Team Heritager September 8, 2025 0

டிராகுலா எனும் வரலாற்றுக்கு கற்பனை

19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிராம் ஸ்டோக்கரின் ‘டிராகுலா’ நாவல் வெளியானது. இன்றும் அதைப் புரட்டினால் டிரான்ஸில்வேனியாவின் அடர்ந்த காடுகளுக்குள் இழுத்துச் சென்றுவிடும் சக்தி அந்தப் புத்தகத்திற்கு உண்டு. பிரான்சிஸ் ஃபோர்ட் கப்போலாவின் திரைப்படத்தைப் பார்த்தபோது, சிறுவயதில் என்னைத் தூங்கவிடாமல் பயமுறுத்திய ஒரு கனவு மீண்டும் என்னைத் தேடி வந்ததைப் போல உணர்ந்தேன்.

டிராகுலாவின் வெற்றிக்கு அதன் தனித்துவமான கட்டமைப்பு ஒரு முக்கியக் காரணம் என்று ‘தி நியூ யார்க்கர்’ கட்டுரை கூறுகிறது. கவுண்ட் டிராகுலா ஒரு கற்பனைக் கதாபாத்திரம் அல்ல; உண்மையில் வாழ்ந்தவர்தான் என்று வாசகர்களை நம்பவைக்கும் வகையில், டைரிக் குறிப்புகள், ஆவணங்கள், கடிதங்கள், தந்திகள், செய்தித்தாள் துணுக்குகள், வாக்குமூலங்கள் எனப் பலவற்றை ஒன்றிணைத்து ஸ்டோக்கர் நாவலை உருவாக்கியிருப்பார். டிராகுலாவின் நிழல்போல, கதை பல்வேறு கோணங்களிலும் திசைகளிலும் விரிந்து செல்லும்.

ஸ்டோக்கருக்கு முன்பே ரத்தக்காட்டேரி பற்றிய கதைகள் இருந்தன. 17-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மேற்கு ஐரோப்பாவில், குறிப்பாக ஜெர்மனியில் ரத்தக்காட்டேரிகளின் அச்சம் உச்சத்தில் இருந்திருக்கிறது. ரத்தக்காட்டேரியைக் கொல்ல மூன்று வழிகள் இருந்தன: அதன் இதயத்தில் மரக்கழியைச் செருகுவது, தலையைத் துண்டிப்பது, அல்லது எரிப்பது. இந்த மூன்றையும் சேர்ந்தும் செய்யலாம். “நேற்று இரவு எங்கள் வீட்டுக்கு வந்து அட்டகாசம் செய்தது,” முதல், “எங்கள் குதிரைகளைக் கடுமையாக அச்சுறுத்திவிட்டது” என்பது வரை பல குற்றச்சாட்டுகள் காட்டேரிகள் மீது சுமத்தப்பட்டன.

ரத்தக்காட்டேரிகளின் தோற்றம் குறித்துப் பலரும் ஆராய்ந்துள்ளனர். செர்பிய ஜிப்சி மக்களிடையே நிலவிய ஒரு நம்பிக்கை சுவாரசியமானது. பறிக்கப்பட்ட பூசணிக்காய்களைப் பத்து நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் வைத்திருந்தால், அவை சத்தத்துடன் குலுங்கி குதித்து, பிறகு ரத்தக்காட்டேரியாக மாறிவிடும் என்று நம்பியிருக்கிறார்கள்.

பிராம் ஸ்டோக்கர் இந்த கிராமப்புற நம்பிக்கைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, கோட் சூட் அணிந்த ஒரு நவநாகரிக மனிதனாக டிராகுலாவை வடிவமைத்தார். டிராகுலாவின் அழகில் மயங்கி, “இந்தா ரத்தம்” என்று தங்கள் கழுத்தை நீட்டும் பெண்களை அவர் சித்தரித்திருப்பார்.

டிராகுலா ஒருபுறம் அமைதியாக ரத்தம் குடித்துக்கொண்டிருக்க, மறுபுறம் மருத்துவர், டிராகுலாவை வேட்டையாட வந்தவர், காதலர் என நாவல் முழுவதும் யாராவது யாருக்காவது ரத்த தானம் செய்துகொண்டே இருப்பார்கள். ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு ரத்தம் எப்படிப் பாய்கிறது, ரத்தம் கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை ஸ்டோக்கர் நுணுக்கமாக விவரித்திருப்பார்.

மனிதர்களுக்குக் கேடு விளைவிக்கும் ஒரு தீய சக்தி அழிக்கப்படும் என்ற எளிய கதையாக மட்டும் டிராகுலா இருந்திருந்தால், அது ஒரு செவ்வியல் படைப்பாக மாறியிருக்காது. ‘டிராகுலா தொழிற்சாலை’ என்று சொல்லும் அளவுக்குப் புதிய நாவல்களும், திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், விவாதங்களும் பெருகியிருக்காது. டிராகுலாவுக்கு இன்றும் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை அறிய வேண்டுமென்றால், ‘பிரேக்கிங் டான்’ படித்த அல்லது பார்த்த பதின்ம வயதினரிடம் பேசிப் பார்க்கலாம்.

ஸ்டோக்கரின் நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் உலகெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். டிராகுலாவை ஒரு புனித பைபிள் போலக் கருதி வழிபடுபவர்களும் உண்டு. ஸ்டோக்கர் எழுதிய ஒவ்வொரு வரியையும், ஒவ்வொரு சொல்லையும் விரிவாக ஆய்வு செய்து, பல ஆய்வுப் பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன.

அயலவரை, அகதிகளை, மாற்று மதத்தினரை, சிறுபான்மையினரை வெறுக்கும் போக்கு இன்று உலகெங்கும் தீவிரமாக இருக்கும் இக்காலத்தில், டிராகுலாவின் கதையைப் படிக்கும்போது, நாம் உண்மையிலேயே ஒரு கற்பனைக் கதையைத்தான் படிக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. ‘புனிதமான ரத்தம்’, ‘ரத்தக் கலப்பு’ என்று ஸ்டோக்கர் இயல்பாக எழுதிச் சென்றிருப்பது இன்று ஏன் வேறு பொருளை நமக்கு உணர்த்த வேண்டும்? இனம் பற்றிய விவாதங்களைத் தெரிந்துகொள்ளாமல் தான் ஸ்டோக்கர் டிராகுலாவை உருவாக்கினாரா என்று உறுதியாகச் சொல்ல முடியுமா? எதிர்காலத்துக்கான ஒரு எச்சரிக்கையாகவும் அவர் இதை எழுதியிருக்கக்கூடும் அல்லவா?

‘கிளாசிக் ஸ்டேஜ் கம்பெனி’ அரங்கேற்றிய ஒரு மேடை நாடகத்தில் டிராகுலா கவர்ச்சியாகத் தோன்றவில்லை. டிராகுலாவிடம் மயங்கும் அல்லது பயந்து நடுங்கும் பெண்கள் இதில் இல்லை. இந்தப் பெண்கள் தங்களை மீட்க எந்த ஆண்களையும் நம்பியிருக்கவில்லை. ஸ்டோக்கரின் நாவலில் டிராகுலாவை வேட்டையாடுபவர் ஒரு ஆண் (வான் ஹெல்சிங்) என்றால், இந்த நாடகத்தில் அவர் ஒரு பெண்.

டிராகுலாவை ஒரு பெண்ணியப் பாணியில் மாற்றியமைத்தவர் கேட் ஹமில் என்ற நாடகாசிரியர். இதற்கு முன்பு, ஜேன் ஆஸ்டன், தாக்கரே போன்றோரின் படைப்புகளையும் அவர் பெண்ணியப் பாணியில் மறு அறிமுகம் செய்திருக்கிறார். இத்தகைய படைப்புகள் நாம் உலகை எப்படிப் பார்க்கிறோம் என்பதைத் தீர்மானிக்கின்றன என்று ஹமில் நம்புகிறார். ஆண் மையப் படைப்புகளைப் படித்து, ஒரு கண்ணோட்டத்தை உருவாக்கி, அதுவே உலகப் பொதுவான உண்மை என்று நம்புபவர்களுடன் இவ்வாறு விவாதிக்க வேண்டியிருக்கிறது என்கிறார் அவர்.

