Team Heritager March 31, 2025 0

பல சொற்களால் அணிகள் என அழைக்கப்பட்ட பெயர்கள்

பல சொற்களால் அணிகள் என அழைக்கப்பட்ட பெயர்கள் :
அணி, பூண், இழை, கலம், தொடி, குழை, வளை போன் பல சொற்களால் அணிகள் அழைக்கப்பட்டன. இவை அனைத்தும் காரணப்பெயர்கள்தான். பொதுவாகத் தொடக்க காலத்தில் கழுத்தில் அணிவது அணி என்ற பெயரைப்பெற்றது. பூணப்படுவது பூண், கைகளில் செறிவாக அணிந்த நகைகளைப் பூண் என்பர். இழை என்பது இழைத்துச் செய்யப்படுவது. அணியிழை, ஒளியிழை, இலங்கிழை, சேயிழை, பாசிழை, மாணிழை, ஆயிழை போன்ற இழை அணிகள் சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ளன. அதுபோன்றே ஒண்டொடி, ஆய்தொடி, செறிதொடி, பைந்தொடி, எனத் தொடியிலும் பலவகைகள் இருந்தன.
தொடி என்பது முன்கைகளிலும், தோளருகிலும் தொட்டுக்கொண்டு இருப்பது எனலாம். மகரக்குழை, பொலங்குழை, ஒண்குழை,பூங்குழை, வார்குழை, சிறுகுழை போன்ற குழை அணிகள் இருந்தன. குழை என்பது தளிரிலிருந்து உருவான பெயர். இது காதணியைக்குறிக்கிறது. வளை என்பது வளைந்த அணி, சங்கு, ஆமை ஓடு, வெள்ளி முதலியவற்றைக்கொண்டு வளைகள் செய்யப்பட்டன . பின்னர் இது பொன்னாலும் செய்யப்பட்டது. தொல்காப்பியர் பெரும் நிலப்பரப்பை ஆளும் மன்னர்கள் தலையில் முடி என்ற அணியை அணிந்தனர் எனக் கூறுகிறார். தமிழ் அரசன் பாசறையிலும், இரவு நேரத்திலும் முடி சூடி இருந்தான். முருகக்கடவுள் முடி அணிந்திருந்தான் என திருமுருகாற்றுப்படை கூறுகிறது.”
தொடி, வளை, குழை, தலையணி:
திருமுருகாற்றுப்படை சேர மகளிர் தலைக்கோலம் அணிந்திருந்ததாகக் கூறுகிறது. பொன்னாலான தலையணிகள், சுரிதம் என்னும் தலையணி ஆகியவற்றை மகளிர் அணிந்தனர் என தொகைநூல்கள் கூறுகின்றன. முருகப்பெருமான் பொலங்குழையும், விறலி பூங்குழையும், இடைமகள் சிறுகுழையும் காதில் அணிந்திருந்தனர். மருதநிலத்துப் பெண்களின் காதுகளில் பொலங்குழை பொலிவுற்று விளங்கின. செல்வ மகளிர் காதுகளில் ஒண்குழை அணிந்தனர். பாண்டியநாட்டு அரசி வார்குழை அணிந்தாள். பூத்தொழில் அமைந்த குழைகள், கனங்குழை, பொலங்குழை, பூக்குழை, மகரக்குழை, வரிக்குழை போன்ற காதணிகள் சங்க நூல்களில் குறிப்பிடப்படுகின்றனஆண்களைப் போலவே பெண்களும் தொடியணி அணிந்தனர். விறலியர் தன் முன்கையில் தொடி அணிந்தனர். இந்தத்தொடி வளையல்களுக்கு முன்னால் அணியப்படும். மகளிரைப்போலவே பேய்மகளும் தொடி அணிவதாக திருமுருகாற்றுப்படை கூறுகிறது. செல்வக்குடும்பத்துச் சிறுமியர் குறுந்தொடி அணிந்தனர். அரசரின் பாசறைப் பணிப்பெண்கள் தங்கள் முன்கையில் குறுந்தொடி அணிந்தனர். விறலியர்க்குக் குறுந்தொடி பரிசாக வழங்கப்பட்டது.
அரச மகளிர் ஆய்தொடி அணிந்தனர். வளமான மகளிர் பூந்தொடி அணிந்தனர். மன்னனிடம் பரிசு பெற்ற விறலியர் செறிதொடி அணிந்தனர். பரத்தையர் அழகான திரண்ட விளக்கமுடைய தொடி அணிந்தனர். எனவே சங்க கால மகளிர் குறுந்தொடி,அவிர்தொடி, ஆய்தொடி, பூந்தொடி, செறிதொடி எனப் பலவகைத் தொடிகளை அணிந்தனர். செல்வ மகளிர் ‘வந்திகை ‘ என்ற ஒருவகை அணியை அணிந்தனர். அது இன்றைய வங்கி என்ற அணியாக இருக்கலாம். பாண்டிய தேவி வளம்புரிவளை அணிந்தாள். வளம்புரிச்சங்கால் அறுத்துச்செய்யப்படும் வளைதான் வளம்புரிவளை என நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார். பொதுவாக அன்றைய பெண்கள் பலவகையான வளையல்களைக் கைகளில் அணிந்தனர். ஆண்கள் தம் வீரத்திற்கு அடையாளமாக தொடி அணிவதுண்டு. ஆண்கள் தொடியைத்தோளில் அணிவர். அதனால்தான் முருகன் தொடியணித்தோளன் எனப்படுகிறான். ஆண்கள் கழல்தொடியும் அணிவர். இந்தக் கழல்தொடி காலில் அணிவதாக இருக்கலாம். அன்று சிறுவர்களும் தொடி அணிந்தனர். அன்று ஆண்கள் கையில் கடகம் என்ற அணியையும் அணிவர். போர்க்களம் சென்ற அரசன் கையில் கடகத்தை அணிந்திருந்ததாக சங்க இலக்கியம் கூறுகிறது.”
பழந்தமிழர் வணிகம் – கணியன்பாலன்
₹365
Category: