பாறை ஓவியங்களின் அமைவிடம் :
த மிழகத்தின் பல பகுதிகளில் அதிக அளவில் மலைகளும், குன்றுகளும் காணப்படுகின்றன. மலைகளில் இயற்கையாக அமைந்த குகைகளும், குகைகளைப் போன்ற பாறையின் தாழ்வான பகுதிகளும் உள்ளன. இத்தகைய இடங்களை தொல்பழங்கால மக்கள் அவர்களுடைய வாழ்விடமாகவும், வழிபாட்டிடமாகவும் கொண்டுள்ளனர் என்பது ஆய்வுகளிலிருந்து வெளிபடுகின்றன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தொல் பழங்கால ஓவியங்கள். மூன்று வகையான இடங்களில் காணப்படுகின்றன.
1. குகைகள், பாறையின் தாழ்வான பகுதியில் உள்ள ஓவியங்கள்.
2. கல்திட்டைகளில் உள்ள ஓவியங்கள்.
3. மட்கலங்களில் வரையப்பட்ட ஓவியங்கள்.
தொடக்கக் காலத்தில் தொல்பழங்கால மக்கள் பாறைகளில் ஓவியங்களை வரைந்தனர். இதைப்போன்று பெருங்கற்காலத்தில் உருவாக்கப்பட்டக் கல்திட்டைகளிலும் ஓவியங்களை வரைகின்ற வழக்கம் இருந்தது என்பதைப் பல கல்திட்டைகள் உறுதி செய்கின்றன. பின்னர் பாறைகளில் வரைகின்ற ஓவியங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் மட்கலங்களில் ஓவியங்கள் வரைகின்ற வழக்கம் தொடங்கிவிட்டது. மட்கலங்களின் மேல் பகுதியில் வெள்ளை, சிவப்பு போன்ற வண்ணங்களில் ஓவியங்கள் வரைந்துள்ளனர் என்பதைப் பல அகழாய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன. இவை ஓவியங்களின் வளர்ச்சிநிலைகள் என்று கூறலாம். இத்தகைய ஒவியக் கலை வளர்ந்து கீறல் குறியீடுகளாகவும், கீறல் குறியீடுகள் வளர்ந்து எழுத்துகளாகவும் பரிணாம வளர்ச்சி அடைந்தன. தமிழகத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட இடங்களில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில இடங்கள் மட்டும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் விரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
மயிலாடும்பாறை
கிருட்டிணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்திலுள்ள தொகரப்பள்ளி என்ற இடத்திலிருந்து சுமார் 2 கி.மீ.தூரத்தில் மயிலாடும்பாறை என்ற இடம் உள்ளது. இங்குள்ள மலையின் அருகில் நெகுல்சுனை என்ற பாறையின் கீழ்ப்பகுதியில் சிவப்பு, வெள்ளை ஆகிய வண்ணங்களில் தீட்டப்பட்ட ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடக்கக் காலத்தில் சிவப்பு நிறத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதன் பின்னர் வெள்ளை வண்ண ஓவியங்கள் சிவப்பு நிற ஓவியங்களின் மேல் தீட்டப்பட்டுள்ளன. இதனால் சிவப்பு வண்ண ஓவியங்கள் காலத்தால் முற்பட்டவை என்றும் வெள்ளை வண்ண ஓவியங்கள் காலத்தால் பிற்பட்டவை என்றும் கூறமுடிகின்றது.
இங்கு இரண்டு வீரர்களுக்கு இடையில் நடைபெறும் சண்டை காட்சிகள் பல இடங்களில் வரையப்பட்டுள்ளன. ஒரு கையில் வட்ட வடிவில் உள்ள கேடயம் போன்ற கருவியும், மற்றொரு கையில் வில் அல்லது கத்தியைப் போன்ற கருவியும் வைத்துள்ளனர். இவை நடுகல்லில் உள்ள கேடயம், கத்தியைப் போன்று உள்ளதால் நடுகல்லில் வடிக்கப்பட்டப் புடைப்பு உருவங்களுக்கு பாறை ஓவியங்கள் முன்னோடிகள் என்று கூறமுடிகின்றது. இரண்டு இடங்களில் வீரன் ஒருவன் நீண்ட ஆயுதம்ஒன்றைக் கொண்டு மிருகம் ஒன்றைக் குத்துவது போன்ற ஓவியங்களும் உள்ளன. மிருகங்களை வேட்டையாடும் காட்சிகள், பல வகையான குறியீடுகள் போன்றன இங்கு பல இடங்களில் காணப்படுகின்றன.
இங்கு செய்யப்பட்ட அகழாய்வில் நுண்கற்காலம், புதியகற்காலம், பெருங்கற்காலம், வரலாற்றுக் காலத்தின் தொடக்க காலம் ஆகிய காலங்களைச் சார்ந்த மக்கள் வாழ்ந்ததற்கானத் தடையங்கள் கிடைத்துள்ளன. எனவே அகழாய்வை அடிப்படையாகக் கொண்டு சிவப்பு வண்ணம் புதிய கற்காலத்திலும், வென்னை வண்ணம் பெருங்கற்காலத்திலும் எழுதப்பட்டிருக்கலாம் என்று உறுதிபடுத்த முடிகின்றது.
வரமணகுண்டா
கிருட்டிணகிரி மாவட்டத்தில் வரமணகுண்டா என்ற ஊர் கிருட்டிணகிரியிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்குள்ள குகையைப் போன்ற பாறையிலும், இதையடுத்துள்ள கல்திட்டைகளிலும் ஓவியங்கள் காணப்படுகின்றன. இரண்டு இடங்களிலும் வெள்ளை வண்ணத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. குகையைப் போன்ற பகுதியில் உள்ள ஓவியங்களுக்கு “தொட்டில்பாறை* என்ற பெயர் கூறப்படுகின்றது. இங்கு சூரியன், சந்திரன் போன்ற உருவங்களுடன் பெரிய அளவில் சில ஓவியங்களும் உள்ளன. இவை கோடுகளாவும், புள்ளிகளாகவும் வரையப்பட்டுள்ளன. இவை எதைக்காட்டுகின்றன என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை. நான்கு மனித உருவங்கள் வரிசையாக ஒருமேடான இடத்தில் நின்றுள்ளது போன்றும், இதன் கீழ் பகுதியில் ஒரு மனிஉருவம் நீண்ட வட்டத்தின் உட்பகுதியில் உள்ளது போன்றும், அதைச் சுற்றிலும் சில உருவங்கள் நிற்பது போன்றும் காணப்படுகின்றன. இந்த அமைப்பை நோக்கும் போது இறந்த இனக்குழுவின் தலைவன் உடலை அடக்கம் செய்கின்ற காட்சியைப் போன்று அமைந்துள்ளது என்று கருதலாம். இக்குகை தாய்த்தெய்வவழிபாட்டு இடமாக இன்று வரையில் இருந்து வருகின்றது.
பாண்டவர் பண்டா என்ற இடம் ஒன்று இங்குள்ள காட்டில் உள்ளது. இக்காட்டில் 50க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் உள்ளன. அவற்றில் மூன்று கல்லறைகளின் உட்பகுதியில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இக்கல்திட்டையிலுள்ள உருவங்களில் போரிடும் காட்சிகள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. சதுரம், வட்டம்போன்றவற்றின் உட்பகுதியில் உருவங்கள் இருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது இங்குள்ள உருவங்கள் முழுவதும் வெள்ளை வண்ணத்திலும் கோடுகளாகவும் வரையப்பட்டுள்ளன இங்கும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரும்புக் காலத்தைச் சார்ந்த மக்கள் இங்கு வாழ்ந்துள்ளனர் என்பதை அகழாய்வுச் சான்றுகள் கூறுகின்றன. இங்குள்ள ஓவியங்கள் முழுவதும் வெள்ளை வண்ணத்தில் உள்ளன. எனவே இவை இரும்புக் காலத்தைச் சேர்ந்தவை.
மகாராஜாகடை
மகாராஜாகடை என்ற ஊர் கிருட்டிணகிரியிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் கிருட்டிணகிரியிலிருந்து குப்பம் செல்லும் சாலையில் உள்ளது. இங்குள்ள மலையின் மேல் பகுதியில் பெரிய பாறை ஒன்றின் தாழ்வான பகுதியிலும், கீழ்ப் பகுதியிலுள்ள கல்திட்டைகளிலும் தொல்பழங்கால ஓவியங்கள் இருப்பது தெரியவந்துள்ளன. இங்கும் சிவப்பு. வெள்ளை ஆகிய இரண்டு வண்ணங்கள் ஓவியங்களை வரைவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மலையின் மேல் பகுதியில் உள்ள பாறையின் தாழ்வான பகுதியில் சிவப்பு. வெள்ளை வண்ணங்களில் வரையப்பட்ட ஓவியங்களும் குறிப்பிடத்தக்கன. தொடக்க காலத்தில் இங்கும் சிவப்பு வண்ணத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அதன் பின்னர் அதன் மேல் வெள்ளை வண்ணத்திலும் அதே போன்ற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஒரு ஓவியம் சிவப்பு வண்ணத்திலும், அதன்மேல் பிற்காலத்தில் வெள்ளை வண்ணத்திலும் ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதனால் சிவப்பு வண்ண ஓவியம் தெளிவாக இல்லை. மற்றொரு இடத்தில் பால் உணர்வைத் தூண்டும் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன.
மலையின் மற்றொரு பகுதியில் 150க்கும் மேற்பட்டக் கல்திட்டைகள் காணப்படுகின்றன. இக்கல்திட்டையின் உட்பகுதியிலும் ஓவியங்கள் உள்ளன. இவ்வோவியங்கள் முழுவதிலும் வெள்ளை வண்ணம் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. விலங்குகளின் மேல் அமர்ந்துள்ள மனித உருவங்கள், உடுக்கையைப் போன்ற உருவங்கள் பலஇடங்களில் இடம் பெற்றுள்ளன. கல்திட்டைகளிலுள்ள மனித உருவ அமைப்பிற்கும் பாறை ஓவியங்களில் உள்ள உருவ அமைப்பிற்கும் ஒற்றுமையுள்ளன. எனவே பாறையிலும், கல்திட்டைகளிலும் காணப்படுகின்ற வெள்ளை வண்ண ஓவியங்கள் ஒரே காலத்தைச் சார்ந்தவைகளாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால் சிவப்பு வண்ண ஓவியங்கள் காலத்தால் முற்பட்டவை. மிருகங்கள் சிவப்பு வண்ணத்தில் வரையப்பட்டுள்ளன. எனவே இவை காலத்தால் முற்பட்டவை.
ஒப்பதவாடி
கிருட்டிணகிரி மாவட்டத்தில், பருகூருக்கு அருகில் ஒப்பதவாடி என்ற ஊர் அமைந்துள்ளது. இந்த ஊரின் அருகிலுள்ள பாறையில் ஐந்து இடங்களில் தொல்பழங்கால பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. மிருகங்களின் மேல் அமர்ந்துள்ள மனிதர்களின் உருவங்கள் நான்கு இடங்களில் வரையப்பட்டுள்ளன.
தனித் தனியாக உள்ள உருவங்கள் ஒன்பதிற்கும் மேல்பட்ட இடங்களில் உள்ளன. சதுரக் கட்டங்களின் உட்பகுதியில் மனிதர்களைக் காட்டுகின்ற முறையும் இங்கு உள்ளது. குறியீடுகளும், இரண்டு வீரர்கள் சண்டை செய்யும் காட்சிகளும் சில இடங்களில் இடம் பெற்றுள்ளன. சண்டை செய்கின்ற போர் வீரர்களின் கைகளில் கத்தி, வில் போன்ற ஆயுதங்களும் வட்டவடிவில் உள்ள கேடயமும் காட்டப்பட்டுள்ளன. இவை மூதாதையர்களின் ஓவியங்களைாக
இருக்கலாம்.(நூலிலிருந்து)
தமிழகப் பாறை ஓவியங்கள் காட்டும் சமுதாயமும் வழிபாடும்- முனைவர் தி. சுப்பிரமணியன்
விலை: 160/-
வெளியீடு: கௌரா பதிப்பகம்,
Buy this book online: https://www.heritager.in/product/tamilaga-paarai-oviyangal-kaattum-samuthayamum-vazhipaadum/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers