Description
தாவரவியல் பெரும் பேராசிரியர் முனைவர் லோகமாதேவியின் ‘இந்தியாவின் சொந்த மரங்கள்’ நூலை வெளியிடுவதில் பெருமையுறுகிறோம். தாவரவியலை இலக்கிய அழகும் செறிவும் மிக்க நடையில் வழங்கி வருவது அறிவியல் தமிழுக்கு இனிய வரவு என்று நிச்சயமாகக் கூறலாம்.ஒரு பெரிய அறிவியல் களஞ்சியத்தின் தொடக்கமாக இந்நூல் அமைகிறது. இந்த நூல் ஒரு கலைக் களஞ்சியம் போலவும் நாவரவியல் பேரகராதி போலவும் அமைந்திருப்பதைத் தனிச் சிறப்பாகக் கூறவேண்டும். இந்தியாவுக்கே உரிய இருபது சொந்த மரங்களைப் பற்றி இந்நூல் பேசுகிறது. வில்வம் முதல் கல்லிச்சி வரையிலான மரங்களை ஆசிரியர் அறிமுகம் செய்கிறார். மரங்களின் பல்வேறு பெயர்கள், தாவரவியல் பெயர்கள், குடும்பம், இயன்ற அளவு பிற மொழிப் பெயர்கள், தோற்றம், முக்கியத்துவம், காணப்படும் இடம், மண், சூழல் பங்களிப்பு, நாடிவரும் உயிரினங்கள் தாவரவியல் பண்புகள், பண்பாட்டுச் செய்திகள், தொன்மங்கள், தொல்குடித் தொடர்பு, பயன்பாடு, சிறப்பியல்பு என இத்தனை செய்திகள் இந்நூலில் மரத்தின் கப்பும் கிளையும் இலையும் பூவும் காயும் கனியும், வேரும் எனக் கொட்டிக் கிடக்கின்றன. பல தொகுதிகளாக இந்திய மரங்கள் பற்றிய நூல்கள் இன்னும் தொடர்ச்சியாக வர இருக்கின்றன என்பது மகிழ்ச்சியான செய்தி.