பெருங்கற்காலத் தோற்றமும் காலமும் :
சுமார் 150 ஆண்டுகளாகப் பெருங்கற்காலம் பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றது. ஆனால் இதுவரை பெருங்கற்காலத்தின் தோற்றம் பற்றிய ஒரு முடிவான முடிவு எட்டப்படவில்லை. பல ஆய்வாளர்கள் பல்வேறுபட்ட காலங்களைக் கூறுகின்றனர். இத்தகைய நிலை ஏற்பட்டதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம்.
1. பெருங்கற்காலம்பற்றித் தெரிந்துகொள்ள உதவும் இலக்கியச் சான்றுகள் குறைவு. இறந்தவர்களை எவ்வாறு அடக்கம் செய்தனர் என்பன பற்றிப் போதுமான விளக்கங்கள் இல்லை. ஒரு சில விவரங்கள் மட்டும் கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டு காலம், அமைப்பு போன்றவற்றை இறுதியாகக் கூற இயலவில்லை. உதாரணமாக மணிமேகலையில் அடக்கம் செய்யும் முறைகள் பற்றிய பாடல் ஒன்றுள்ளது. ஆனால் இந்த இலக்கியத்தின் காலம் பற்றிய கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதைப் போன்று வடஇந்தியாவில் பெருங்கற்காலச் சின்னங்கள் பற்றிய குறிப்புகள் வேதங்களில் காணப்படுகின்றன. அந்த வேதங்களின் காலம் பற்றிய கருத்து வேறுபாடுகள் பல ஆய்வாளர் களிடையே உள்ளன. இதனால் இலக்கியச் சான்றுகள் பெருங்கற்காலக் காலக் கணிப்பிற்கு உதவுவதில்லை.
இரண்டாவது காரணம் பெருங்கற்காலச் சின்னங்களில் சில வகைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு சின்னத்திலும் சில வேறுபாடுகள் உள்ளன. அச்சின்னங்கள் தோற்றம் பற்றிய விவரங்கள் அத்தகைய சின்னங்களில் குறைந்தஅளவில் கிடைக்கின்றன. மேலும் ஈமச்சின்னங்கள் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் உருவாக்கப்படவில்லை. இறந்தவர்களின் உடலை வெளியில் விட்டுவிட்டு பின்னர் பல நாட்கள் கழித்து எலும்பைச் சேகரித்து ஈமச்சின்னத்தில் வைத்துப் புதைத்துள்ளனர். இத்தகைய செயலால் ஈமச்சின்னம் பல நாட்கள் அல்லது மாதங்கள் கழித்து உருவாக்கப்பட்டுள்ளன. இதுவும் இக்காலக் கணிப்பிற்கு உதவவில்லை. இதனால் ஆய்வாளர்கள் தங்களின் அகழாய்வில் கிடைக்கின்ற தொல்பொருட்களின் அடிப்படையிலும் அமைப்பு முறையையும் உதவியாகக் கொண்டு காலம் கூறுகின்றனர். இவை ஒவ்வொரு பதிலும் பல வேறுபாடு களுடன் காணப்படுகின்றன.
பெருங்கற்காலக் காலக்கணிப்பிற்கு மட்கலங்கள். தொல்பொருட்கள், நினைவுச் சின்னங்களின் அமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு காலநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளை வண்ணம் தீட்டப்பட்ட செங்காவி மட்கலங்கள் (Russet Coated Ware) காவேரி ஆற்றுப் படுகையில் கறுப்பு சிவப்பு மட்கலங்களுடன் கிடைக்கின்றன. திருக்காம்புலியூர் அகழாய்வில் கறுப்பு சிவப்பு மட்கலங்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. இதனால் இவை இரண்டும் இப்பகுதியில் கிடைக்கின்ற பழமையான மட்கலங்கள். ஆனால் கர்நாடகாவில் காவேரியின் மேல்பகுதியில் வரலாற்றுக் காலத்தில் கறுப்பு சிவப்பு மட்கலங்களும் வெள்ளை வண்ணம் தீட்டப்பட்ட செங்காவி மட்கலங்களும் இணைந்து காணப்படுகின்றன. எனவே குருராஜராவ் காவேரிக்கரையின் பகுதியில் மட்கலங்களுக்கு கி. மு. 400 என்று காலம் கூறுகின்றார். திருக்காம்புலியூர் அகழாய்வில் வெள்ளை வண்ணம் தீட்டப்பட்ட செங்காவி மட்கலங்களும், கருப்பு சிவப்பு மட்கலங்களும் கீழ்ப்பகுதியிலுள்ள மண் அடுக்கில் கிடைத்துள்ளன. பேரூர் அகழாய்வில் வெள்ளை வண்ணம் தீட்டப்பட்ட மட்கலங்களுக்கு முன்னர் கறுப்பு சிவப்பு மட்கலங்கள் கிடைக்கின்றன என்று அகழாய்வாளர் கூறுகின்றார். எனவே குருராஜராவ் அவர்களின் கருத்து கேள்விக்குறியாக உள்ளது. மேலும் பேரூரில் கிடைத்தமட்கலங்கள் T. நரசிபூரில் கிடைத்த கறுப்பு சிவப்பு மட்கலங்களுடன் ஒப்பிடத்தக்கதாக உள்ளன என்ற கருத்தும் மாணப்படுகின்றது. எனவே குருராஜராவின் கருத்து ஏற்புடையதாக இல்லை.
கே.பி.ராவ் என்பவர் மகாராட்டிரம் பகுதியில் பெருங் கற்கால மக்கள் முதலில் இருந்தனர் என்றும் அங்கிருந்து ஆந்திர மாநிலத்திற்குப் பரவினர் என்றும் கூறுகின்றார். அப்பகுதியிலுள்ள நெய்குண்டு என்ற இடத்தில் பெருங் கற்கால மண் அடுக்கில் கரிமம் 14 காலக் கணக்கீடு முறைக்கு அனுப்பப்பட்டு அதன் காலம் கிடைத்துள்ளது. இங்கு கரிமம் 14 காலக் கணிப்பின்படி இதன் காலம் கி. மு. 690 +/- 110 என்று கணக்கிடப்பட்டுள்ளது. பெருங்கற்கால ஈமச்சின்னங் களின் அமைப்பு முறைகள் மற்றும் தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் இப்பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்குப் பரவியது என்று கருதுகின்றார். ஆந்திர மாநிலத்தில் பெருங்கற்காலம் கி.மு.600க்கும் கி. மு. 200க்கும் இடைப்பட்ட காலம் என்று கூறுகின்றார். ஆனால் கர்நாடகப் பகுதியில் பெருங்கற்காலம் கி. மு. 1000 என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கி. மு. 1000 என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் காலம் தெரிந்த ஆதாரங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் செய்யப்பட்ட அகழாய்வுகளில் காசுகள் கிடைத்துள்ளன. இவை பெருங்கற்காலக் காலக்கணிப்பிற்கு உதவியாக உள்ளன.
எலியட் என்பவர் கி.பி. 1807இல் ரோமானிய காசுகளும், அச்சுகுத்தப்பட்ட காசுகளும் சவுடிபாளையம் என்ற இடத்தில் கண்டெடுத்தார். கோவை மாவட்டத்தில் பல்லடம் வட்டத்தில் பல்லடத்திலிருந்து சுமார் 10 கி. மீ. தூரத்தில் இந்த ஊர் உள்ளது. கோவை மாவட்ட கலெக்டர் கேரோ (Garoah) என்பவர் கோவைப் பகுதியில் பாண்டுகுழி என்ற பெருங் கற்கால ஈமச்சின்னத்தில் வெள்ளி அச்சுருத்தப்பட்ட நாணயங்களைக் கண்டெடுத்தார். இக்காசுகள் கி. மு.3-2ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தியவை என்று இக்காசுகளை ஆய்வு செய்த ஆலன் (Allen) என்பவர் குறிப்பிடுகின்றார்.
