Description
பெரும்பாலான ஹிந்து தெய்வங்கள் ஆயுதங்கள் தாங்கிக் காட்சி அளிப்பது ஏன் என்ற கேள்விக்கு மானுடவியல், இலக்கியம், பண்பாடு, வரலாறு, மெய்யியல், சமயம் சார்ந்த விளக்கங்களுடன் இந்நூலை எழுதி இருக்கிறார் நூலாசிரியர். அழிக்கும் போர்க் கருவிகளாக மட்டும் கருதாமல், தெய்வங்களின் பண்புகளை வெளிப்படுத்தும் சின்னங்களாக ஆயுதங்களைக் காண வேண்டும் என்பதே இவரது கருத்து. பெளத்த, சீக்கிய மதங்களிலும், நாட்டார் மரபுகளிலும் காணப்படும் கடவுளர்களின் ஆயுதங்கள் குறித்தும் நூலாசிரியர் விளக்கி இருக்கிறார். இதிகாச காலத் தெய்வங்கள் வில்லினை பிரதான ஆயுதமாகக் கொண்டிருப்பதும், கிராம தெய்வங்கள் வாளைப் பிரதான ஆயுதமாகக் கொண்டிருப்பதும் ஏன் என்ற விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மனிதனின் தேவைக்காக உருவாக்கப்பட்டதே கடவுள் என்ற மானுடவியலாளர்களின் கருத்தைச் சார்ந்து, அதற்கேற்ப கடவுளர்களின் ஆயுதங்களையும் அவனே படைத்துக் கொண்டான் என்ற விளக்கமும், வேதகாலத்தில் வழிபடப்பட்ட கடவுளர்கள் எவ்வாறு புராணகாலத்தில் ஹிந்து சமயத்தின் பிரதானக் கடவுளர்களின் துணை அம்சமாக மாறினர் என்ற விளக்கமும் ஏற்கும்படியாக உள்ளது. சிந்து சமவெளி நாகரிகத்தில் வழிபடப்பட்ட கடவுளர்களிடம் ஆயுதங்களைக் காண முடியவில்லை என்ற கருத்தும், அதற்கு ஆசிரியர் கூறும் காரணமும் புதிய கோணங்கள். கடவுளர்களின் பண்புநலன்கள், விஷ்ணு, பிரம்மா, சிவன், சக்தி, கணபதி, முருகன் ஆகிய கடவுளர்களின் ஆயுத விவரங்கள் என, இச்சிறிய நூலில் விரிவான தகவல்கள் விரவிக் கிடக்கின்றன.