வேலூர்க் கிளர்ச்சி, 1806 – சாதகமான சூழ்நிலை :
தென்னிந்தியக் கிளர்ச்சி அடக்கி ஒடுக்கப்பட்ட ஆறாண்டுக் காலத்தில் வேலூரில் மற்றொரு கிளர்ச்சி வெடித்தது. முந்தியக் கிளர்ச்சியில் கலந்துகொண்டு தப்பிவந்த பல கிளர்ச்சிக்காரர்களுக்கு வேலூர் சிறந்த கொத்தளமாகப் பயன்பட்டது. பாளையக்காரர்களிடம் பணியாற்றிய பல வீரர்கள் கம்பெனிப் படையில் சேர்ந்திருந்தனர். வேலூர்க் கோட்டையில் சிறைப்பட்டிருந்த திப்பு சுல்தானின் புதல்வர்கள், குறிப்பாக அவரது மூத்தமகன் பட்டே ஹைதர் ஆங்கிலேயருக்கெதிராகக் கிளர்ச்சி செய்வதற்கான தக்க தருணத்தை எதிர்பார்த்திருந்தார். கம்பெனியின் ஆக்கிரமிப்புக் கொள்கையால் பாதிக்கப்பட்ட ஹைதராபாத்தும், மைசூரும் கிளர்ச்சியை ஆதரிக்க விரும்பின. இச்சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு கிளர்ச்சி செய்தனர்.
கிளர்ச்சிக்கான காரணங்கள்
வேலூர் கிளர்ச்சிக்கான உண்மைக் காரணங்களைப்பற்றி ஒருமித்த கருத்தில்லை. ஒன்றுக்கொன்று மாறுபட்ட முரண்பட்ட காரணங்கள் கூறப்பட்டுள்ளன. எனினும் வேலூர்க் கிளர்ச்சி தோன்றியதற்கான கீழ்க்கண்ட விளக்கங்களைக் கூறலாம்.
1. ஆங்கிலேய ஆட்சியை அகற்றுவதே வேலூர்க் கிளர்ச்சியின் முக்கிய நோக்கமாகும். தென்னிந்தியக் கிளர்ச்சி முறியடிக்கப்பட்ட பின் எஞ்சித் தப்பிய கிளர்ச்சிக்காரர்களில் பலர் கம்பெனி இராணுவத்தில் சேர்ந்தனர். பலர் வேலூரைச் சுற்றிக் குடியேறினர். அவர்கள் அவ்வப்போது சந்தித்து, இரகசியமாகக் கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டு, மீண்டும் ஒரு கிளர்ச்சி செய்து ஆங்கிலேய ஆட்சியை அகற்ற முடிவு செய்தனர். இக்கருத்தை பேராசிரியர் கு.ராஜய்யன் வலியுறுத்துகிறார்.
2. மைசூர் முடியாட்சியை மீட்க வேண்டும் என்று திப்பு சுல்தானின் வாரிசுகள் சதித் திட்டம் தீட்டினர். திப்பு இறந்தபின் அவரது பன்னிரண்டு பிள்ளைகளையும், ஆறு பெண்களையும் வேலூர்கோட்டையில் சிறை வைத்திருந்தனர். அவர்களில் குறிப்பாக திப்புவின் மூத்த மைந்தன் பட்டே ஹைதர் பிறரது துணையுடன் கிளர்ச்சி செய்யத் திட்டமிட்டார். அவரது முயற்சியால் கிட்டத்தட்ட 3000 கன்னடக் கிளர்ச்சிக்காரர்கள் வேலுரைச் சுற்றி குடியேறினர். கம்பெனி படைத்தளபதி ஜே.எப்.கிரடோக் மைசூரில் மீண்டும் முஸ்லீம் முடியாட்சியை ஏற்படுத்துவதே வேலூர்க் கிளர்ச்சியில் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.
3. ஆங்கிலேயரது ஆக்கிரமிப்புக் கொள்கையால் தன்னுடைய சுதந்திரத்தை இழந்த ஹைதராபாத் நிஜாம் மீண்டும் தனது ஆட்சியை நிலைநாட்ட நாட்டம் கொண்டிருந்தார். ஹைதராபாத், சிக்காகோல் மக்களும் மனவருத்த முற்றிருந்தனர். அவர்கள் கிளர்ச்சி செய்யத் துடித்துக் கொண்டிருந்தார்கள். வேலூரிலிருந்த கிளர்ச்சிக்காரர்கள் ஹைதராபாத் கிளர்ச்சிக்காரர்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர். அச்சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட ஹைதராபாத் நிஜாம் தனது ஆட்சியை மீட்க முயன்றார்.
4.கம்பெனிப் படையில் சேர்ந்த சிப்பாய்களுக்கு இராணுவக் கட்டுப்பாடு, போர்க்கருவிகள், பயிற்சிமுறை, போர் முறைகள், பழக்க வழக்கங்கள் ஆகிய அனைத்தும் புதுமையாயிருந்தன. அவற்றுக்கேற்பத் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. அது மட்டுமல்ல, சிப்பாய்கள் ஆங்கிலேய வீரர்களுக்கு சமமாக நடத்தப்படவில்லை. அது சிப்பாய்களிடையே இனவேற்றுமையை வளர்த்தது. அதன் காரணமாக அவர்கள் அந்நியரை அகற்ற வேண்டுமென்று விரும்பினர்.
5. 1806ல் சென்னை இராணுவப் பிரிவில் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. சென்னை இராணுவத் தளபதியான சர் ஜான் கிரடோக், சென்னை கவர்னராக இருந்த வில்லியம் பெண்டிங் பிரபுவின் சம்மதத்தோடு சில மாற்றங்களைச் செய்தார். அதன்படி சிப்பாய்கள் ஐரோப்பிய படைவீரர்கள் அணிவது போன்ற தலைப்பாகையை அணிந்து கொள்ள வேண்டும், பணியில் இருக்கையில் சிப்பாய்கள் காதணிகளை அணிவதோ, நெற்றியில் திருநீறு அல்லது நாமம் போட்டுக் கொள்வதோ கூடாது; முகத்தை நன்கு மழித்துக் கொள்ள வேண்டும்; மீசையை நன்றாக நறுக்கப்பட்டிருக்க வேண்டும்; சிப்பாய்கள் சிலுவைச் சின்னம் கொண்ட பட்டையை அணிய வேண்டும். இச்சீர்திருத்தங்கள் சிப்பாய்களிடையே ஆங்கிலேயர் மீது வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தின.
6. ஆங்கிலேயர்கள் தங்களை கிறித்துவ மதத்துக்கு மாற்றமுயற்சிக்கின்றனர் என்று சிப்பாய்கள் சந்தேகப்பட்டனர். அந்த நோக்கத்தோடு தான் இராணுவச் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன என்று அவர்கள் கருதினர். குறிப்பாக ‘அக்னு குல்லா’யில் இருந்த முடிச்சு பசு, பன்றித் தோலால் ஆனது என்ற சந்தேகம் இந்து முஸ்லீம் சிப்பாய்களிடையே சினமூட்டியது. அக்குல்லாய்கள் கிறித்துவ மதத்துக்கு மாறியவர்கள் அணிந்ததைப் போன்றிருந்தன. சிலுவைச் சின்னமிட்ட அடையாளப் பட்டையை அணிய வேண்டுமென்ற உத்தரவு சிப்பாய்களிடையே இருந்த மதமாற்ற அச்சத்தை உறுதிப்படுத்துவதாக இருந்தது.
கிளர்ச்சித் திட்டம்
மேற்கண்ட காரணங்களால் கிளர்ச்சிக்காரர்களும் திப்புசுல்தான் மைந்தர்களும் சிப்பாய்களும் கிளர்ச்சிக்காகத் திட்டமிட்டனர். வேலூர்க் கிளர்ச்சிக்காரர்கள் ஆற்காடு, மைசூர், ஹைதராபாத் கலகக்காரர்களோடு தொடர்பு கொண்டனர். பிலிகொண்டா மக்களும், வாலாஜாபாத்தில் இருந்த சிப்பாய்களும் வேலூர் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவ முன் வந்தனர். சித்தூர் சிப்பாய்களும் கிளர்ச்சியை ஆதரித்தனர். ஹைதராபாத், சிக்காகோல் சிப்பாய்கள் அப்பகுதி மக்களோடு இரகசியத் தொடர்பு கொண்டனர். ஹைதராபாத் கிளர்ச்சியை அடுத்து சிக்காகோல் கிளர்ச்சி செய்ய முடிவு செய்தனர். அச்சதித் திட்டத்தை நிஜாம் கண்டும் காணாமல் இருந்து விட்டார். மனக்கசப்படைந்திருந்த மைசூர் மக்களும் கிளர்ச்சியில் கலந்து கொள்ளத் தயாராயிருந்தனர். 1806 ஜூலை 13ஆம் தேதி அதிகாலையில் வேலூர் கோட்டையை கைப்பற்றுவதென்றும் அதைத் தொடர்ந்து மைசூரிலும், ஹைதராபாத்திலும் கிளர்ச்சி துவக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.(நூலிலிருந்து)
இந்திய விடுதலை போராட்ட வரலாறு – டாக்டர்கள் க.வெங்கடேசன், பி.எஸ்.சந்திர பிரபு
விலை: 360/-
வெளியீடு: வி.சி. பப்ளிகேஷன்ஸ்
Buy this book online: https://www.heritager.in/product/india-viduthalai-poraatta-varalaaru/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers