ஜேஷ்டா தேவி என்பவர் இந்து சமய பெண் தெய்வங்களுள் ஒருவராவார். இவருக்கு தவ்வை, மூதேவி , அலட்சுமி போன்ற பெயர்களும் உண்டு. இவர் விஷ்ணுவின் மனைவியான லட்சுமிதேவியின் மூத்த சகோதரியும் ஆவார். இந்துத் தொன்மவியல்படி,பாற்கடலைக் கடைந்த போது ஜேஷ்டா தேவி தோன்றியதாகக் கூறப்படுகிறது. அவரது தங்கை லட்சுமி அமிர்தம் தோன்றும் முன்பு தோன்றியதாகக் கூறப்படுகிறது.
பல்லவர்களின் ஆட்சிக் காலமான 8ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் தெய்வமாக தவ்வை வழிபடப்பட்டுள்ளார். பல்லவர்கள் அமைத்த கோயில்களில் தவ்வைக்குச் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றுள்ளது. நந்திவர்ம பல்லவன் தவ்வையைக் குலதெய்வமாக வழிபாடு செய்துள்ளார். பல்லவர்கள் காலத்திற்குப் பிறகு பிற்காலச் சோழர்களின் காலத்திலும் தவ்வை வழிபாடு இருந்துள்ளது.