காஞ்சிபுரத்தின் வரலாறு – சங்க காலம் முதல் பல்லவர் காலம் வரை

சங்க காலத் தமிழக வரலாற்றினை அறிவதற்குத் துணை நிற்பவை சங்க இலக்கியங்களாகும். பாண்டியர் தலைநகரான மதுரையைச் சங்க இலக்கியங்கள் மதுரை, கூடல் என்ற இருபெயர் களால் சுட்டுகின்றன. அதுபோல் தொண்டை நாட்டின் தலைநகரான காஞ்சியைச் சங்க இலக்கியங்கள் காஞ்சி, கச்சி என்ற இரு பெயர்களால் குறிப்பிடுகின்றன.

காஞ்சி, காஞ்சிபுரம், கஞ்சி, கஞ்சிபுரம், காஞ்சீ, காஞ்சீபுரம், காஞ்சி மாநகர், கச்சியம்பதி, சின்னக்காஞ்சி, சிவகாஞ்சி, விஷ்ணு காஞ்சி, ஜைனகாஞ்சி, புத்த காஞ்சி, காஞ்சனபுரம், காஞ்சீபுரி, அத்தியூர், திரு அத்தியூர், சம்பாபுரி, பல்லவேந்திரபுரி, முப்புவனவனம், காமபீடம், தபோமயம், மும்மூர்த்தி வாசம், துண்டிரபுரம், இலயசித்தூர், பிரமபுரம், விண்டுபுரம், சிவபுரம், சருவசித்திகரம், கன்னிகாப்பு, ஆதிபீடம், பிரளயசித்து, இந்துபுரம், மும்முடீஸ்வரம், காமகோட்டம், சகலசித்தி தாண்டகபுரம், சத்திய வ்ரத க்ஷேத்திரம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப் பட்டுள்ளது இந்நகரம்.

இவற்றுள் காஞ்சி, காஞ்சிபுரம், காஞ்சி நாடு, கச்சி, கச்சிப்பேடு, கச்சிமாநகர் தவிர மற்றவை அனைத்தும் கி.பி. 6-ம் நூற்றாண்டிற்குப் பிறகு உருவான பெயர்களாகும்.

காஞ்சி என்ற சொல்லுக்குக் ‘காஞ்சி’ என்ற ஒருவகை மரம் (பூவரசு மரம்), மகளிர் இடையில் அணியும் மேகலை, நிலையாமை, மதில் என்ற பல பொருள்கள் உள்ளன. காஞ்சி மரங்கள் நிறைந்த பகுதி என்பதால் இப்பெயர் பெற்றது எனலாம்.

‘”வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்க் குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங் கொடிப் பாசிலைக் குருகின் புன்புறவரிப்பூ”

இப்பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகளில் காஞ்சியின் இயற்கை வர்ணனையில் ‘காஞ்சி’ மரங்கள் சூழ்ந்த என்ற குறிப்பு – இதனை மேலும் வலுவூட்டுகிறது.

சங்க இலக்கிய பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான பெரும் பாணாற்றுப்படை திரையன் என்ற மன்னன் கச்சியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான் எனக் கூறுகிறது. திரையனிடம் சென்று பரிசில் பெற்று ஒருவன் தன் எதிரில் கண்ட வறுமையில் வாடிய பெரும்பாணனை, திரையனிடம் சென்று பரிசில் பெற ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது. பரிதியி திரையன் வீற்றிருந்த இடத்திற்குச் செல்லும் வழியின் சிறப்பையும். அவன் வீற்றிருந்த மூதூரின் சிறப்பையும், அவனின் விருந்தோம்பல் பண்பையும் விரிவாக எடுத்து இயம்புகிறது.

”அடங்காத் தானையோடு உடன்று மேல்வந்த வொன்னாத் தெவ்வர் உலை விடத்தார்த்துக் கச்சியோனே கைவண் தோன்றல்” பெரும்.

“புலவுக் கடலுடத்த வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும் பலர் தொழ விழவு மேம்பட்ட பழவிறன் மூதூர்’ பெரும்.

என்ற இப்பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் திரையனை ‘கச்சியோன்’ எனவும் இவ்வூரை மூதூர் எனவும் சுட்டுகிறது.

கச்சிப்பேட்டு நன்னாகையார், கச்சிப்பேட்டு இளந்தச்சனார், கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார், கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார் ஆகிய சங்ககாலப் புலவர்கள் கச்சி, காஞ்சி ஆகிய இவ்வூர்களில் வாழ்ந்தவர்கள் ஆவர்.

இப்புலவர்களில் கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார் என்பவர் பெயரில் உள்ள காஞ்சி கச்சியை அடுத்துள்ள ஊர் என்பதைக் குறிக்கிறது. எனவே கச்சி, கச்சிப்பேடு, கச்சிப்பேட்டுக் காஞ்சி என்ற இம்மூன்று பெயர்களையும் அணுகும்போது கச்சி என்பது ஊர், இவ்வூரின் புறப்பகுதி கச்சிப்பேடு, கச்சிப்பேட்டின் அருகிலிருந்த ஊர் காஞ்சி என்பதாகும் என முனைவர் கு. பகவதி ‘காஞ்சிபுரம் கி.பி. ஆம் நூற்றாண்டிற்கு முன் என்ற தனது நூலில் குறிப்ப சொற்காள் வெலும் ண்ஞ்சி, ஆகிய இரு கதைகளும் தமிழ்ச் சொற்களேயாகும். இவை இயற்கை காரணமாக இடப்பட்ட ஊர்ப் பெயர்களாகும்.

கச்சி ஒரு மூதூர் எனவும், கச்சி சங்ககால அரசன் திரையனின் தலைநகர் என்றும், காஞ்சி மக்கள் வாழ்ந்த பகுதியாக விளங்கியது. எனவும் கச்சி வணிகத்திலும், காஞ்சி புலமை வளர்ச்சியிலும் சிறப்புற்றுத் திகழ்ந்தது என மேலும் விரிவாகத் தனது நூலில் எடுத்துரைத்துள்ளார்.

பல்லவர்களே காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு முதன் முதலாக ஆட்சி செய்யத் தொடங்கியுள்ளனர். வேலூர்ப்பாளையம் செப்பேடு குமாரவிஷ்ணு காஞ்சியை வென்றதாகக் கூறுகிறது. மேலும் ஸ்கந்த சிஷ்யன் என்பவன் சத்தியசேனன் என்ற அரசனிடமிருந்து பிராமணர்களுக்குரிய கடிகையைக் கைப்பற்றி யுள்ளான் என்றும் தெரிவிக்கிறது. எனவே பல்லவர் கடிகை அமைந்திருந்த காஞ்சியில் முடிசூட்டிக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர். யுவான் சுவாங் தனது பயணக் குறிப்பில் வடநாட்டுப் பல்கலைக் கழகங்களையும் காஞ்சியிலிருந்த பல்கலைக் கழகத் தையும் அதனின் நூலகத்தைப் பற்றியும் சிறிது விளக்கியுள்ளார்.

‘கச்சிப் பல தளியும் ஏகம்பத்தும் கயிலாத நாதனையே காணலாம்’

எனக் கச்சி ஏகாம்பரநாதனைத் திருநாவுக்கரசர் புகழ்ந்துள்ளார் மேலும்,

செவ்வியைப் பாகம் கொண்டார் சேந்தனை மகனாகக் கொண்டார் மல்லிகை கண்ணியொரு மாமலர் கொன்றை சூடிக் கல்வியிற் கரையிலாத காஞ்சி மாநகர் தன் உள்ளால் எல்லியை விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே எனக் காஞ்சியின் கல்வி வளத்தினைப் பற்றித் திருநாவுக்கரசர் தனது பாடலில் சுட்டிக் காட்டியுள்ளார். இவரும் கச்சி, காஞ்சி ஆகிய பகுதி களைக் கூறி காஞ்சி கல்வியிற் சிறந்திருந்ததை விளக்கியுள்ளார்.

சங்க இலக்கியங்களில் ‘காஞ்சி’ என்றும், மணிமேகலை காஞ்சி நகர், காஞ்சி நாடு எனக் குறிப்பிட்டுள்ளதை தவிர, ‘காஞ்சிபுரம்’ என வழங்கவில்லை. பதஞ்சலி இவ்வூரினைக் ‘காஞ்சிபுரக’ என அழைத்ததற்குப் பின் பல்லவர் செப்பேடுகளே முதன் முதல் ‘காஞ்சிபுரம்’ என அழைக்கத் தொடங்கியுள்ளதை அறிய முடிகிறது.

“ஆங்கவன் தானும் நின்னத்திற் கேதுப் பூங்கொடி கச்சி மாநகராதனின் மற்றும் மாநகர் மாதவன் பெயர்நாள்’

மூதூராக இருந்த கச்சி பின்னர் மாநகராக வளர்ச்சியடைந் துள்ளது.

நீடுகுழைக் காந்தளஞ் சிலம்பிற் களிறு படிந்தாங்குப் பாம்பணைப் பள்ளி அமர்ந்தோ னாங்கண் வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்க் குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப் பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூ”

கச்சிக்குச் செல்லும் வழியில் இயற்கையை வர்ணிக்கும்போது திருவெஃகா இறைவன் பாம்பணையின் பள்ளிகொண்டிருந்த திருமாலைப்பற்றியும், அதனருகே இருந்த காஞ்சியையும் சிறப்பாகப் பெரும்பாணாற்றுப்படை எடுத்துரைக்கிறது. தற்போதைய பெரிய காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் ஊர் அப்போது கச்சி எனவும், சின்ன காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் பகுதி அப்போது காஞ்சி என அழைக்கப் பட்டிருக்கலாம்.

நீனிறவுருவின் நெடியோன் கொப்பூழ் நான்முக ஒருவற் பயந்த பல்லிதழ்த் தாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றிச் சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின் இவ்வூர் தாமரைப் பூவடிவம் கொண்ட ஊராக இருந்துள்ளது என மேலே காட்டிய உருத்திரங்கண்ணனார் பாடல் வரிகளால் அறிகிறோம். மேலும், ஏரியிரண்டும் சிறகா எயில் வயிறா காடுடைய பீலி கடிகாவா – நீர் வண்ணன் அத்தியூர் வாயா அணிமயிலே போன்றதே பொற்றேரான் கச்சிப் பொலிவு”

என்ற இத் தனிப்பாடல் இக்காஞ்சியை மயில் போன்றிருந்தது வர்ணிக்கிறது.

பல்லவர்

காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தையும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளையும் கி.பி.3-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 9-ஆம் நூற்றாண்டு வரை சுமார் ஆறு நூற்றாண்டுகள் பல்லவர் ஆட்சி புரிந்துள்ளனர்.

பல்லவர் ஆட்சிக் காலத்தை வரலாற்று அறிஞர்கள் மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். தொடக்க காலத்திலிருந்து ஆறாம் நூற்றாண்டின் இடை வரை ஒரு பகுதி. ஆறாம் நூற்றாண்டின் இடையிலிருந்து எட்டாம் நூற்றாண்டின் இடைவரை உள்ளது இரண்டாவது பகுதி. எட்டாம் நூற்றாண்டின் இடையிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை உள்ளது மூன்றாவது பகுதியாகும்.

முதல் பிரிவில் உள்ள பல்லவ மன்னர்களைப் பற்றிய விவரங்கள் அதிகமாகத் தெரியவில்லை. இந்தக் காலத்தைச் சாசனங்கள் வழங்கிய காலம், சமஸ்கிருத சாசனங்கள் வழங்கிய காலம் என இருவகையாக பிரிக்கின்றனர்.

கி.பி. ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் சிம்மவர்மன் என்பவன் பல்லவ நாட்டை ஆட்சி செய்தான். அவன் மகன் சிம்ம விஷ்ணு சோழ நாட்டைப் பல்லவ அரசோடு இணைத்துக் கொண்டதுதான் பல்லவர் பற்றிக் கிடைக்கும் முதல் செய்தியாகும். அதிலிருந்து 8- ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை சிம்ம விஷ்ணு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சி செய்தனர். இதே காலகட்டத்தில் வாதாபியைச் சாளுக்கிய வம்சத்தினர் ஆட்சி புரிந்தனர். வடக்கே ஹர்ஷ வர்த்தனர் ஆட்சியும் தெற்கே மதுரையில் கடுங்கோன் தலைமையில் பாண்டியர் மீண்டும் தங்களது அரசை நிறுவியும் ஆட்சி செய்யத் தொடங்கினர்.

பல்லவரின் தோற்றம் குறித்துத் தெளிவான கருத்துகள் இல்லை. பல்லவர் தமிழகத்தைச் சாராதவர்கள் என்றும், தமிழகத்தைச் சார்ந்தவர்கள் என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன. பாரத்துவாஜ கோத்திரத்தைச் சார்ந்த பல்லவ வம்சத்தைச் சார்ந்தவன் ஒருவன் நாக அரசன் மகளை மணந்து ஆட்சிப் பீடம் ஏறியதாக இவர்களுடைய சாசனங்கள் தெரிவிக்கின்றன.

சோழ மன்னனான கிள்ளி என்பவன் நாகலோகம் சென்று நாக கன்னிகை ஒருத்தியை மணந்து அங்கே சில காலம் தங்கியிருந்தான். அவன் தனக்குப் பிறந்த பிள்ளைக்குத் தொண்டைக் கொடி ஒன்றினை அடையாளமாகக் கட்டி அவன் தந்தையான சோழ மன்னனிடம் சேர்க்கப் படகு மூலம் அனுப்பி வைத்தான். அது கடலில் மூழ்கவே, நீரில் மிதந்து வந்து கரை சேர்ந்த குழந்தையைத் தொண்டைக் கொடியின் அடையாளம் கண்டு சோழ மன்னன் எடுத்து வளர்த்துத் தன் நாட்டின் ஒரு பகுதிக்கு முடிசூட்டி வைத்தான். தொண்டைக் கொடியின் அடையாளத்தோடு வந்ததால் ‘தொண்டைமான்’ என்றும், கடல் திரையால் கரை சேர்ந்ததனால் ‘திரையன்’ என்றும் அவன் பெயர் பெற்றான். இந்த இளந்திரையன் காஞ்சியில் அரசாண்டான் எனத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

இதை வலுவூட்டும் வண்ணம் தளவானூரிலுள்ள முதலாம் மகேந்திரவர்மனின் தமிழ்க் கல்வெட்டொன்று அவன் தொண்டை யந்தார் வேந்தன் எனக் குறிப்பிடுகிறது. இதிலிருந்து பல்லவர்கள் தொண்டைமான் என்ற விருதைச் சூட்டியிருந்தனர் என்பதை அறியமுடிகிறது.

இளந்திரையனின் தந்தையான சோழமன்னன் கிள்ளி மணந்த நாககன்னியின் பெயர் பீலிவளை என்றும், அவள் தந்தையின் பெயர் வளைவணன் என்றும் மணிமேகலை கூறுகிறது.

பல்லவர் தங்களைப் பிரம்மக்ஷத்திரியர் என அழைத்துக் கொண்டது பற்றிக் காசாக்குடிச் செப்பேடு தெரிவிக்கிறது. அவர்கள் தங்கள் வம்சத்தினர் விஷ்ணுவின் நாபிக் கமலத்திலிருந்து தோன்றிய பிரம்மாவிடமிருந்து அங்கிரஸ், பிரகஸ்பதி, சம்யு, பரத்வாசர், துரோணர், அசுவத்தாமன், பல்லவன் என்ற வரிசையிலே வந்தவர்கள் எனக் கூறிக் கொண்டவர்கள். அவர்களுடைய சாசனங்களில் இந்த முறையே காணப்படுகின்றது.

முற்காலப் பல்லவர்

கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வேலூர்ப் பாளையச் செப்பேடு பல்லவ அரச மரபினைரைப் பற்றிக் கூறுகிறது. அதில் வீரகூர்சன் என்பவன் நாகராஜன் மகளை மணந்துகொண்டு அரசைக் கைக்கொண்டான். அவனையடுத்து ஸ்கந்தவர்மன், மூன்றாம் அரசனாகக் குமார விஷ்ணு, நான்காம் அரசனாகப் ‘புத்தவர்மன்’ என்ற பெயர்களைக் குறிப்பிடுகின்றது. வாயலூரில் கிடைக்கும் கல்வெட்டிலும் பல்லவ அரச மரபின் பட்டியலில் இந்நான்கு அரசர்களும் இதே வரிசையில் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.

பல்லவ சாசனங்களில் கிடைத்தவற்றுள் மிகவும் பழமை யானது மயிதவோலு செப்பேடுகள் ஆகும். பிராகிருத மொழியில் உள்ளது. அச்செப்பேடு சிவஸ்கந்தவர்மன் இளவரசனாக இருந்தபோது அளிக்கப்பட்டதாகும். செப்பேட்டு முத்திரையில் சிவஸ்கந்தவர்மன் என்று சமஸ்கிருதத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இதே மன்னனின் கி.பி.8-ஆம் நூற்றாண்டில் வழங்கப்பட்ட மற்றொரு சாசனம் ஹிரஹத ஹள்ளிச் செப்பேடாகும்.

இவனே பல்லவ வம்சத்தின் முதல் அரசன் எனவும் இவன் ஸ்கந்தசிஷ்யன் எனப் பெயர் பெற்றிருந்தான் என்பதும் வரலாற்றாய் வாளர்களின் கருத்தாகும். இவனே காஞ்சியில் புகழ்பெற்றிருந்த கடிகையைச் சத்திய சேனனிடமிருந்து கைப்பற்றியுள்ளான். ஸ்கந்த சிஷ்யன் மகனான குமாரவிஷ்ணு காஞ்சியைக் கைப்பற்றினான் என்று வேலூர்ப் பாளையச் செப்பேடு தெரிவிக்கிறது. தந்தையின் ஆட்சியில் நடைபெற்ற போரில் இவனே முன்னின்று நடத்தி வெற்றி கொண்டதால் இவன் கடிகையைக் கைப்பற்றினான் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

இந் நான்கு அரசர்களும் ஒரே வம்சத்தின் வழி வந்தவர்கள் எனலாம். ஸ்கந்தவர்மன் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சி செய்துள்ளான். இவ்வழி வந்த அரசர்களின் ஆட்சி கி.பி. 4-ஆம் நூற்றாண்டின் இடையிலே முடிவடைந்து விட்டது.

வேலூர்ப்பாளையச் செப்பேடு புத்தவர்மன் காலத்திற்குப் பிறகு விஷ்ணுகோபன் ஆட்சி செய்தான், இவனுக்குப் பின் சிம்மவர்மன் தோன்றினான் எனக் கூறுகிறது. இதிலே குறிப்பிடப்பட்டுள்ள விஷ்ணுகோபனைப் பற்றிய செய்திகளை முழுமையாக அறியமுடிய வில்லை.

பிற்காலப் பல்லவர்

பள்ளன் கோயில் சாசனத்தை வழங்கிய சிம்மவர்மன் வழிவந்தவர்கள் நானூறு ஆண்டுகள் ஆட்சி செய்தனர். ஒன்றன் பின் ஒன்றாக இரு கிளைகளைச் சேர்ந்தவர்கள் இவர்கள். தந்தையின் காலத்திலேயே ஆட்சி நிர்வாகத்தில் பங்கு கொண்டிருந்த சிம்மவிஷ்ணுவின் தலைமுறையினர் ஒரு கிளையாகவும் இவனது தம்பி பீமவர்மன் தலைமுறை ஒரு கிளையாகவும் இந்த இரண்டு தலைமுறையினரும் ஆட்சி புரிந்தனர்.

பள்ளன் கோயில் சாசனம் மிக முக்கியமானது. ஓர் அரசனின் ஆணையைத் தமிழிலேயே தாங்கிய தமிழ்நாட்டுச் செப்பேட்டுச் சாசனங்களில் இதுவே முதலாவதாகும். இச் சாசனம் முதலாம் மகேந்திரவர்மனின் பாட்டனாகிய சிம்மவர்மனின் காலத்தியது. இச்செப்பேட்டின் சமஸ்கிருதப் பகுதியில் ‘ஸ்வர்க்க’ என்ற மங்கலச் சொல்லில் தொடங்கினாலும் தமிழ்ப் பகுதியில் ‘ஸ்வஸ்திஸ்ரீ’ என்று பொதுவாக இடம்பெறும் மங்கலச் சொல்லில் தொடங்காமல் தூய தமிழில் ‘கோவிசைய’ என்ற சொல்லுடன் தொடங்குகிறது.

மற்ற தென்னக அரசர்களை விட சிறப்பான ஒன்று, பல்லவ அரச வம்சத்தினரின் வரலாற்று நிகழ்வுகள் காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோயில் உட்புறச் சுவர்களில் சிற்பங்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

மூலம்: காஞ்சிபுர மாவட்டத் தொல்லியல் கையேடு.