சேரன் பயன்படுத்திய போர் இயந்திரப் பறவை

ஆதி மனிதன் பறவையைப் போல தானும் பறக்கமுடியும் என்ற எண்ணத் துவங்கி, படிப்படியான முயற்சியால், ஏதோ ஒரு விசைப் பொறியின் உதவியால் தான் மனிதனால் பறக்க இயலும் என்ற அறிவியல் பார்வை உருவாகியிருந்ததை எழுத்து ஆவணங்கள் படி சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காணமுடிகிறது. பாபிலோனியர்களின், Epic of Etana என்ற இதிகாசத்தில் பருந்தினை போல வானில் பறப்பது எவ்வாறு என்றும், Halkatha என்ற பாபிலோனியச் சட்ட நூலில் மனிதன் விசை பொறி அல்லது விமானத்தைக் கொண்டு பறப்பதைப் பற்றி முதன் முதலிலும் பேசப்படுகிறது.

அதில் பின்வருமாறு,

“பறக்கும் இயந்திரத்தை இயக்குவது என்பது தனி உரிமைப்பேறு. வானப்பயணம் என்பது மிகவும் பழையதான ஒன்று. அது உயிர்களைக் காக்கக் கடவுள் அளித்த வரம்” “(To operate a flying machine is a great privilege. Knowledge of flying is most ancient, a gift from the gods of old for saving lives)” எனக் கூறுகிறது.”

இருபதாம் நூற்றாண்டில் தான் விமானம் கண்டுபிடிக்கப்பட்டாலும், பறப்பதற்குத் தேவையான விமான வடிவமைப்பைப் பற்றி வரலாற்று கால மனிதன் முதல், டாவின்சி மமற்றும் ரைட் சகோதரர்கள் காலம் வரை பலரும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர் தமிழில் சிலப்பதிகாரமும் வடமொழி இலக்கியங்களும், இராமாயணம் மகாபாரதம் போன்ற காப்பியங்களும், பறக்கும் விமானம் பற்றிய கருதுகோளை நமக்கு முன்வைக்கின்றன.

எகிப்து ஆவணங்கள், கிரேக்க இலக்கியமான “ஒடிசி” மற்றும் இன்னும் பல கலாச்சாரங்களில் இயந்திர மனிதனைப் பற்றியும் குறிப்புகள் வருகின்றன. உலகின் பல இலக்கியங்கள் இவ்வாறு மனிதன் இயந்திரத்தைக் கொண்டு பறப்பதைப் பற்றிய கருதுகோளை, கூறி வந்துள்ளன. ஆதி முதல் மனிதன் ஒரு நாள் வானில் பறக்க முடியும் என்பதை நம்பி வந்துள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர். சீனாவில் 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த Lady Huang முதன் முதலில் சமைப்பதற்காக ஆண்ட்ரைடு (மனிதனைப் போலவே) ரோபோட் ஒன்றை உருவாக்கினார் என கதைகள் கூறுகின்றன.

கிரேக்கர்களின் அறிவியல் கண்டுபிடிப்பை, இந்தியாவில் உள்நாட்டிலேயே இயந்திர மனிதனை அஜாத சத்ரு எனும் மன்னன் உருவாகினான் என Lokapannatti கூறுகிறது. வட இந்திய அரசர் அஜாத சத்ருவின் அவையிலிருந்த அறிஞர்கள், புத்தரின் நினைவு அடையாளங்களைக் காக்க “bhuta vahana yanta” என்னும் இயந்திர மனிதர்களைச் சண்டையிடுவதற்குக் காவலர்களாக நிர்மாணித்தனர் என பௌத்த ஆவணங்கள் கூறுகின்றன.

கொல்லிப்பாவையை, தெய்வம் என்றும், பூதம் என்றும் குறுந்தொகை, நற்றிணை, கலித்தொகை, புறநானூறு போன்ற பல தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுவதோடு, கொல்லிப்பாவை எனும் இயந்திர பெண் கொல்லிமலையையும், அதில் வாழும் முனிவர்களையும் காக்க உருவாக்கினர் என கொங்குமண்டல சதகம் (25ஆம் பாடல்) கூறுகின்றது.

பண்டைய தமிழகத்திலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு இரும்பும், இரும்பிலிருந்து எக்கு உலோகமும் தயாரித்து ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனைப் பற்றி “ஆயுத தேசம்” என்ற நூலில் திரு. மன்னர் மன்னன் குறிப்பிடுகின்றார். இவ்வாறு இரும்பு மண்ணிலிருந்து பிரித்து எடுத்த பகுதி தகடூர் என பல அறிஞர்கள் கருதுகின்றனர். உலோகத் தகட்டை உருவாக்கிய இடம் என்பதால் தகடூர் எனப் பெயர் வந்ததாகவும் நம்பப்படுகிறது.

மேலும், உலோகங்களையும் தயாரிப்பதோடு, அவற்றைப் பயன்படுத்தி வீரர்களின் உதவியின்றி செயல்படும் தானியங்கி இயந்திரங்களையும், பொறிகளையும், உருவாக்கி சேரல் இரும்பொறை தனது கோட்டை முற்றுதலின் போது பயன்படுத்தியதாகத் தகடூர் யாத்திரை எனும் நூல்

மறனுடைய மறவர்க் கேறஇடன் இன்றி
நெய்யோ டைஅவி அப்பிய எவ்வாயும்
எந்திரப் பறவை இயற்றின நிறீஇக்
கல்லும் கவணும் கடுவிசைப் பொறியும்
வில்லுங் கணையும் பலபட பரப்பி
பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலும்
என்றிவை பலவும் சென்றுசென் றெறியு
முந்தை மகளிரை இயற்றிப் பின்றை
எய்பெரும் பகழி வாயில் துக்கிச்
சுட்டல் போயின் றாயினும் வட்டத்
தீப்பாய் மகளிர் திகழ்நலம் பேர
நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்கும்
தாக்கரும் தானை இறும்பொறை
பூக்கோள் தண்ணுமை கேட்டொறும் கலுழ்ந்தே பாடல் குறிப்பிடுகிறது.

வீரர்களின் ஆற்றலைத் தேக்கிவைத்துப் பாயும் இயந்திரக் கல்லெறி பெரும் கவண், கணை எறி பொறி, சூடேற்றிய நெய்யை விசிறும் கலம், திருமால் கை ஆழி போல வட்டவடிவிலான எறியும் எரிபந்தம், என நவீனக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி முதலியவை களின் முன்னோடிகள் கோட்டை தாக்குதலின்போது பயன்பட்டது பற்றிக் குறிக்கப்படுகின்றன.

மேலும், தானே சென்று எதிரிகளை வதைத்துக் கொல்லும் இயந்திர பறவைகளைப் போரில் பயன்படுத்தினான் என, “எந்திரப் பறவை இயற்றின நிறீஇக்” என்ற தகடூர் யாத்திரை பாடல் வரி நமக்கு உணர்த்துகின்றது. அது மட்டுமல்லாது பெண்களைப் போல இயங்கும் பொம்மைகள் செய்து எதிரிகளை மயக்கி திணறடித்து, அவை வாயின் வழியே அம்பு எய்தி கொல்லும் எனக் குறிப்பிடுகிறது.

இவ்வாறு பேராற்றலுடன் இயங்கிய தானியங்கி இயந்திரப் பறவைகளையும் தகடூர் கோட்டை முழுவதிலும் சேரல் இரும்பொறை அமைத்ததால், எதிரி வீரர்களைத் தினமும் அவை கொத்து கொத்தாகக் கொன்றன. இதனால் எதிரி வீரர்களின் மனைவிகள் தினமும் தீயில் பாய்ந்து உயிர் விட்டதைக் கண்டு சேரல் இரும்பொறையே மனமுடைந்ததாகப் பாடல்வரிகள் முடிகின்றது.

இதன் மூலம் சேரல் இரும்பொறையின் காலத்தில் பயன்படுத்திய போர் இயந்திரம் பொறியியலில் சிறந்து விளங்கியதோடு, தானே பறக்கும் தன்மையுடன், இன்று அமெரிக்கா போரில் பயன்படுத்தும் Drone இயந்திரங்களைப் போல சேரனின் இயந்திரப் பறவை எதிரிகளைத் துல்லியமாக வீழ்த்தியதாகக் கூறும் கருத்துகளை நாம் அறியமுடிகிறது.

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வரும் பல்வேறு Gadget கள் உண்மையில் அப்படம் எடுத்த காலக்கட்டத்தில் கற்பனையான ஒன்றாக இருந்தாலும், கருத்தியல் ரீதியில் மக்களை அறிவியல் அதே போன்ற கண்டுபிடிப்புகளை செய்ய தூண்டிய விஷயமாக அமைந்துவிட்டன. மேற்கண்ட பதிவை இதனோடு பொருத்துக…

நண்பர்கள் மறக்காமல் பதிவுக்கு, Share and Comment இடவும். நன்றி

Follow our Page: Thali Heritager Magazine
Website: http://heritager.in/
Telegram: https://t.me/heritager

இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்.

#Heritager

Leave a Reply