வடஇந்தியாவில் ஜேஸ்டாதேவி :
உலகில் பெண்ணைத் தெய்வமாக வழிபடும் மரபு மிகத் தொன்மையான காலத்திலிருந்து பலநூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. பெண்தெய்வத்தைப் பண்டைய மக்கள், நிலவுலகைக் காக்கும் பூமித் தெய்வமாக, உயிரினங்களையும் தாவரங்களையும் படைக்கும் படைப்புத் தெய்வமாக, அவற்றைக் காத்து நிற்கும் காவல் தெய்வமாகக் கருதினர். இந்தியாவில் ஒவ்வொரு தொன்மையான கிராமம், நகரம் ஆகியவற்றைக் காக்கும் காவல் தெய்வங்களாகப் பெண்தெய்வங்கள் இருந்துள்ளன. விலங்குகள் தாவரங்களின் தெய்வமாகவும் மலை, நீர்நிலை, ஆறு ஆகியவற்றின் வடிவாகவும் பெண் தெய்வங்களை எண்ணினர். மனிதகுலத்தைக் காத்துச் செல்வத்தையும் வளமையையும் தருவனவாகப் பெண்தெய்வங்களை மக்கள் வழிபட்டுள்ளனர். தொல்மரபினர் தங்களது குலதெய்வமாகவும் கருதி ஆதிகாலத்திலிருந்து வழிபட்டு வந்துள்ளனர்.
கற்காலத்திலிருந்து பெண்களைத் தாய்த்தெய்வங்களாக வழிபட்டு வந்துள்ளமைக்கு உலகெங்கும் சான்றுகள் கிடைத்துள்ளன. ‘வீனஸ் வில்லன்ரோர்ட்‘ என்று அழைக்கப்படும் கண்ணாம்புக் கல்லாலான சிறிய சிற்பம் ஆஸ்திரியாவில் கிடைத்துள்ளது.’ இச்சிற்பம் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இதேபோன்று பழைமைவாய்ந்த ‘வீனஸ்லாசல்’ என்று அழைக்கப்படும் சிறுசிற்பம் பிரான்ஸ் நாட்டில் கிடைத்துள்ளது.?
வெண்மை வண்ணத்தில் வரையப்பட்ட தாய்த்தெய்வத்தின் கற்கால ஓவியம் தெற்கு அனடோலியாவில் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.*
இந்தியாவிலும் வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலிருந்து இதுபோன்ற சான்றுகள் கிடைத்துள்ளன. ஆனால் புதியகற்காலத்திலிருந்தே இதுபோன்ற சான்றுகள் கிடைத்துள்ளன. வடமேற்கு இந்தியாவில் ஷேர்கான் தரகாஸ் பகுதியில் புதியகற்காலத்தினைச் சார்ந்த தாய்த்தெய்வ உருவங்கள் கிடைத்துள்ளன.
பெரிய மார்பகங்களுடன் அமர்ந்திருக்கும் சுடுமண்பெண் உருவங்களும் பெண்ணின் பிறப்புஉறுப்பைக் காட்டும் புடைப்புருவச் சுடுமண் உருவங்களும் ஷேர்கான் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.
உலகின் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றான சிந்துசமவெளி நாகரிக காலத்திலும் (கி.மு.2500-கி.மு.1800) பெண்தெய்வ வழிபாடு இருந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இந்நாகரிகம் நிலவிய பகுதிகளில் செய்யப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த முத்திரைகளில் வேலைப்பாடுள்ள பெண்தெய்வ உருவங்கள் கண்டறியப்பட்டுள்ளனமுனைவர் வே.திருநங்கை, முனைவர் வெ.வேதாசலம் இவை வேலைப்பாடு கொண்ட அலங்காரத்துடன் விளங்கும் சுடுமண் உருவங்களாக உள்ளன.
வேதகால நாகரிக்காலத்திலும் இந்தியாவில் பெண்தெய்வ வழிபாடு இருந்தமைக்கான சான்றுகள் வேதங்களில் உள்ளன. இருக்குவேத காலத்தில் அதிதி, உஷா, சரஸ்வதி, இராத்திரி போன்ற பெண்தெய்வங்கள் வழிபடப்பட்டுள்ளன. வேதகாலப்பாடல்களில் நாற்பதிற்கும் மேற்பட்ட பெண்தெய்வங்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. உஷா, இராத்திரி, சினிவலி, ரக்கா, கங்கு, பிரித்திலி, அதிதி, பிரினி, திதி, சுவஸ்தி, ரேவதி, புரந்தி, அனுமதி, அபதேவி, சரஸ்வதி, சிந்து, அரங்கணி, இந்திராணி, வருணி, ருத்ரணி, அக்னியி, சரண்யா, சுரியி, சசி, ரோதசி, சீத்தா, தட்சிணா, சிராதா, திசீனா, இத்தா, பாரதி, கௌரி, சுதா, ஸ்ரீ, பாபிலெட்சுமி, கிருதா, நிருதி என்று அழைக்கப்பட்ட பல பெண் தெய்வங்கள் பிற்கால வேத இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன.’
வேதகாலத்திற்குப் பின்னர் வேதமரபைச் சாராத இந்தியத் தொல்குடி மக்களால் தொன்றுதொட்டு வழிபடப்பட்டு வந்த பெண்தெய்வங்களான அம்பிகா, உமா, கார்த்தியா யினி, துர்க்கை, காளி, விந்தியாவாசினி போன்ற தெய்வங்கள் பற்றிய சான்றுகளை மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களில் காணமுடிகிறது.”
சுடுமண்ணாலான, வரலாற்றின் தொடக்ககாலத்தினைச் சார்ந்த பெண்தெய்வங்களின் உருவங்களும் மௌரியர் காலத்திற்கு முற்பட்ட காலத்தினைச் சார்ந்த பெண்தெய்வ உருவங்களும் மௌரியர் காலத்துப் பெண்தெய்வ உருவங்களும் வடஇந்தியாவெங்கும் கிடைத்துள்ளன. இலாரியா நந்தன்கார் ஸ்தூபத்தில் நடைபெற்ற அகழாய்வில் பொன்தகட்டில் தாய்த்தெய்வம் பொறித்த உருவம் கிடைத்துள்ளது.’ இதேபோன்று பிப்ரவா ஸ்தூபத்தில் நடைபெற்ற அகழாய்விலும் தங்கத்தாலான சிறிய பெண்தெய்வ உருவம் கண்டறியப்பட்டுள்ளது.
வடஇந்தியாவில் ரூபார், கோசாம்பி, மதுரா, வைசாலி போன்ற பல இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் வட்டக் கற்கருவிகளிலும் இதுபோன்ற உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.”
மௌரியர் காலத்தில் வட இந்தியக் கிராமங்களிலும் நகரங்களிலும் வழிபடப்பட்ட முக்கிய பெண்தெய்வம், ‘யக்ஷி’ என்றழைக்கப்பட்ட பெண்தெய்வமாகும். இயக்கியின் (யக்ஷி) சுடுமண் உருவங்கள் இந்தியாவில் செய்யப்பட்ட அகழாய்வுக் குழிகளில் கிடைத்துள்ளன. சாஞ்சி, பார்குத் முதலிய ஸ்தூபங்களின் வாயில் தோரணங்களில் அழகிய இயக்கியின் உருவங்கள் காணப்படுகின்றன. தீதர்கஞ்ச் (பாட்னா), பீஸ்நகர் முதலிய இடங்களில் மௌரியர் கால மிக அழகிய இயக்கியின் உருவங்கள் கிடைத்துள்ளன.” பார்குத் ஸ்தூபத்திலும் அழகிய இயக்கியின் உருவங்கள் கிடைத்துள்ளன.”
கி.மு.முதலாம் நூற்றாண்டிற்குப் பின்னர் தோன்றிய பதினெட்டுப் புராணங்களில் பெண்தெய்வங்கள் பற்றிய ஏராளமான சான்றுகள் காணப்படுகின்றன. உலகினைப் படைப்பவராகவும் காப்பவராகவும் புராணங்களில் பெண்தெய்வங்கள் பேசப்படுகின்றன.
துர்க்கை, பார்வதி, மகாலெட்சுமி, மகாசரஸ்வதி, மகாகாளி, பராசக்தி, மாயா என்று பலபெயர்கள் கொண்ட பெண்தெய்வங்களின் வரலாறுகள் புராணங்களில் எடுத்துக்கூறப்பட்டுள்ளன.”
சுங்கர், சாதவாகனர், குஷாணர், குப்தர், வாகாடகர், இட்சுவாகு போன்ற அரசமரபினர் காலத்தினைச் சார்ந்த ஏராளமான பெண்தெய்வச் சிற்பங்களும் சுடுமண் உருவங்களும் நாடெங்கும் கிடைத்துள்ளன.”
இக்காலத்தினைச் சார்ந்த இலக்கியங்களிலும் பெண்தெய்வங்கள் பற்றிய சான்றுகள் கிடைக்கின்றன. அதன் பின்னர் இடைக்கால இந்தியாவிலும் பிற்கால இந்தியாவிலும் ஏராளமான பெண்தெய்வங்கள் வழிபாட்டில் இருந்துள்ளன. மக்கள் மனநிலைக்கு ஏற்ப இவற்றில் பழங்காலத்தில் வழக்கில் இருந்த பல பெண்தெய்வங்கள் சில சுவடு தெரியாமல் கால வெள்ளத்தில் கரைந்து போயின. சில பெண்தெய்வங்கள் கால வெள்ளத்திற்கு எதிராக நின்று தொடர்ந்து தனது பெருமையைக் காத்துக் கொண்டும் வந்திருக்கின்றன. சில பெண் தெய்வங்கள் ஒரு காலத்தில் மக்களால் போற்றப்பட்ட தெய்வங்களாக வணங்கப்பட்டுப் பிற்காலத்தில் ஒதுக்கித் தள்ளப்பட்ட தெய்வங்களாக மாறின. இத்தகைய பெண்தெய்வங்களில் ஒன்றாக இந்திய நாட்டில் வழிபடப்பட்ட தெய்வமாக, ஜேஸ்டாதேவி, அலெட்சுமி. மூதேவி என்று அழைக்கப்பட்ட பெண் தெய்வங்கள் விளங்கி யிருக்கின்றன. இப்பெண்தெய்வத்தை வடஇந்தியாவில் ஜேஸ்டா என்றும் அலெட்சுமி என்றும் அழைத்துள்ளனர். செல்வத்தையும் வளமையும் தரும் இலட்சுமிக்கு எதிரான குணம் படைத்தவள் என்று வடஇந்தியாவில் இவளைக் கருதுகின்றனர்.* தமிழ்நாட்டில் செல்வத்தையும் வளமையையும் தரும் பெண் தெய்வமாக மூதேவியைக் கருதினர்.
ஜேஸ்டாதேவியின் தோற்றம், வரலாறு, பண்பு பற்றி வேதங்கள், வடஇந்திய இதிகாசங்கள்,இலக்கியங்கள், புராணங்கள், வாய்மொழிக் கதைகள் போன்றவை எடுத்துக்கூறுகின்றன. பாலிமொழி இலக்கியங்களிலும் புத்தசமய ஜாதகக் கதைகளிலும் இப்பெண் தெய்வத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
இலிங்க புராணம், பத்மபுராணம், அக்னிபுராணம், தேவி மகாத்மியம் முதலிய குப்தர்காலத்துப் புராணங்களில் இவளைப் பற்றிய பல செய்திகள் காணப்படுகின்றன. புருஷார்த்தசிந்தாமணி, ஹேமாத்திரி, போதாயனகிரியாசூத்திரம், கீழதிகாரம். சித்தாந்தசாராவளி, விஷ்ணுதர்மோத்திரம் முதலிய நூற்களும் ஜேஸ்டா என்றும் அலெட்சுமி என்றும்
அழைக்கப்பட்ட இப்பெண்தெய்வம் பற்றிக் கூறுகின்றன.(நூலிலிருந்து)
வரலாற்றில் ஜேஸ்டாதேவி மூதேவி வழிபாடு – முனைவர் வே.திருநங்கை
விலை: 900/-
வெளியீடு: தனலட்சுமி பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/varalaatril-jeshta-devi-moothevi-vazhibaadu/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers