உலகின் மூத்த பெரும் வேட்டையாடிகள் பெண்கள் – புதிய ஆய்வு
கட்டுரை: இராஜசேகர் பாண்டுரங்கன்
ஆதிகால மனித வாழ்வில் ஆண்கள் தான் அதிகம் வேட்டையாடுபவராகவும், பெண்கள் உணவு சேகரிப்பாளராகவும் இருந்தனர் என்ற கருத்து கடந்த சில நூற்றாண்டுகளாக நிலவியது.
ஆனால் சுமார் 9,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண் வேட்டையாளரின் புதைபொருள் எச்சங்கள் மூலம், பெண்கள் மிகப்பெரும் விலங்குகளைத் திறனுடன் வேட்டையாடியுள்ளனர் என்ற தகவலை, அமெரிக்காவின் கலிபோர்னிய பல்கலைக்கழக ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
நமது சமூகத்தில் இருப்பது போன்றே, பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட தனி வேலைகள், தற்போதைய வேட்டுவக்குடியிலும் காணப்படுவதால், பெண்கள் உணவு சேகரிப்பாளராக மட்டுமே இருந்துள்ளனர் என நாம் இதுவரை கருதிவந்துள்ளோம். எனவே இயற்கையாகவே பெண்கள் ஆண்கள் செய்த வேலைகளைச் செய்யவில்லை என்ற தவறானக் கருத்து நிலவியது. ஆனால் இந்த ஆய்வின் மூலம் வேலைகளில் ஆண் பெண் பாகுபாடு அமெரிக்காவில் வாழ்ந்த வேட்டைக்குடியில் இருந்ததில்லை என அறியமுடிகிறது.
2018 ஆண்டு பெரு நாட்டில் Wilamaya Patjxa என்ற உயர்ந்த நிலப்பரப்பில் அமைந்த பகுதில் நடைபெற்ற அகழாய்வில், வேட்டைக்கருவிகள், எய்தும் கருவிகள், விலங்குகளின் உடலை அறுக்கும் கருவிகள் போன்றவை ஓர் ஈமக் குழியில் கிடைத்துள்ளன. அந்த ஈமக்குழியில் இருந்த உடலை ஆய்வு செய்ததில், அங்குக் கிடைத்த உடல் எச்சங்கள் (பல்) மூலம், அது ஒரு வேட்டுவப் பெண் என்பதை ஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.
மேலும், 107 இடங்களை ஆய்வு செய்ததில் 429 உடல்கள் கிடைத்துள்ளன, அதில் 27 பேர் வேட்டையாடிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு கிடைத்த புதைபொருட்களைக் கொண்டு அவர்கள் பெரும் விலங்குகளை வேட்டையாடும் திறனுள்ளவர்களாக இருந்துள்ளனர். அவற்றில் 11 பேர் பெண்கள், அதாவது சுமார் 30%-50% பெண்கள் வேட்டையாடிகளாக இருந்திருக்கலாம், என மேலும் நடந்த பல ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும் அப்பெண்கள், ஆடைகளை உடுத்தியிருந்தனர் என்றும், அதில் Red Ocher சிவப்பு நிரமிகளைக் கொண்டு அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது எனவும், இது அந்த ஆடைக்கு நீர்ப்புகாத் தன்மையை அளித்து, ஆடையைப் பாதுகாத்ததாக கூறப்படுகிறது.
இதன் மூலம் அமெரிக்கக் கண்டத்திலிருந்த வேட்டையாடி சமூகத்தில், வேலைகளைப் பொருத்தமட்டில் எந்தவொரு பாலின வேறுபாடும் இன்றி இருந்துள்ளமை நமக்குப் புலனாகிறது.
மூலம்:
https://www.ucdavis.edu/