ராபட் சீவல் கோவைப் பகுதியில் ரோமநாட்டு மன்னன் அகஸ்டசின் காசுகள் (கி. மு. 19 – கி. பி. 14) பெருங்கற்காலச் சின்னங்களில் சேகரித்துள்ளார். கோவைக்கு அருகிலுள்ள சூலூரில் உடைந்த நிலையில் துருக்கியைச் சார்ந்த ஏயன் (Ayen) என்ற செப்புக்காசு ஒன்று பெருங்கற்கால ஈமச் சின்னத்தின் கீழ்க் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இக்காசை ஆய்வு செய்த ஆலன் என்பவர் இக்காசு கி.மு.3-2ஆம் நூற்றாண்டு களுக்கு இடைப்பட்டவை என்று கருத்து தெரிவித்துள்ளார். அவ்ரி (Avrei) எனப்படும் தங்கக்காசு ஒன்றும் ஜூலியஸ் சீசர் காலத்தியது ஒன்றும் (கி. மு. 44) இதனுடன் சில ரோம நாட்டின் காசுகளும் நீலகிரி மலைப் பகுதியிலுள்ள கல்வட்டங்களில் கிடைத்துள்ளன. சந்தரவள்ளி அகழாய்வில் டைபீரியசின் டினாரஸ் (Dinarius) காசு ஒன்று கி.பி. 14-37க்கு இடைப்பட்டது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி பகுதியில் காசுகள் பெருங்கற்கால ஈமச்சின்னங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளில் காசுகள் கிடைக்கவில்லை. கோவை, நீலகிரி மலை போன்ற இடங்களில் உள்ள பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காலத்தால் பிற்பட்டவை என்ற கருத்து ஒன்றும் உள்ளது. இங்குள்ள ஈமச்சின்னங்கள் வளர்ச்சி யடைந்த நிலையைச் சேர்ந்தவை.எனவே இதன் காலம் கி. மு. 500 என்று கூறலாம்.
ஆந்திர மாநிலத்திலுள்ள குண்டூர் வட்டத்தில் அமராவதி என்ற இடத்திலுள்ள புத்தமத ஸ்தூபி ஒன்று பெருங்கற்கால ஈமச்சின்ன வகையைச் சார்ந்த தாழி ஈமச் சின்னங்களின் மேல் கட்டப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஸ்தூபியைவிட மேலகூறப்பட்ட ஸ்தூபி பழமையானது. ஆனால் இதன் அருகில் அதே காலத்தில் கட்டப்பட்ட மகாசைத்தியா காலத்தைச் சார்ந்தது (கி.மு.200) . இதனால் அமராவதியிலுள்ள தாழி வகையைச் சார்ந்த பெருங் கற்காலச் சின்னம் கி. மு. 200க்கு முற்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்தூபியைக் கட்டியவர்களுக்கு இங்கிருந்த தாழிவகை ஈமச்சின்னம் இருந்தது தெரியவில்லை என்பது தெரிகின்றது.கர்நாடகப் பகுதியிலுள்ள பெருங்கற்காலச் சின்னங்களைப் பற்றி ஆய்வு செய்த ஏ. சுந்தரா என்பவர் கீழ்க்கண்டவாறு தன்னுடைய கருத்தைத் தெரிவிக்கின்றார்.
கர்நாடக மாவட்டத்திலுள்ள கோனூர் என்ற இடத்தில் உள்ள ஈமச்சின்னம் நீண்ட செவ்வக வடிவிலும் தெற்கில் வாயிலுடனும் காணப்படுகின்றது. தெற்குப்பக்கம் தவிர மற்ற பக்கங்களில் இயற்கையாகக் கிடைத்த கற்களை வைத்தும் தெற்குப்பக்கம் மட்டும் இடைவெளி விட்டு இரண்டு கற்களை வைத்துக் கல்லறை அமைக்கப்பட்டுள்ளது. தெற்குப்பக்கமுள்ள இடைவெளி இடுதுளையைப் போன்ற அமைப்புடன் உள்ளது. இவற்றை ஒரு மூடுகல் கொண்டு மூடப்பட்டுள்ளது. கல்லறையைச் சுற்றிலும் வட்டவடிவில் கல்வட்டம் உள்ளது. இவற்றின் இடைப்பட்ட பகுதி சிறிய கற்களைக் கொண்டு மூடப்பட்டுள்ளது.
கல்லடக்கி என்ற மற்றொரு இடத்தில் உள்ள ஈமச் சின்னம் எட்டுப் பக்கங்களைக் கொண்டது. இதன் முன்னர் சிறிய வாயில் பகுதி ஒன்று கல்லறையைவிட சிறிய அளவில் காணப்படுகின்றது. இதைச் சுற்றிலும் கல்வட்டம் ஒன்று அல்லது இரண்டு ஒன்றையடுத்து ஒன்று உள்ளன. கற்குவியல் இக்கல்லறையின் மேல் மூடப்பட்டுள்ளன. கல்லறை குறிப்பிட்ட திசையில் இருக்க வேண்டும் என்ற முறை இல்லாததாகக் காணப்படுகின்றன. எனவே கோனூர், கல்லடக்கி ஆகிய இரண்டு ஈமச்சின்னங்களைப் போன்று வேறு எந்தப் பகுதியிலும் இல்லை என்று கருதுகின்றார். இதனால் கோனூரின் காலம் கி. மு. 1200க்கும் கி. மு. 700க்கும் இடைப்பட்ட காலம் என்றும் கல்லடக்கியின் காலம் கி. மு. 900க்கும் கி.மு.700க்கும் இடைப்பட்ட காலம் என்றும் கூறுகின்றார். இந்த வகை ஈமச்சின்னங்கள் கி. மு. 700க்குப் பின்னர் இல்லை என்றும் கூறுகின்றார்.
இதனுடைய வளர்ச்சி நிலைகளாக அய்யவழி, ராஜன் கோனூர் ஆகியவற்றைக் கூறுகின்றார். இவை இரண்டும் வளர்ச்சியடைந்த நிலையில் உள்ளன. கல்லறை, இடுதுளை, அதன் முன்னர் வாயில், கல்வட்டம் ஆகியன ஒன்றின்முன் ஒன்றுள்ளன என்றும் இதன் காலம் கி. மு. 800-600க்குஇடைப்பட்ட காலம் என்றும் கருதுகின்றார். இந்தப் பெருங் கற்காலச் சின்னங்கள் மேலும் வளர்ந்து ஆந்திர மாநிலத்திலும் மற்றும் தமிழ்நாட்டின் உட்பகுதியிலும் பரவியது என்று கருதுகின்றார்.
மேற்கண்டவற்றின் அடிப்படையில் பி. நரசிம்மையா அவர்கள் பெருங்கற்காலச் சின்னங்கள் இரண்டு வழியாக தமிழகத்தின் உட்பகுதியில் பரவியது என்று கூறுகின்றார். கர்நாடகாவின் வடபகுதியிலிருந்து கிழக்குப் பகுதியில் வளர்ந்து கோலார் மற்றும் ஆந்திரத்தில் சித்தூர் பகுதிகள் வரை பரவியது. அங்கிருந்து தருமபுரி, வட ஆர்க்காடு ஆகிய மாவட்டங்களுக்கு முதலில் வந்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்குப் பரவியது. இப்பகுதியில் கல்வட்டம், கல்திட்டை, இரட்டை அறைகளைக் கொண்ட கல்லறைகள் போன்றன காணப்படுகின்றன. இப்பகுதியில் வட்டவடிவ இடுதுளையும், ‘U’ வடிவ இடுதுளைகளைக் கொண்ட கல்லறைகளும் காணப்படுகின்றன.
பிரம்மகிரியிலிருந்து பரவிய மற்றொரு பெருங்கற்கால மக்கள் கொள்ளேகால் வரை பரவியிருந்தனர். இவர்களே திம்பம் வழியாக கோயம்புத்தூர் பகுதியில் பரவினர். இப்பகுதியிலிருந்து வளர்ச்சியடைந்த நிலை திருச்சி, புதுக்கோட்டை, மதுரை பகுதிகளில் காணப்படுகின்றன. கோவை, ஈரோடு பகுதிகளில் உள்ள பெருங்கற்காலச் சின்னங்களில் கல்லறை, இடுதுளை, வாயில்பகுதி, இரட்டைக் கல்வட்டங்கள், தாங்கு சுவர்கள் போன்றன காணப்படுகின்றன. இதனுடைய வளர்ச்சி நிலையாக புதுக்கோட்டை, சித்தன்னவாசல், பழனி போன்ற பகுதிகளில் அடுக்குநிலைக் கல்லறைகள், உயரமான கல்வட்டங்கள் போன்றன காணப்படுகின்றன.
தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் தாழி வகையைச் சார்ந்த பெருங்கல் சின்னங்கள் உள்ளன. தாழி வகையைச் சார்ந்த பெருங்கல் சின்னங்களின் மேல் பகுதியில் கற்குவையோ, கல்திட்டையோ இன்றி உள்ளன என்று முன்னர் கூறப்பட்டது. தாழிகள் புதைத்த இடங்களைத்தெரிந்து கொள்வது கடினம். இந்த வகையைச் சார்ந்த தாழிகள் கி.மு. 300இல் இருந்தன என்று முதலில் கூறப்பட்டது. தாழி வகையைச் சார்ந்த சின்னங்கள் வளர்ந்து தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்குப் பரவியது. இதனால் கற்குவையின் உட்பகுதியில் தாழியை வைத்துப் புதைத்தனர். மேலும் வளர்ச்சியடைந்து கல்வட்டம், கல்பதுக்கை போன்றவற்றிலும் கிடைக்கின்றன. எனவே கிழக்குக் கடற்கரை யிலிருந்த தாழி வகையைச் சார்ந்த சின்னங்கள் வளர்ந்து மேற்கில் சென்று அங்கிருந்த ஈமச்சின்னங்களின் தனி இயல்புகளுடன் இணைந்துள்ளது. எனவே தமிழகத்தின் பல பகுதிகளில் தாழியுடன் கூடிய கல்வட்டங்கள் கல்பதுக்கைகள் போன்றன வடஆர்க்காடு, தென் ஆர்க்காடு, திருச்சி வரை காணப்படுகின்றன.
ஆதிச்சநல்லூர் பகுதியிலிருந்த தாழி வகையைச் சார்ந்தவை மதுரை, புதுக்கோட்டை வரை பரவியது. இப் பகுதியிலிருந்த பெருங்கற்காலச் சின்னங்களுடன் இணைந்து இவை காணப்படுகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் சில வேறுபாடுகளுடன் உள்ளன. இது அப்பகுதியின் இயற்கை அமைப்பு, இயற்கையாகக் கிடைக்கின்ற பொருட்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டன. கொற்கை அகழாய்வில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த அகழாய்வின் காலம் பற்றி விவரங்கள் காணப் படுகின்றன. பெருங்கற்காலம், அதைத் தொடர்ந்து வரலாற்றுக் காலத்தின் தொடக்ககாலம் ஆகியன குறிப்பிடப்பட வேண்டியன. இங்குக் கிடைத்த கரிமம் 14ன் காலக் கணிப்பிற்கு அனுப்பப்பட்டது. இது கி.மு.800ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று காலம் கூறப்பட்டுள்ளது. எனவே கி.பி.8ஆம் நூற்றாண்டில் பெருங்கற்கால மக்கள் வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தனர் என்பது தெரியவருகின்றது.
தாழி வகையைப் பயன்படுத்திய பெருங்கற்கால மக்களின் ஈமச்சின்னங்கள் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்குப் பரவியது என்பது தெளிவு. கரிமம் 14 காலக் கணிப்பின்படி கி.மு. 800 இல் வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தனர் என்பதும் தெரியவருகின்றது. எனவே இப்பகுதியில்தாழியைப் பயன்படுத்திய மக்கள் கி. மு. 1000க்கு முன்பிருந்து வாழ்ந்தனர் என்று கூறலாம். தாண்டிக்குடியில் அகழாய்வு செய்ததில் இரும்பைப் பயன்படுத்திய பெருங்கற்கால மக்களும், இரும்பின் பயன் தெரியாத பெருங்கற்கால மக்களும் இருந்தனர் என்பது தெரியவருகின்றது. இதனால் தமிழகத்தில் இரும்பின் பயன் தெரியாத மக்களுக்கும் ஈமச்சின்னம் எடுக்கும் வழக்கம் அல்லது முறையைக் கொண்டிருந்தனர் என்றும் பிற்காலத்தில் வந்து குடியேறிய மக்களுடன் இணைந்து அந்த மக்களிடம் இருந்த உயர்ந்த பண்புகளை இவர்களும் ஏற்றுக்கொண்டனர் என்றும் கூறலாம்.
மற்ற பெருங்கற்காலச் சின்னங்களின் அமைப்பைக் கொண்டும் கர்நாடகாவிலிருந்து வந்தது என்ற கருத்தைக் கொண்டும் பி. நரசிம்மையா கீழ்க்கண்டவாறு காலம் கணக்கிடுகின்றார்.
1. வடமேற்குப் பகுதியில் – கி. மு. 500- கி.மு.450.
2. வடகிழக்குப் பகுதியில் – கி. மு. 350 – கி.மு.300.
3.கோவை, திருச்சிப் பகுதி – கி. மு. 300 – கி.மு.250.
(நூலிலிருந்து)
தமிழகத்தில் பெருங்கற்காலப் பண்பாடு – முனைவர். தி.சுப்பிரமணியன்
விலை: 180/-
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Buy this book online: https://www.heritager.in/product/tamilagaththil-perungarkaala-panbaadu/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers