும் பதிவு செய்கிறது ஆசிரியர் குழு.

நூலின் சிறப்பியல்புகளாக மேலுமிரு விஷயங்களை கூற வேண்டும். இந்த நூலில் பல்லவர் கலை குறித்து ஏற்கனவே எழுதியுள்ள முன்னோடி எழுத்தாளர் கருத்துக்களிலிருந்து மாறுபடும் இடங்கள் தெளிவாக குறிப்புகளின் வழியே பதிவு செய்யப்படுகிறது. இரண்டாவது இந்நூலில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள், முக்கியமான படங்கள் வண்ணத்திலும், ஏனையவை கருப்பு வெள்ளையிலும் அச்சிடப்பட்டுள்ளன. ஆய்வாளர் கலைக்கோவனின் சேகரங்கள் இவை, இவற்றில் பல எடுக்கப்பட்ட காலத்திலிருந்து தற்போது மாற்றம் பெற்றிருக்கலாம் என்பதாலும், இனிமேல் மாற்றம் செய்யப்படாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்பதாலும் இவை முக்கியமான ஆவணங்களாகின்றன.

ஒவ்வொரு கோவிலையும் படங்களுடன் விளக்கிய பின்னர் நூலின் இறுதிப்பகுதியில், இவை அனைத்தையும் தொகுத்துக்கொள்ளும்படி இரண்டு ஒப்பீடுகள் வைக்கப்படுகின்றன. முதலாவதாக கோவில் கட்டடக்கலையின் பதினாறு உறுப்புக்கள் எவ்வாறு பல்லவர் ஆலயங்களில் வளர்ச்சி பெற்றுள்ளன என்பதை ஆசிரியர் குழு ஒவ்வொரு பகுதியாக விளக்கிச்சொல்கிறது. அடுத்ததாக சிற்பங்கள் பகுதியில் இறை வடிவங்கள் மட்டுமல்லாமல், ஆடல் சிற்பங்களின் கரணங்கள், இசைக்கருவி மீட்டுவோர், தேவர்கள், பூதங்கள், முனிவர்கள், அரசர்கள், காவற்பெண்டுகள், கவரிப்பெண்கள், அடியவர்கள், தோழியர் என ஒவ்வொரு சிற்பமும் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது என்று விளக்கப்படுகின்றது. அத்துடன் சிற்பங்களின் உடலமைப்பும், மெய்ப்பாடுகளும், அணிகளும், கை முத்திரைகளும், ஆயுதங்கள் உள்ளிட்ட கைப்பொருள்களும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

வரலாறு என்பது தமிழர்களுக்கு எப்போதும் குடிப்பெருமிதம் என்றே ஒலிக்கின்றது. எல்லா அரசர்களும் அவர்களுக்கு ஏதோ வகையில் மூதாதையர். மாறாக கலைப்பெருமிதம் என்று ஒன்று நமக்கு இருக்கலாம், அது காலம் காலமாக இங்கு செழித்து வளர்ந்த கோவில்களை மையமாக்கி வளர்ந்த பண்பாட்டின் விளைவு. பல்லவர்கள் அதற்கு மிகவலுவான அடித்தளமிட்டவர்கள். அவ்வகையில் இந்நூல் மிக முக்கியமான ஒரு மூலத்தரவு நூல். இதை வாசிக்கையிலேயே பல்வேறு ஆய்வுகளுக்கான மூலநூல் இது என்று தோன்றிக்கொண்டே இருந்தது. இது போன்ற நூல்கள் தமிழில் வெளிவருகின்றது என்பதாலேயே இதன் மீதான வாசக கவனமும், நூலின் மீதான மதிப்பும் குறைவாகத்தான் கிடைக்கும். அது எவ்வகையிலும் நூலின் உருவாக்கத்திற்கான உழைப்புக்கு பத்தில் ஒருபங்கும் ஈடாகாது.

மெய்யாகவே கலை ரசனை கொண்ட நண்பர்களுக்கு இந்நூல் முக்கியமானது என்பது புரியவேண்டும். ஜெயக்குமார் பரத்வாஜ் நடத்தும் ஆலயக்கலை வகுப்புகளின்வழி அடிப்படை புரிதல் கொண்ட நண்பர்கள் பெருகிவருவதை ஒரு நல்ல நேர்மறையான மாற்றத்திற்கான துவக்கமாக பார்க்கிறேன். அவர்களிடையே இந்நூல் வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன். இரண்டாம் பதிப்பு வரட்டும் என்ற காத்திருப்பு வேண்டாம், ஏனெனில் உடனே அவ்வாறு நிகழ்வதற்கான வாய்ப்பு மிகக்குறைவு.

கட்டுரை: தாமரைக்கண்ணன், புதுச்சேரி

உள்ளுறை

I மாமல்லபுரம்

  1. முகுந்தநாயனார் கோயில்
  2. ஒலக்கண்ணேசுவரம்
  3. கடற்கரைக் கோயில் வளாகம்
  4. இராஜசிம்மேசுவரம்
  5. நரபதிசிம்மப் பல்லவ விஷ்ணுகிருகம்
  6. சத்திரியசிம்மேசுவரம்

II காஞ்சிபுரம்

  1. ஐராவதேசுவரம்
  2. பிறவாதான் ஈசுவரம்
  3. இறவாதான் ஈசுவரம்
  4. திரிபுராந்தக ஈசுவரம்
  5. மதங்கேசுவரம்
  6. முக்தேசுவரம்
  7. சந்திரப்பிரபா கோயில்
  8. கயிலாசநாதர் கோயில்
  9. மகேந்திரவர்மேசுவரம்
  10. வாலீசுவரம்
  11. வைகுந்தப்பெருமாள் கோயில்

Additional information

Weight2 kg

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.