இந்தியாவின் முதல் காதல் கல்வெட்டு, தேவதாசிக்கு எழுதிய 2300 ஆண்டுகள் பழமையானக் கல்வெட்டு.
காதலர்கள் சந்திக்கும் இடங்களில் அவர்களின் பெயர்கள் எழுதி அம்புவிடுவதை நாம் பல இடங்களில் கண்டதுண்டு. இந்த காதல் சின்னம், இன்று நேற்று தோன்றியது அல்ல. இவ்வாறு காதலன் காதலி பெயரை எழுதிவைக்கும் தகவலை சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பே காணப்பட்டதை, நாம் ஒரு பழையக் கல்வெட்டு வாயிலாக அறியலாம்.
சுமார் இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு, நம் தமிழகத்து கோவலன் போல வடக்கேயும் இருந்த ஒரு கலா ரசிகன் ஆடல்கலை நிகழ்த்தும், ஒரு தேவதாசியை (ஆடல் மகளிர்) விரும்பினான் போல. ஆனால் அவளிடம் அந்த காதலை சொல்ல அவனுக்கு தையிரியம் வரவில்லை. எங்கே, அவள் மேல் கொண்ட அந்த காதல் யாருக்கும் தெரியாமலேயே போய்விடுமோ என வருந்திய அவன், அவளிடம் மொழியாத (சொல்லாத) காதலினை, அவள் தங்கி நடனம் செய்யும் குகையின் சுவற்றில் பொறித்து வைத்துள்ளான். இந்திய வரலாற்றில் தன் காதலை பற்றி முதன் முதலில் எழுத்துப் பூர்வமாக பதிவு செய்த முதல் காதலன் அவன் தான். காதலை பற்றியும், ஆடற்கலையைப் பற்றியும், சிற்ப ஓவியக்கலை பற்றியும் பேசும் முதல் கல்வெட்டு அதுதான்.
சத்தீஸ்கர் மாநிலம், ராம்கர் மலைக் குகையில் கி.மு மூன்றாம் நூற்றாண்டு பிராமி கல்வெட்டு ஒன்று, தேவதாசியை முதன்முதலாக “தேபதாசிர்” குறிப்பிடுகிறது. இந்தக் குகையானது ஒரு நடனக்கலை நிகழ்த்தும் அரங்கமாக இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதில் ஒரு குகையில், ஆடல் மகளிர் தங்கி, உடைமாற்றும் அறையாக இருந்திருக்கலாம் எனவும், அங்கே ஒரு காதலன், அங்கிருந்த சுதானுகா எனும் ஆடல் மகளிரான தேவதாசியை விரும்பியதால் தனது தனது காதலை இவ்வாறு கல்வெட்டு வாயிலாக வெளிப்படுத்தியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
அக்கல்வெட்டில், சுதானுகா என்னும் தேவதாசி பெண்ணுக்கும், ஓவியம் அல்லது சிற்பக் கலைஞருக்கும் இடையே இருந்த காதலைப் பற்றி, பிராக்ருத மொழியில் அமைந்த பிராமி எழுத்துக் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகின்றது.
அந்த கல்வெட்டு பின்வருமாறு:
“இந்த அரங்கத்தை அமைத்துக்கொடுத்த “சுதானுகா” எனும் பெயர் கொண்ட தேவதாசி பெண்ணை, ஆண்களில் சிறந்தவனும், சிறந்த ஓவிய/சிற்பக்கலை (Rupadaksha – Copyist) வல்லுநருமான வாரணாசியைச் சேர்ந்த தேவதீனா (தேவதத்தா?) எனும் பெயர்கொண்ட நான் காதலிக்கிறேன்.” என அக்கல்வெட்டுப் பாடம் கூறுகிறது. இக்கல்வெட்டில் கூறப்படும் நபர்தான் இக்குகையில் உள்ள ஓவியங்களை வரைந்ததாகவும் அறிஞர்கள் கருதுகின்றனர்.
தன் காதலை நேரிடியாக வெளிப்படுத்த முடியாத அந்தக் காதலன், Once-Side Love செய்யும் கல்லூரி மாணவர்கள் செய்வது போல சுவரில் இவ்வாறு எழுதி வைத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எதுவாகிலும் காதலைப் பற்றி, அதுவும் இரு கலைஞர்களின் காதலைப் பற்றிக் கூறும் முதல் கல்வெட்டாக இது கருதப்படுகிறது. இவனை, அந்த ஆடல் மகளீருக்கு ஒப்பனை செய்யும் கலைஞாகவும் இருந்திருக்கலாம் எனவும் அறிஞர்கள் கருதுகின்றனர்.
இக்கல்வெட்டில் கூற வருபவை:
- இந்தியாவில் காதலைப் பற்றிக் குறிப்பிடும் முதல் கல்வெட்டு
- Performing Art எனப்படும் நிகழ்த்து கலை அல்லது ஆடல் கலையைப்பற்றிக் குறிப்பிடும் முதல் கல்வெட்டு .
- தேவதாசி பற்றி முதன் முதலில் குறிப்பிடுகிறது.
- ஓவியம் அல்லது சிற்பக்கலைதான் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு.
- தேவதாசி வெறும் காமக்கிழத்திகள் அல்ல, காதல் வயப்படவும் செய்துள்ளனர் என்பதைக் கூறுகின்றது. இதனைச் சிலப்பதிகாரம், மணிமேகலை உறுதிப்படுத்துகின்றன.
- கோவில் அல்லாத இடங்களிலும், குகைகளிலும், தேவதாசிகள் நிகழ்த்து கலை எனும் ஆடற்கலை புரிந்ததாக இக்கல்வெட்டு மூலம் அறியப்படுகிறது.
இதன் அருகில் உள்ள ஒரு குகையில் ஒரு பிராமி கல்வெட்டு முதன் முதலில் ஒரு கவிஞனைப் பற்றி, “கவிஞன் என்பவன் தன் சிந்தனையால் ரசிகர்களின் இதயங்களைக் கவரும் திறமையுடையவன்” எனவும் கூறுகிறது. காதலும் கவிதையும் வரலாறு நெடுக சேர்ந்துப் பயணித்தவை போல.
இருப்பினும் காலம் இவர்களை சேர்த்தா? அவர்கள் சேர்ந்தாலும், சேராவிட்டாலும். அவர்களின் காதல் ஒரு அழகான வரலாற்று பொக்கிஷத்தை நமக்கு விட்டுச்சென்றுள்ளது.
அடுத்த முறை எங்காவது காதலர்கள் தங்கள் பெயரை பொறித்து இருப்பதை கண்டால், இது ஈராயிரம் ஆண்டுகள் மேலாக இருக்கும் பழக்கம் என்பதை நினைவில் கொள்க.