ஹமிலின் டிராகுலா சவப்பெட்டிக்குள் வாழ்வதில்லை. மின்னும் சிவப்பு கண்களோ, கூர்மையான பற்களோ அவருக்கு இல்லை. அவர் ஒரு நவீன ஐரோப்பியரைப் போலவே தோற்றமளிக்கிறார். பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆண்களுக்கென்று தனி அடையாளம் எதுவும் இல்லை என்கிறார் ஹமில். அவர்கள் மிகவும் இயல்பானவர்கள், நம் வீதிகளிலும் வீடுகளிலும் நிறைந்திருப்பார்கள். நம்மைப் போலவே இருப்பார்கள். கற்பனையைவிட நிஜம்தான் அச்சுறுத்துகிறது.

– வரலாறு எனும் கற்பனை – மருதன் நூலிலிருந்து

வரலாறு என்பது வெறும் சான்றுகளை அடுக்கிக் காட்டுவது அல்ல; அது இறந்த காலத்துக்கு உயிரூட்டி, கதைகளாகப் புனைந்துரைப்பது. வரலாற்றாசிரியர் நயன்ஜோத் லாஹிரி கூறுவதுபோல், “எழுதும் அனைவருக்கும் கற்பனை அவசியம்,” ஏனெனில் கற்பனை வளம் இல்லாவிட்டால் தொல்லியல் சான்றுகளையோ, இலக்கியப் பிரதிகளையோ முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. இந்தப் பானை எப்படிப் பயன்பட்டிருக்கும், இந்த ஓவியம் எப்படி வரையப்பட்டிருக்கும் போன்ற கேள்விகளுக்கான விடைகள் கற்பனை வழியாகவே நமக்குக் கிடைக்கின்றன.

இந்த நூல், கற்பனைக்கும் உண்மைக்கும், புனைவுக்கும் நிஜத்திற்கும் இடையிலான மெல்லிய கோட்டை ஆராய்கிறது. சல்மான் ருஷ்டியின் கற்பனை உலகிலிருந்து, ஒற்றை ஆவணத்தின் மூலம் கலீலியோவின் உண்மை நிழலைத் தேடுவது வரை, ஓரன் பாமுக்கின் நோய் தொற்று பற்றிய கதை முதல் காஃப்காவின் புனைவும் நிஜமும் கலந்த உலகம் வரை பல படைப்பாளிகளின் பார்வைகளை நாம் இந்நூலில் காணலாம்.

குற்றப்புதினங்கள், சுய காதல் கதைகள், தொன்மங்கள், அரசியல் கனவுகள் மற்றும் யதார்த்தத்தின் இருள் – இவையெல்லாம் எவ்வாறு கற்பனையால் உருப்பெற்று, ஒரு புதிய வரலாற்றுப் பார்வையை உருவாக்குகின்றன என்பதை இந்நூல் விவரிக்கிறது. ரவீஷ் குமாரின் உடைந்த கனவுகள், வதைமுகாமின் இருளும் ஒளியும், காந்தியின் மதக் கண்ணோட்டம், கோர்பசேவின் கலைந்த கனவுகள், மற்றும் எட்வர்ட் செய்தின் பாலஸ்தீனக் குரல் என ஒவ்வொரு அத்தியாயமும் கற்பனையும் நிஜமும் பின்னிப் பிணைந்துள்ள உலகை நமக்குக் காட்டுகின்றன.

இந்த நூல், நீங்கள் வாசிக்கும் ஒவ்வொரு கதையிலும், பார்க்கும் ஒவ்வொரு படத்திலும், உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு நிகழ்விலும் கற்பனையின் பங்கு என்ன என்பதைப் பற்றி சிந்திக்க வைக்கும். இது ஒரு பயண நூல், உங்களை வரலாற்றின் ஆழங்களுக்கும், கற்பனையின் உயரங்களுக்கும் இட்டுச் செல்லும்.

Buy: https://heritager.in/product/varalaaru-enum-karapanai/

WhatsApp: 097860 68908

Category: