Description
இந்தியத் துணைக்கண்டத்தின் பூர்வகுடிகளான திராவிடர்களின் தொன்மை வரலாறு எது? குமரி முதல் பலுசிஸ்தான் வரை பரவியிருந்த இந்த இனக்குழுவின் மூலத்தையும், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பன்னிரண்டுக்கும் மேற்பட்ட திராவிட மொழிகளின் ஆழத்தையும் ஆராயும் அரிய நூல் இது. நாகர்கள், தமிழர்கள், ஆதிகுடிகள் ஆகியோரின் கலப்பால் உருவான திராவிடப் பெருங்குடி வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களைப் புரட்டுவோம்.
ஆதிதிராவிடர் பூர்வசரித்திரம் என்ற நூலை 1920ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட திரு டி.கோபால் செட்டியார் 1867ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் நாள் பிறந்தவர். ஆதிதிராவிட மக்களின் மேம்பாட்டிற்காகப் பாடுபட்ட முன்னோடிகளில் ஒருவர். இந்தோ ஸ்வீடன் சால்வேஷன் ஆர்மியின் தலைவராக 1923ஆம் ஆண்டு பொறுப்பேற்று காட்பாடி, அரக்கோணம், தர்மபுரி முதலான பகுதிகளில் பணியாற்றியவர். ஜார்ஜ் மன்னரை லண்டனில் சென்று சந்தித்தவர். அவர் ஆசிரியராக இருந்து நடத்திய நியூ ரிஃபார்மர் பத்திரிக்கை 15, வெங்கடராயன் சந்து, பார்க் டவுன், சென்னை என்ற முகவரியிலிருந்து வெளியாகியிருக்கிறது. நியூ ரிஃபார்மர் என்ற ஆங்கில பத்திரிகையின் ஆசிரியராக இருந்ததோடு ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்களை எழுதியவர்.