கதாபாத்திரங்கள் அறிமுகம்
இளங்குமரன் – சோழ கடற்படை உப தளபதி
இராஜேந்திர சோழர் – சோழ சக்கரவர்த்தி
வேல் சென்னி – இளங்குமரன் தோழன்
சஞ்சீவ சித்தர் – சோழ கடற்படை தலைமை
வைத்தியர் பூர்வ குடிகள் தலைவன்
வானவன் மாதேவி – சோழ பட்டத்து அரசி
தேவயாழினி – இளங்குமரன் மனைவி
செந்தமிழ் செல்வி – இளங்குமரன் மகள்
கதைக்களம் : “சோழக் கடற்படை கடாரத்தை வென்ற பின் தாயகம் திரும்பும் வேளையில் நிகழ்வதாக” கற்பனை படைப்பு.
காலம்: கி.பி. 1024 இராஜேந்திர சோழ சக்கரவர்த்தி ஆட்சி காலம்
கதை நடைபெறும் இடம்: வங்கக்கடலில் கடாரம் தொடங்கி மாநாக்காவாரம் வரை.
கி.பி 1024 -ம் ஆண்டின், “ஒரு அந்தி சாயும் அற்புதமான பொழுதில், அலைகடல் பெருவெளியில் ஆர்ப்பரித்தபடி பயணிக்கும் நாவாய்கள்”… ஒவ்வொரு நாவாயின் மேல் தளத்திலும் மனிதர்களின் உற்சாகக் குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்க, காற்றின் வேகத்தில் கடல் பரப்பை கீறிப் பிளந்தபடி, மேற்கு கரை நோக்கி பயணப்பட்டன புலிக்கொடி தாங்கிய மரக்கலன்கள். இருநூறுக்கும் மேற்பட்ட நாவாய்களின் நடுவே, சற்று பெரிய வடிவில் பயணித்துக்கொண்டிருந்த நாவாயின், பாய்மர உச்சியில் இருந்த மரத்தாலான கண்காணிப்பு மடத்தில், “கடலரசி பிரவாகித்து வெளியிட்ட தென்றலில்” லயித்திருந்தான், “இளங்குமரன்”…. சோழர் கடற்படையின் உபதலைவன் வாணர்குல வீரர் வந்தியத்தேவனின் சகோதரி, ஈன்றெடுத்த செல்வமகன். வீரத்தின் பெருமையை விழுப்புண்களாக உடலில் தாங்கி, உயரத்திலும் உடலமைப்பிலும், தன் மாமாவை அப்படியே அச்சில் வார்த்தவன்.
சோழத்தின் மீது தீராத காதலும், தெவிட்டாத பக்தியும் கொண்டவன். பேரரசர் இராஜேந்திரர், கடார மன்னன் மீது போர் தொடுக்க தீர்மானித்தபோது, வலுவில் அவரிடம் சென்று கடற்படைத் தளபதி பொறுப்பை வேண்டி பெற்றவன். பதினைந்து திங்கள்கள் கடலிலும், கரையிலும் கடந்து போயிருந்த நிலையில், தாயகம் நோக்கி பயணிப்பதால் தன்னிலை மறந்து, கண்காணிப்பு மாடத்தின் மீதிருந்து….. தாய்மண்ணை எதிர் நோக்கி நின்றிருந்தான்.
வான்மகள் தன் நெற்றியில் இட்ட குங்குமமாக கதிரவன் மேற்குக் கடலில் தகித்துக் கொண்டிருந்தான். சுற்றிலும் சிறிதும் பெரிதுமாக தெரிந்த சிறு பெரும் தீவுகள். நீலமும், கருப்பும், பச்சையும் கலந்து கிழக்கு கடலும், கருப்பும் சிவப்பும், மஞ்சளும் கலந்து மேற்கு கடலும், காட்டிய வர்ண மாயாஜாலத்தில் காண்போரின் கண்கள் அகத்திரையில் ஆயிரம் ஓவியங்கள் தீட்டும். அத்தகைய காட்சிகளை உள் வாங்கியபடி பயணித்துக்கொண்டிருந்த “இளங்குமரன்” இதயம், நாகை துறைமுகத்தை எட்டும் வேளையை எண்ணி தவித்தது. “செந்தமிழ்ச்செல்வி” – யை எண்ணிய இளங்குமரன் உள்ளத்தில், கோடி மலர் மொட்டுகள் வெடித்துப் பூத்தன. “ஸ்ரீவிசயத்”தின் தங்கமணல் கடற்கரைகள் போன்ற தேகம், “ஜாம்பி” கடல் பரப்பில் துள்ளிக்குதிக்கும் மீன்களென கண்கள், “சுமத்ரா” தீவுகளின் கானகத்தில் மருண்டு விழிக்கும் மான்களின் குணமொத்த முகபாவங்கள்….. இத்தனைக்கும் சொந்தக்காரி தான் “செந்தமிழ் செல்வி” இளங்குமரன், தேவயாழினி பெற்றெடுத்த இரு வயதுப் பேரழகி. அந்த பேரழகியின் மீதான பாசத்தில் நின்றிருந்த இளங்குமரனை…. ஒரு குரல் அழைக்க, மாடத்தில் இருந்து கீழே நோக்கினான். கீழே நின்றிருந்த வேல் சென்னி, கீழே வரச்சொல்லி சைகை காட்டினான். அவனிடம் தெரிந்த பரபரப்பை கண்டு துணுக்குற்ற இளங்குமரன், வேகமாக கீழே இறங்கிவந்தான்.
சொல் சென்னி, என்ன விஷயம்? என்றான் இளங்குமரன்.
குமரா!… கடாரத்திலிருந்து மூன்று தினங்களுக்கு முன் புறப்பட்ட நம் நாவாய்களில் ஐந்து, இலங்கைக்கு முன்புள்ள பகுதியில் தாக்கப்பட்டதாக தகவல். முன்னே செல்லும் நம் நாவாய்க்கு, வணிகக்கலனில் வந்தவர்கள் கூறியுள்ளனர். அந்த நாவாயின் தலைவன் அனுப்பிய செய்தி, அடுத்தடுத்த நாவாய்கள் மூலம் தற்போது என்னை எட்டியது என்றான்.
என்ன சொல்கிறாய் சென்னி?… கிழக்குக் கடலில் நமக்கு எதிரிகளே கிடையாது. நாகை முதல் கடாரம் வரையுள்ள மொத்த கடல்வெளியும் இப்போது, நம்முடையது அல்லவா? என்றான் இளங்குமரன்.
நீ சொல்வது சரிதான்… ஆனால் செய்தியை நீயே வந்து பார்! என்றான் சென்னி .
இருவரும் நாவாயின் முகப்பிற்கு சென்றனர். முகப்பிலிருந்து முன்னே சென்ற நாவாய் மிகத் தெளிவாக தெரிந்தது. அதன் பின் புறத்தில் ஒரு வீரன் நின்று கொண்டிருந்தான். அவன் விரித்துப் பிடித்திருந்த பெரிய துணியில், எழுத்துக்கள் தெளிவாக தெரிந்தன. “இலங்கையின் கடற்பரப்பிலிருந்து ஆயிரம் கடல்மைல் தொலைவிலுள்ள, “மாநாக்காவாரம்” தீவுப்பகுதியில் பயணித்த, கடற்படை நாவாய்கள் தாக்கப்பட்டன. தீவிலிருந்து பாய்ந்து வந்த அம்புகளாலும், இனம் காணவியலா ஆயுதங்களாலும், நாவாயில் இருந்த அனைவரும் மாண்டனர். அபாயகரமான அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டாம்” தகவல் தெளிவாக இருந்தது.
இளங்குமரன் மனதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. சென்னி…. பேரரசர் நமக்கு தந்த கடல் வரைபடத்தை எடுத்து வா!!??… என்றான் யோசித்தபடியே.
ஆகட்டும் குமரா!…. என்ற சென்னி மளமளவென நாவாயின் கீழ் தளத்திற்குச் சென்றான். சற்று நேரத்திற்கெல்லாம் திரும்பி வந்த சென்னியின் கையில், பெரிய வரைபட சுருள் இருந்தது.
நாவாயின் மேற்பரப்பில் இருந்த மேஜை போன்ற தளத்தில், சென்னியும் இளங்குமரனும், வரைபடத்தை விரித்து பிடித்தனர். கடாரம் ஸ்ரீவிசயம் என்று தீவுகளின் பெயர்களையும், வரைபட குறிப்புகளையும் தொட்டு தொட்டு உச்சரித்து வந்த இளங்குமரன் கண்கள், ஆச்சரியத்தில் விரிந்தன. உதடுகள் மெல்லிய அதிர்வுடன் உதிர்த்த வார்த்தைகள்……. “மாநாக்காவாரம்”!!. இளங்குமரனும், சென்னியும் சற்று துடுக்குற்றனர். சென்னி…. நம் வெற்றிக் கொண்டாட்டம் முழுமையடையவில்லை. நம் பயணம் முடிந்து விட்டதாக நாம் நினைப்பது தவறு. இன்னும் ஒரு நிலப்பரப்பு மிச்சமுள்ளது. உடனே நாம் செயல்பட வேண்டும் என்றான் இளங்குமரன்.
“நம் கடல்கோள் ஆய்வாளர்களும், வணிகர்களும் கொடுத்த குறிப்புகளை எடுத்து வா!!!… அதில் இந்த நிலப்பரப்பு குறித்து இருக்கும் தகவல்களையும், குறிப்புகளையும் நாம் ஆராய வேண்டும் என்றான் இளங்குமரன்.
சென்னியின் முகம் வெளிறிப் போயிருந்தது. பரபரப்புடன் மீண்டும் நாவாயின் கீழ்த்தளம் சென்றவன், ஒரு பெரிய மர பெட்டியை சுமந்து வந்தான். பெட்டியை திறந்து உள்ளிருந்த குறிப்புகள் அடங்கிய ஓலைச்சுவடிகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து வந்தவன்… சிகப்பு துணியில் சுற்றி இருந்த ஒரு ஓலைச் சுவடியை எடுத்தான். துணியை விலக்கி ஓலைச்சுவடியை இளங்குமரனிடம் கொடுத்தான். அந்த சுவடியை பிரித்து ஒவ்வொன்றாக பார்த்து வர, பதினைந்தாவது ஓலையில் குறிப்பு இருந்தது. அதை வாசித்தான் இளங்குமரன்.
“ஐநூறுக்கும் மேற்பட்ட தீபங்களின் கூட்டம்!..ஸ்ரீவிசயத்தின் வாணிபத் துறைமுகம்….!! “பெரிய மாநாக்காவாரம்” கருத்த தேகத்தான் வீசும் நஞ்சின் கணைகள் உயிர்குடிக்கும்…!!??? . தேன் பாயும் தீவகம்…. “பெரிய மாநாக்காவாரம்” தவிர்ப்பீர்…..”
குறிப்பை வாசித்த இளங்குமரன் உச்சி முடிகள் குத்திட்டு நின்றன. சென்னியின் முகத்தில் ஈயாடவில்லை . சிறிது நேரம் பிரமை பிடித்த நிலை நீடித்தது. முதலில் மவுனம் கலைத்த இளங்குமரன், சிறிது தைரியத்துடன் கூறினான்.
“சென்னி முதல் நாவாய் தொடங்கி இறுதி நாவாய் வரை தகவல் அனுப்பு. காற்றின் வேகம்….. இரண்டாம் ஜாமத்திற்க்குப் பிறகு குறையும். அப்போது பாய்களை சுருட்டி விடவும், துடுப்பு வலித்து நாவாய்களை செலுத்தவும் உத்தரவிடு. அனைத்து நாவாய்களுக்கும் முன் நம் நாவாய் செல்லட்டும். நம் உத்தரவுப்படி மற்ற நாவாய்கள் செயல்பட வேண்டும்” என்றான் தீர்க்கமாக இளங்குமரன்.
சென்னி உத்தரவுகளை நிறைவேற்ற விரைந்தான். முதலில் சுக்கானை பிடித்திருந்த மாலுமி வீரனிடம், “நம் நாவாயை அனைத்து நாவாய்களுக்கும் முன்னே செலுத்து” என உத்தரவிட்டான்.
மற்ற நாவாய்களுக்கு தகவல் மளமளவென பரப்பப்பட்டது. இளங்குமரன் நாவாய் முன்னே சொல்லும் செய்தி அறிந்த மற்ற நாவாயிலிருந்த படைவீரர்கள், சட்டென்று உற்சாக மனநிலையில் இருந்து, யுத்த நிலைக்கு மாறினர். படைவீரர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. சற்று நேரத்திற்கெல்லாம் இளங்குமரன் நாவாய் அனைத்து நாவாய்களின் முன்னால் செல்ல தொடங்கியது. முதலாம் ஜாமம் கடந்ததும், வானிலிருந்த நட்சத்திரங்களை ஏறெடுத்துப் பார்த்த இளங்குமரன், நட்சத்திரங்களைக் கொண்டு நாவாய் செல்லும் திசையை உறுதிப்படுத்திக் கொண்டான். பின் சென்னியை நாவாயின் மேல்தளத்தில் காத்திருக்க சொல்லிவிட்டு, பாய்மரத்தின் மீதிருந்த கண்காணிப்பு மாடத்திற்கு நூலேணியில் ஏறினான். கடற்பரப்பையும் நாவாய் செல்லும் திசையையும், நட்சத்திரக் கூட்டங்களை கொண்டு கணக்கிட்டு, தன்னுடைய கணிப்புக்களை உறுதிப்படுத்திக் கொண்டவன் கீழே இறங்கி வந்தான்.
சென்னி நாம் செல்லும் திசையில் இருந்து, இடது புறமாக, வடமேற்கு திசையில் நாவாயை செலுத்த சொல். துடுப்பு வலிப்போரில் பாதிப் பேர் துடுப்பு வலித்தால் போதும். இவ்வாறு பயணம் தொடரும் பட்சத்தில் நாளை உச்சிப் பொழுது கடக்கும் போது, நாம் “மாநாக்காவரம்” அருகில் முப்பது கடற்கல் தொலைவில் இருப்போம். சூழ்நிலைகளை உறுதிப்படுத்திக்கொண்டு, செய்ய வேண்டியதை பிறகு திட்டமிடலாம் என்று முடித்தான் இளங்குமரன்.
அதன்படி மாலுமியிடம் உத்தரவுகளை பிறப்பிக்க சென்னி சென்றான்.
அதற்குள் நூறு முறையேனும் இளங்குமரன் அந்த ஓலைச்சுவடியை படித்திருந்தான். அவனது இதயமும், மூளையும் ஒருசேர பயணித்து, பல விஷயங்களை அவனுக்கு படிப்பித்து தந்திருந்தன.
சென்னியும் இளங்குமரனும், சினேகிதர்கள். இருபத்தைந்து ஆண்டுகால நட்பு உடையவர்கள். இளங்குமரன் இதயமாக செயல்படுபவன் சென்னி. சோழர்களின் கடற்படை தலைவராக இராஜேந்திர சோழ சக்கரவர்த்தி இருந்தார். அவரின் வழிகாட்டுதலில் களத்தில் படைநடத்தி வெற்றிகளை குவித்து வருவதில் முன்னிலையில் இருவரும் இருந்தனர். தேவயாழினியின் அகால மரணத்தால் நிலைகுலைந்து போன இளங்குமரனை, போர்க்களத்திற்கு திருப்பியவன் சென்னி. “செந்தமிழ் செல்வி”யை இராஜேந்திரரின் துணைவி வானவன் மாதேவி அரண்மனைக்கு கொண்டு சென்று, தன் பொறுப்பிலேயே வளர்த்து வருகின்றார். தன் தளபதியின் செல்வ மகளை, அவன் களத்திலிருந்து திரும்பும் வரை…. வளர்ப்பதும், பாதுகாப்பதும் தன் கடமை என கருதிய அரசனும், அரசியும் எத்துணை பெருமைக்குரியவர்கள். இவ்வாறு தன் நண்பனை குறித்து சிந்தித்தபடியே, நாவாயின் மேல் தளத்திற்கு வந்தான் சென்னி. வந்தவன், இளங்குமரன் சிந்தனையை கலைத்தான்.
குமரா!… எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன். நாம் மாநாக்காவாரம் செல்ல வேண்டும் என நீ தீர்மானித்தது ஏன்? ஆபத்தை நாம் விலை கொடுத்து வாங்குகிறோம் என்று தோன்றுகிறது!!?? என்றான் சென்னி.
சென்னி…. சோழச் சக்கரவர்த்திகளின் ஆணைப்படி, ஸ்ரீவிசயத்து வணிகத் துறைமுகங்கள் இந்த “மாநாக்காவாரம்” தீவில் உள்ளன. முழுமையான வெற்றி என்பது அதையும் நம் சாம்ராஜ்யத்திற்கு பெற்றுத் தருவதில் அல்லவா உள்ளது? அதை நிறைவேற்றாமல், தாயகத்தை நாம் எட்டுவது முறையாகாதே!!?? என்றான் இளங்குமரன்.
ஆனால் “பெரியநாக்காவாரம்” ஆபத்து நிறைந்தது என குறிப்புகள் கூறுகின்றனவே.!! நம்முடைய நாவாய்கள் தாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பெரிய நாக்காவாரம் நோக்கிய பயணம் என்பது சரியாக இருக்குமா? ஒருவேளை எதிரிகள் அங்கே பெரிய அளவில் முகாமிட்டிருந்தால், நம் நிலை என்னவாகும்? என கவலையோடு பேசினான் சென்னி.
சென்னி!.. முடியுமா என நாம் நமக்குள் கேட்டிருந்தால்?… பெகு முதல் மாதமாலிங்கம் வரையான கடார நாடுகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்திருக்க முடியுமா? ஐந்து தினங்களுக்கு முன் நம் பேரரசர் இராஜேந்திரர், கடாரத்தில் புலிக்கொடியை பறக்கவிட்டாரே!!?? அதுதான் சாத்தியப் பட்டிருக்குமா? இயலுமென்பதில் கிஞ்சித்தும் சறுக்காமல் பயணித்தால், இடர்கள் எல்லாம் நம் காலடியில் கிடக்கும் காலனியாக ஆகிப்போகும். “மாநாக்காவாரம்” வணிகத் துறைமுகங்கள் உடையது என்று குறிப்பு கூறுகிறது. அப்படி எனில் “பெரிய நாக்காவாரம்” அதுபோன்ற பகுதியாகவே இருக்கக்கூடும். அதனை உள்ளடக்கிய மர்மத்தை நாளை நண்பகலுக்கு பின் நாம் விலக்குவோம்!!!… கவலை வேண்டாம் என்றான் இளங்குமரன்.
ஆதவன் ஆழ் கடலில் நீராடிவிட்டு, மெல்ல மேலெழுந்து தன் கதிர்களைப் பரப்பத் தொடங்கியிருந்த காலை நேரம்…… ஸ்ரீவிசயத்திலிருந்து புறப்பட்டிருந்த சோழ நாவாய்கள் அணிவகுப்பு கடல் நீரில் நீந்திச் செல்லும் நாரைகள் போல காட்சி அளித்துக் கொண்டிருந்தன. லெமூரியாவில் இருந்து நூறு கடல் கல் தொலைவில் பயணம் சென்று கொண்டிருக்க, சோழ கடற் படைத் தலைவன் இளங்குமரன், கண்காணிப்பு மாடத்திலிருந்து நாவாய் கடலில் பயணப்படும் வழியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் திட்டப்படி “மாநாக்காவாரம்” துறைமுகத்தை முதலில் கைப்பற்றுவது என்பது திண்ணமான முடிவாக இருந்தது.
ஸ்ரீவிசயம் வெற்றி கொள்ளப்பட்டுவிட்டது என்றாலும், “மாநாக்காவார” த்தில் தனியாக நியமிக்கப்பட்டிருந்த தலைவன் கட்டுப்பாட்டில்தான், அது இன்னமும் இருக்க வேண்டும், என்பது இளங்குமரன் கணக்கு. அவன் நிச்சயமாக ஒரு வலிமையுள்ள படையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் தாம்…. முன்னே சென்ற நாவாய்களை தாக்கி இருக்கலாம்!!?? என்று உறுதியாக நம்பிய இளங்குமரன், “திரிசூல வியூகத்தில்” துறைமுகத்தை தன்வசப்படுத்த தீர்மானித்தான். அதற்கான திட்டங்களை வகுத்து வைத்திருந்தவன், நிலப்பரப்பு ஏதேனும் தென்படுகிறதா!!! என கூர்ந்து நோக்கிய வண்ணம் இருந்தான். நாவாயின் மேல் பரப்பு தளத்தில் இருந்த மரஆசனத்தில், “கடற்காற்றின் குளிர்விப்பில்” அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் சென்னி.
நேரம் கடந்து கொண்டிருந்தது. இளங்குமரன் காலை உணவு அருந்தவும் கீழே வரவில்லை . பலமுறை உணவருந்த அழைத்தும் இளங்குமரன் வராததால், சென்னியும் உணவை தவிர்த்திருந்தான். நேரம் செல்ல செல்ல, வெப்பக் காற்று கடல் வெளியில் வீசத் தொடங்கியது.
கதிரவனின் கனல் அதிதீவிரமாக தொடங்கியிருந்த நேரத்தில், அந்த காட்சி இளங்குமரன் கண்களில் பட்டது. கதிரவனின் நிறமும், கடலின் நீலமும் கலந்து…… “கடலின் மீது வாரி இறைத்த மரகத சிதறல்களாக தெரிந்தன தீவுக் கூட்டங்கள். அந்த கூட்டத்தின் முதலில், பரப்பளவில் சற்று பெரியதாகவும், அடர்ந்த மரங்கள் நிறைந்த வனமாகவும் காணப்பட்ட நிலப்பரப்பின் வலது மூலையில் நாவாய்கள் நிற்பது தெரிந்தது. அந்த நாவாய்கள் நிற்கும் பகுதி தவிர, மற்ற பகுதி எல்லாம் மரங்களும், மணற் திட்டுகளுமாக காணப்பட்டன. இளங்குமரன் வேகமாக நூலேணியில் இருந்து இறங்கி வந்தான்.
சென்னி…நாம் “மாநாக்காவாரத்தை” நெருங்கிவிட்டோம். படைகளை தயார்படுத்து!!.. முரசொலிகளுக்கும், சங்கொலிகளுக்கும் ஏற்ப செயல்பட உத்தரவிடு…. என்றான். காரியங்கள் விரைந்து செயல்படுத்தப்பட்டன.
“மாநாக்காவாரம்” எனப்பட்ட அந்த பெரிய தீவை இப்போது தெளிவாக பார்க்க முடிந்தது. இளங்குமரன் தயாராக நாவாயின் முகப்பில் நின்று கொண்டு, தீவையும், துறைமுகத்தையும், கூர்ந்து கவனிக்கலானான். துறைப்பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது என்பதை நாவாய்களின் நகர்வில் உணர்ந்து கொண்டவன், இடது புறமாக தூரத்தில் ஐந்து நாவாய்கள் புலிக்கொடியுடன் நிற்கக் கண்டான். ஆனால் அவை தீவின் வலது புறம் இருந்த துறைமுக பகுதிக்குச் செல்லாமல், மூன்று கடற்கல் இடது புறமாக மூக்கு போல இருந்த பகுதி வழியே பயணப்பட்டதற்கான அறிகுறிகள் இருந்ததை இளங்குமரன் அறிந்து கொண்டான். ஆயினும் “மாநாக்காவாரம்” என்னும் துறைமுகம், ஆபத்தானது அல்ல என்பதை ஓரளவு ஊகித்துக் கொண்டான். ஆகவே தாமதமின்றி தாக்குதலை நடத்த முடிவெடுத்தான்.
விரிந்து பிரியும் சமிஞ்சைக்கான முரசை அடிக்க உத்தரவிட்டான். நாவாய்கள் அனைத்தும் துடிப்பு வலிப்போரின் துணையுடன் வேகம் எடுக்கத் தொடங்கின. பாய்மரங்களில் பாய்கள் மொத்தமாக சுருட்டப்பட்டு இருக்க, முரசொலி கேட்டவுடன் அறுபது, அறுபது நாவாய்கள், என இளங்குமரன் மரக்கலத்தின் பின்னிருந்து….. வலப்புறமும், இடப்புறமும் ஆக பிரிந்தன. இளங்குமரன் நாவாய் முன்வர, அவன் நாவாயின் பின்வந்த பத்து நாவாய்களால் வேல் முனை போன்ற வடிவம் உண்டானது கடற்பரப்பில். நாவாய்கள் பிரிந்து அணிவகுத்து சென்ற போது “திரிசூலம்” ஒன்று “மாநாக்காவாரம்” தீவின் மீது பாய்வது போல இருந்தது.
மாநாக்காவாரம் துறைமுகத்தில் பரபரப்பு தொற்றிக் கொள்ள, சங்கொலி திடீரென எழுந்தது. துறைமுகத்திலிருந்தும் நாவாய்களிலிருந்தும், தரைப் பகுதியிலிருந்தும் எரிகணைகளும், அம்புகளும் பாய்ந்து, கடலில் வந்து கொண்டிருந்த சோழர்களின் கடற்படை மீது தாக்குதல் செய்ய முயற்சித்தன. சில அவற்றின் மீது பட்டாலும், நாவாய்களின் நகர்வில் அவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதற்குள் இளங்குமரன் சங்கொலிக்க, திரிசூலத்தில் இருந்து சாரை சாரையாக அம்புகள் மாநாக்காவாரம் நிலத்தில் இருந்த வீரர்களையும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாவாயிலிருந்த வீரர்களையும், தாக்கின. இளங்குமரன் சென்னியும் எரிகணைகளை நாவாய்கள் மீது எய்யத் தொடங்கினர்.
யுத்தம் உக்கிரமாக இருந்தது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் மாநாக்காவாரம் பகுதியில் இருந்த ஸ்ரீவிசயத்தின் போர்வீரர்களும், துறைமுக காவலர்களும் சரணடைய கையை உயர்த்தினர். சோழ நாவாய்கள் துறைமுகத்தை ஆக்கிரமித்து சுற்றி வளைத்து நின்றன. உயிரிழந்தோர், காயமுற்றவர்கள் தவிர்த்து மீதமிருந்தவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். இளங்குமரன் மாநாக்காவாரம் துறைமுகத்தின் கலங்கரை கோபுரத்தின் மீது புலிக் கொடியை பறக்க விட்டான். சோழ கடற்படை வீரர்கள் கரையில் நுழைந்தனர். நாவாய்கள் நங்கூரம் பாய்ச்சி நிற்க, இன்றும் நாளையும் வீரர்கள் ஓய்வு கொள்ள இளங்குமரன் உத்தரவிட்டான்.
சிறை பிடிக்கப்பட்ட ஸ்ரீவிசயத்தின் வீரன் ஒருவன், சோழப்படை வீரர்களை எச்சரிக்கை செய்தான். துறைமுக எல்லைகளை கடந்து கானகத்திற்குள் செல்லாதீர்கள்….!! என மீண்டும் மீண்டும் எச்சரித்தான். அதை சோழ வீரர்கள் காதில் வாங்கவே இல்லை. கானகத்திலிருந்து துள்ளி வந்த சில புள்ளி மான் களையும், காட்டுக் கோழிகளையும் கண்ட சோழ வீரர்கள், “ஆஹா….!! அருமையான கறி விருந்துக்கு பொருட்கள் கிடைத்து விட்டன”, என கூறிக்கொண்டு அவற்றை வேட்டையாட சென்றனர். ஸ்ரீ விசய வீரன் சங்கிலிகளால் கட்டப்பட்டு இருந்தான். அவன் குரல் மட்டும் ஓயாது எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தது.
அதை துறைமுகத்தில் இருந்த ஒரு மர அறையிலிருந்து கேட்ட இளங்குமரனும், சென்னியும் அவனை நோக்கி வந்தனர்.
ஏன் இப்படி கத்துகின்றாய்? என சென்னி கேட்டான். சோழ தலைவர்களே!.. உங்கள் வீரர்களை தடுங்கள்!. கானகம் நோக்கி செல்ல வேண்டாம்!! வேட்டையாட வேண்டாம்!! ஆபத்து…. ஆபத்து…. என்று மீண்டும் அவன் புலம்பினான்.
சென்னி அவனை அதட்டினான். “நீ வாயை திறந்தாய் என்றால் கடலுக்குள் வெட்டி எறியப்படுவாய்” என்றான். அவன் கூறியதை காதில் வாங்கிக் கொள்ளாத அந்த வீரன், மீண்டும் கத்த தொடங்கினான்.
இளங்குமரனுக்கு அவன் கூறுவதில் ஏதோ அர்த்தம் இருப்பதாக தோன்றியது. அதற்குள் சென்னி, அவனை அடிக்கப் பாய்ந்தான். அதை தடுத்த இளங்குமரன்!.. வீரனே! நீ சொல்ல விழைவது என்ன? என்பதை விளக்கமாக கூறு, என்றான்.
வீரன் உதடுகளும், கண்கள் படபடத்தன. தலைவரே! அந்தக் கற்குவியல்களுக்குப் பின்புள்ள காடுகளுக்குள் செல்ல வேண்டாம். நாங்கள் யாரும் எப்போதும் செல்வது கிடையாது. இந்த “பெரிய நாக்காவரம்” தீவில் அபாயம் உள்ளது. இங்குள்ள பூர்வகுடிகளிடம் சிக்கினால், உயிர் போய்விடும். அவர்கள் இந்த தீவிலும், அடுத்து வரும் இரு தீவுகளிலும் அதிக அளவில் காணப்படுகின்றனர். விஷ ஊசிகளாலும், விஷ அம்புகளாலும், மறைந்திருந்து தாக்கும் அவர்களிடம் தப்பிக்க இயலாது…. என்றான்.
அப்படி என்றால், சோழ போர்க்கலங்கள் இப்பகுதியை கடந்து மறு பகுதியில் சென்றபோது இதுதான் நிகழ்ந்ததா? என இளங்குமரன் ஸ்ரீவிசயத்தின் வீரனிடம் கேட்டான். அப்போது கானகத்திற்குள் சென்ற சில சோழ வீரர்கள் அலறும் ஒலியும், அதன் பின் அமைதியும் நிலவியது. ஸ்ரீவிசயத்தின் வீரன் கூறினான்….
ஆபத்து ! வந்துவிட்டது…. உடனே படைவீரர்களும், நீங்களும் மரக்கலங்களுக்கு தப்பிச் செல்லுங்கள். இங்கே நிற்காதீர்கள்…. போய் விடுங்கள்!….. என சத்தமிட்டான்.
இளங்குமரன் தன் இடையிலிருந்த சங்கெடுத்து ஒலியெழுப்ப, சோழ வீரர்கள் நாவாய்களுக்கு சென்று, வேகமாக ஏறத் தொடங்கினர். இளங்குமரனும், சென்னியும் அந்த ஸ்ரீ விசயத்து வீரனை உடன் அழைத்துச் செல்ல முயன்றபோது, அவன் வர மறுத்துவிட்டான். ஏனெனில் அவன் காயப்பட்டிருந்தான். அதற்கு பதிலாக அவர்களை நாவாய்களுக்கு திரும்ப அவசரப்படுத்தினான்.
கரையிலிருந்து சுமார் ஒரு கல் தொலைவில் நின்றிருந்த நாவாயை, நீந்தியும், சிறு படகுகள் மூலமும் சோழ வீரர்கள் எட்டினார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஆத்திரமும், வன்மமும் உண்டாகி இருந்தது. யார் இந்த பூர்வகுடிவாசிகள்? அவர்களை அழித்தொழிக்க வேண்டும்.! என பேசியபடி இருந்தனர்.
இளங்குமரனும், சென்னியும் அவர்களின் நாவாயை எட்டிய அடுத்த கணம்,!!!…. பின்னே ஒரு படகில் வந்து கொண்டிருந்த சிலர் சோழ வீரர்களின் அலறல் ஒலி கேட்டது.
இளங்குமரனும் சென்னியும் திரும்பி கரையை பார்க்கும் போது, சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட கருப்பான உயரமான உருவத்தில் சிலரும்….. மஞ்சளும் குள்ள உருவமாக சிலரும்…. கானகத்திலிருந்து வெளிப்பட்டனர். மஞ்சள் நிறத்தவரும், கருப்பினத்தவரும் …. ஆண்களும், பெண்களுமாக வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் கைகளில் வைத்திருந்த ஆயுதங்களும் வித்தியாசமாக இருந்தது. அம்புகளை தெளிவாக அதே வேளையில் சரியான குறியுடன் செலுத்தினர். மஞ்சள் நிறத்தவர் குழல் போல எதையோ வாயில் வைத்து ஊத, அவற்றிலிருந்து விஷ ஊசிகள் வேல் போல பாய்ந்து வந்தன. சோழ வீரர்கள் தங்கள் வில்லில் நாண் ஏற்றினர். சிலர் வேல் எறிய தயாராகினர்.
அதற்குள் அந்த கூட்டத்தின் தலைவன் போல் இருந்தவன்… ஸ்ரீவிசய வீரனின் குரல்வளையை கடித்து, அவனை அப்படியே தலைக்கு மேல் தூக்கிப் பிடித்தான். மற்றவர்கள் வித்தியாசமாக குரல் எழுப்பியபடி அவனைப் பின் தொடர்ந்தனர். கரைவரை வந்தவர்கள் அங்கேயே நின்று விட்டனர். அவர்கள் குரல் மட்டும் ஓயாது ஒலித்தபடி இருந்தது. ஸ்ரீவிசய வீரனை அந்தக் கூட்டத்தின் தலைவன், குரல்வளையை கடித்து குருதியை குடித்ததைக் கண்டதும், சோழ வீரர்களுக்கு முகத்தில் பீதி ஏற்பட்டது. அவர்கள் அப்படியே உறைந்து நின்றனர். கரையில் கடந்த சில சோழ வீரர்களையும், கரையைத் தாண்டி கடலுக்குள் இறந்து கிடந்த ஒரு சில ஸ்ரீவிசயத்தின் வீரர்களையும் விஷ அம்புகளில் வீழ்த்தப்பட்டு கிடந்த மற்ற வீரர்களையும், சிலர் இழுத்துக் கொண்டு கரை திரும்பினர். கரையின் மணலில் அந்த உடல்களை இழுத்து இழுத்து, அங்கும் இங்குமாக வெறி கொண்ட குரல் எழுப்பியவாறு உலவினர். சிலர் மண்ணை பறிக்க, அந்த உடல்களை அதற்குள் தள்ளி புதைத்தனர். ஸ்ரீவிசயத்தின் வீரன், உயிரற்ற உடலை தரையில் எறிந்தான் கூட்டத்தின் தலைவன். பின் காட்டில் கடந்த சில மரத்துண்டுகளையும், கட்டைகளையும் ஒன்று கூட்டி தீ வைத்தனர். அவர்கள் தீ பற்ற வைக்கவும், ஆதவன் மேற்கில் மறையவும் நேரம் கச்சிதமாக இருந்தது. ஸ்ரீவிசயத்தின் வீரன் நெருப்பில் தூக்கி போடப்பட்டான்.
துறைமுகத்தில் மரத்தால் உருவாக்கப்பட்டிருந்த அலுவல் அறையின் பெரிய தூண்களும், பலகைகளும் பெயர்த்து எடுக்கப்பட்டு தீயில் இடப்பட்டது. தீ கொழுந்து விட்டு எரிய அனைவரும் அதை சுற்றி ஆடத் துவங்கினார்.
இளங்குமரன், சென்னி உள்ளிட்ட அத்தனை சோழ வீரர்களுக்கும், ஆச்சரியம். அதேவேளையில் ஒருவித பயமும் ஏற்பட்டது. இளங்குமரனுக்கு ஓலைச்சுவடியில் இருந்த குறிப்புகள் நினைவிற்கு வந்தது. ஆனால் இவர்களை வென்றே ஆகவேண்டும். “கத்தியை விட புத்தி பெரியது” இவர்களை விடிந்த பிறகு வேறு விதமாக கையாள வேண்டும் என்று தீர்மானித்தான்.
விடிய விடிய நெருப்பு அணைக்கப்படவில்லை. குழுமியிருந்த அந்தக் கூட்டமும் கலையவில்லை . அவர்கள் இரவு முழுவதும் அங்கேயே இருந்தனர்.
அடுத்த நாளின் காலை பொழுதில், நெருப்பு அணைந்து, கடற்கரைப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அவர்களில் பலர் உறங்கியிருக்க, சிலர் மட்டும் விழித்திருந்து நாவாய்களை கண்காணித்தபடி இருந்தனர். இளங்குமரன் தயாரானான் ….. சென்னி அவனிடம் எவ்வளவோ கூறியும் அவன் கேட்கவில்லை . அவன் படகில் ஏறி, தானே துடுப்பை வலித்துக் கொண்டு கரை நோக்கி பயணப்பட்டான். அதனைக் கண்ட சோழ வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போக வேண்டாம் என அவர்கள் கூக்குரலிட்டனர்.
கூக்குரல்கள் நாவாயில் எழுவதையும், படகு ஒன்று கரைக்கு வருவதையும் கண்ட அந்த தீவுவாசிகள் மீண்டும் ஆத்திரமடைந்தனர். இளங்குமரனை திரும்பிச் செல்ல சைகை செய்தனர். சிலர் கோபத்தில் நச்சு அம்புகளை எய்ய முயற்சித்தனர். ஆனால் அவர்களை அவர்கள் தலைவன் தடுத்தான். பின் திரும்பிச் செல்ல வற்புறுத்தி சைகை செய்தான். இளங்குமரன் பதிலுக்கு சைகை செய்தான். அந்த சைகை கரையில் இருந்த தலைவனுக்கு புரிந்திருக்க வேண்டும். அவன் அனைவரையும் அமைதிப்படுத்தினான். இளங்குமரன் கரையெட்டும் வரை, இருபுறமும் அமைதி நிலவியது. சோழ வீரர்கள் நாவாய்களை, சென்னியின் உத்தரவுப்படி சிறிது தூரம் கரையை நோக்கி நகர்த்தி இருந்தனர். அம்புகள் கரையை தொடும் தூரம் வரை நெருங்கி இருந்தவர்கள், தங்கள் வேல்களையும், அம்புகளையும் நாணேற்றி தயாராக வைத்திருந்தனர். இளங்குமரன் கரையை நெருங்கியதும், இடையில் வைத்திருந்த இரு குறும் வாள்கள், மற்றும் தன் உடைவாளை, கரையில் இருந்த அவர்கள் பார்வையில் படும்படி……. படகிலேயே வைத்து விட்டு, மணல் திட்டில் இறங்கினான். இருகைகளையும் கூப்பியபடி மணல் திட்டை கடந்து, அவன் அவன் அனைவரையும் அமைதிப்படுத்தினான்.
இளங்குமரன் கரையெட்டும் வரை, இருபுறமும் அமைதி நிலவியது. சோழ வீரர்கள் நாவாயகளை, சென்னியின் உத்தரவுப்படி சிறிது தூரம் கரையை நோக்கி நகர்த்தி இருந்தனர். அம்புகள் கரையை தொடும் தூரம் வரை நெருங்கி இருந்தவர்கள், தங்கள் வேல்களையும், அம்புகளையும் நாணேற்றி தயாராக வைத்திருந்தனர். இளங்குமரன் கரையை நெருங்கியதும், இடையில் வைத்திருந்த இரு குறும் வாள்கள், மற்றும் தன் உடைவாளை, கரையில் இருந்த அவர்கள் பார்வையில் படும்படி படகிலேயே வைத்து விட்டு, மணல் திட்டில் இறங்கினான். இருகைகளையும் கூப்பியபடி மணல் திட்டை கடந்து, அவன் கரையில் கால்பதிக்க, அந்த உயரமான கருத்த தேகம் உடைய தீவுவாசிகளின் தலைவன், அவனை ஆச்சரியத்தோடு பார்த்தான். இளங்குமரன் உடையும், அவன் கைகள், கழுத்தில் அணிந்திருந்த ஆபரணங்கள் போன்றவற்றை பார்த்து வாயைப் பிளந்தவன்….!! அவனிடம் சைகையில் பேசத் தொடங்கினான். இளங்குமரன் அவனிடம் தங்களை யார் என்றும்? எதற்காக இந்த தீவிற்கு வந்தோம் என்பதையும் விளக்க முயற்சித்தான். இருவருக்கும் இடையே பல்வேறு சைகைகள், சில நாழிகைகள் நடந்தன.
இறுதியாக தலைவன், இளங்குமரனை அவர்களோடு வருமாறு பணித்தான். இளங்குமரன் அவர்களோடு கானகத்தின் உள்ளே சென்றான். கானகத்தின் உள்ளே சென்ற இளங்குமரன் கண்கள் மகிழ்விலும், ஆனந்தத்திலும் நிறைந்தன. உயரமாக வளர்ந்து செழித்து இருந்த மரங்களும், செடிகளும் சூழ்ந்திருக்க இடையிடையே தென்னை மரங்கள் தோப்புகளாக இருந்தன. சிறியதொரு மலையும் காணப்பட்டது. அந்த மலையிலிருந்து நீர்வீழ்ச்சி ஒன்று பாய்ந்து ஓடியது. அதன் ஓரத்தில் இருந்த சோலைகளும், அதன் உயர்ந்த மரங்களின் இடையே கட்டப்பட்டிருந்த தேன்கூடுகள், நிறைந்து நீரோடையில் சொட்டிக் கொண்டிருப்பதை கண்டான். புள்ளி மான்கள் கூட்டம் கூட்டமாக ஓடி விளையாடியதும், கானகவாசிகளிடம் சினேகமாக வந்து ஒட்டி உறவாடியதும், இளங்குமரனை வியப்பில் ஆழ்த்தின. நீண்டதொரு பயணம் என்றாலும், அலுப்போ, துளி வியர்வையோ குமரனுக்கு ஏற்படவில்லை. அவர்கள் சிறிய மேடான பகுதியை கடந்து சிறிது தூரம் சென்ற பிறகு, நிறைய குடிசைகளும் வசிப்பிட பகுதிகளும் தென்பட்டன. தென்பட்டன. நிறைய கானக வாசிகள் அங்கே இருந்தனர். அவர்கள் இளங்குமரன் சூழ்ந்துகொண்டு, அவனைத் தொட்டு தொட்டு பார்த்தனர். பயணம் அந்த கிராமத்தின் நடுவே இருந்த கோயில் போன்ற பகுதியில் நிறைவடைந்தது.
தலைவன் இளங்குமரனிடம், மரத்தில் செய்யப்பட்டிருந்த ஒரு சாமி உருவத்தைக் காட்டி ஏதோ சைகையில் கூறினான். இளங்குமரனுக்கு விளங்கிற்று..!! இவர்கள் தன்னிடம் சத்தியம் செய்ய கேட்கிறார்கள் என்று. தீர்மானமாக அவர்கள் அனைவர் முன்பும் தன் விரலை, கீறி ரத்தத்தில் சத்தியம் செய்தான். சத்தியம் யாதெனில், “கானகத்தின் உயிர் வாழும் ஜீவராசிகள்…. கானகத்தின் மரங்கள்…. இயற்கை சார்ந்த எதற்கும் தீங்கிழைப்பது கிடையாது. தலைவன் அந்தஸ்தில் உள்ளவர் தவிர வேறு யாரும் கானகத்திற்குள் பிரவேசிக்கக் கூடாது ” போன்றவைதான். அவர்கள் தலைவன் அவற்றை அடையாளப்படுத்தி காட்ட காட்ட இளங்குமரன் ஒவ்வொரு செயலுக்கும் உறுதி கூறினான்.
அவர்கள் தலைவனும் மற்றவர்களும் உற்சாக குரல் எழுப்பிய பின், அவர்கள் குமரனுக்கு பருக ஏதோ கொடுத்தனர். இளங்குமரன் சமாதானத்தின் அடையாளமாக அதை பருகினான். பின் கானகவாசிகள் சிலருடன், மீண்டும் கடற்கரை நோக்கி பயணித்தான். கரையை அவன் எட்டும் நேரத்தில் லெமூரியா கடந்து சோழப் பேரரசின் தலைவனும் ஜெயசிம்ம சரபன், பண்டித சோழன் நிருப திவாகரன், தான வினோதகன் என்றெல்லாம் புகழப்பெற்ற சக்கரவர்த்தி ராஜேந்திர சோழரின் நாவாய், “மாநாக்காவாரம்” தீவை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தது.
“அலைகடல் நடுவுள் பலகலஞ் செலுத்திச்
சங்கிராம விசையோத் துங்கவர்ம
னாகிய கடாரத்தரசனை வாகையம் பொருகடல் கும்பக் கரியொரும் அகப்படுத்து உரிமையிற் பிறக்கிய பருநிதிப் பிறக்கமும் ஆர்த்து அவன் அகநகர்ப் போர்த்தொழில் வாசலில்
விச்சாதிரத் தோரணமும் மொய்த தொளிர் புனைமணிப் புதவமும் கனமனிக் கதவமும் நிறைநீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும்”
(இராஜேந்திரன் மெய்கீர்த்தி)
கடாரத்தில் புலிக் கொடியைப் பறக்கவிட்ட இராஜேந்திரர், விஜயதுங்கவர்மன் கோட்டை வாயிலில் இருந்த விச்சாதிரத் தோரணத்தையும் பலவகைக் கற்களும், புஷ்பராகமும், பொரித்த பொற்கதவுகளையும், பெயர்த்தெடுத்து வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டு, தாயகம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார். அவரின் பெரிய நாவாயை சுற்றி சோழர் கடற்படை நாவாய்கள் சூழ்ந்து வந்தன. நாவாயின் மேற்தளத்திலிருந்த அறையில் அமைக்கப்பட்டிருந்த பஞ்சனையில் கண்ணயர்ந்து இருந்தார் சோழ சக்கரவர்த்தி.
முன்னதாக புறப்பட்டிருந்த சோழர் கடற்படையின் ஒரு பிரிவு, இந்நேரம் தாயகத்தை நெருங்கி இருக்கும் என்று பேசியபடி வெளியே காவலுக்கு நின்று கொண்டிருந்த வீரர்கள், கடற்பரப்பை கண்காணித்துக் கொண்டிருந்தனர். அரசருக்கு பணிவிடை செய்யும் சேவர்களும், பிற வீரர்களும், பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்க முன்னே சென்ற நாவாயிலிருந்து முரசறைந்து செய்தி ஒன்று பரிமாறப்பட்டது.
இராஜேந்திரரின் நாவாய்க்கு செய்தி கிடைத்ததும், அதை பெற்றுக்கொண்ட வீரன் ஒருவன் சோழ கடற்படையின் தலைமை வைத்தியரும், பேரரசரின் ஆலோசகருமான சஞ்சீவி சித்தரை அணுகினான். விபரம் அறிந்து அதிர்ந்து போனாலும், வேகமாக செயல்பட்டவர் நூல் ஏணியில் ஏறி பாய்மர கண்காணிப்பு மாடத்தை எட்டினார். எதிரே தெரிந்த கடற்பரப்பில் சோழக்கொடி தாங்கிய நாவாய்கள் ஒரு தீவை சூழ்ந்து நிற்பதை கண்டவர், மாலை நெருங்கும் வேளையில் கரையை எட்டுவதா? அல்லது தாக்குதல் செய்வதா? என குழம்பினார். பின் ஏதோ தனக்குத் தானே தீர்மானித்துக் கொண்டவர் பாய் மரத்திலிருந்து இறங்கி வந்தார்.
பேரரசன் முரசொலி கேட்டு கண் விழித்திருந்தான். அறையின் மூலையில் இருந்த சிறிய இடத்தில் முகத்தை கழுவியவர், அவர் அறை கதவை திறந்துகொண்டு வெளியே வரவும் சஞ்சீவ சித்தர் அவரை நெருங்கவும் நேரம் சரியாக இருந்தது.
என்ன வைத்தியரே!. ஏன் இந்தப் பதட்டம்? முரசொலி ஒலித்தது ஏன்? கடலில் ஏதேனும் பருவ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா?!! இல்லை அபாயகரமான செய்திகள் கிடைத்துள்ளதா?? என்றார் இராஜேந்திரர்.
மன்னவா!.. மூன்று தினங்களுக்கு முன்பே கிளம்பிய நம் சோழ கடற்படையின் இளங்குமரன் தலைமையிலான பிரிவு, இதோ இன்னும் சில கடல் கல் தொலைவிலிருக்கும் “மாநாக்காவாரம்” துறைமுகத்தில் நிற்கின்றன. ஆனால் வீரர்களின் நடமாட்டமோ, நாவாய்களில் ஆரவாரமோ இல்லை. மாலை மங்கத் தொடங்கி விட்ட இந்த பொழுதில், நாம் கரையை எட்டுவதா? போர்புரிய தேவையுள்ளதா? என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் இளங்குமரன் உள்ளிட்ட நம் படைக்கு, என்னவாயிற்று என்பது புரியவில்லை என்றார்!! சஞ்சீவ சித்தர்.
மன்னன் நாவாயின் முகப்பில் இருந்த பாய் மரத்தின் பிடிக் கயிருக்கு அருகில் சென்று, தீவை நன்றாக கூர்ந்து கவனித்தான். சோழர்களின் நாவாய்கள் அரைவட்டமாக தீவை ஒட்டி நின்றிருக்க, “மாநாக்காவாரம்” துறைமுக கலங்கரை கோபுரத்தை கண்ட மன்னனின் முகம் மலர்ந்தது. நாவாய்களை தாண்டிய மணற்பரப்பில், துறைமுகம் போரினால் சேதமடைந்த காட்சி தெரிந்தது. ஒரு முனை அடர் காடுகளாகவும், பார்வையில் தெரியும் பகுதி காலியான நிலப்பகுதியாகவும் தெரிந்தது. அந்த பகுதியில் இருந்து புகை எழுதுவதை கண்ட சோழ வேந்தன் மகிழ்ச்சியுற்றான். பின் சஞ்சீவ சித்தரிடம் திரும்பிய அரசன், “வைத்தியரே நாவாய்களை பொறுமையாக துறைமுகத்தை நோக்கி, நகர சொல்லுங்கள். நங்கூரம் இறக்க உத்தரவிடுங்கள். பதட்டம் வேண்டாம். பொழுது புலரும் முன் நமக்கு செய்தி வரும் என கூறினார். சஞ்சீவ சித்தருக்கு ஆச்சரியம். “அரசன் மிகவும் மதிநுட்பம் உடையவன். நிச்சயமாக ஏதோ ஒரு அனுகூலமான விஷயத்தை அரசன் நோக்கி இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். ஆனால் வேந்தனிடம் கேட்கவில்லை.
சோழப் பேரரசனின் நாவாயும், முன்னே நின்றிருந்த சோழக் கடற்படை நாவாய்களுக்குப் பின் பத்துக் கல் தொலைவில் நங்கூரம் இறக்கின.
அதே வேளையில் “மாநாக்காவாரம்” தீவின் வெட்டவெளி மணல் பரப்பில், சோழப் படைகள் கூடாரம் அமைத்திருந்தன. உணவுகள் சமைத்தும், நெருப்பு மூட்டி ஒளி உண்டாகியும், வீரர்கள் அந்த தீவின் அற்புதத் சூழலை அனுபவித்துக் கொண்டிருந்தனர். கடல் பரப்பை கண்காணித்துக் கொண்டிருந்த ஒரு வீரன் ஓடிவந்தான். இருள் பரவத் தொடங்கி இருந்த அந்த வேளையில், கையில் பந்தம் பிடித்தபடி வந்தவன்… இளங்குமரனிடம் புதிதாக நாவாய்கள் வந்திருப்பதை கூறினான். குமரனும், சென்னியும் பரபரப்படைந்தனர். அதேவேளையில் நிதானம் கொண்ட இளங்குமரன் கலங்கரை விளக்கின் கோபுரத்தை நோக்கி விரைவாக சென்றான். வீரர்கள் இருவர் உடன் வர கலங்கரை விளக்கு கோபுரத்தில் ஏறியவன், கடல் பரப்பை உற்று நோக்கினான். ஒரு விஷயம் மட்டும் குமரனுக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்தது. நின்று கொண்டிருந்த புதிய நாவாய்களின் நடுவே, பிரதானமாக இருந்த நாவாய் ஒன்றின் முனைப்பகுதியில், புலி ஒன்று முகம் காட்டிக் கொண்டிருந்தது. வீரன் ஒருவனை பந்தம் எடுத்துக்கொண்டு மேலே வரக் கட்டளையிட்டான் இளங்குமரன். அவன் வந்ததும் அவனிடம் இருந்து பெற்றுக்கொண்ட பந்தத்தை நாவாய்களை நோக்கி ஆட்டினான். சற்று நேரத்திற்கு கடலில் இருந்த நாவாய்களில் எந்த நகர்வும் ஏற்படவில்லை. மீண்டும் ஒருமுறை இளங்குமரன் பந்தத்தை ஆட்டிக் காட்ட இந்த முறை பிரதான நாவாயிலிருந்து, பதிலுக்கு தீப்பந்தம் ஆடப்பட்டது.
இளங்குமரன் மகிழ்விற்கு அளவேயில்லை. மளமளவென்று கோபுரத்திலிருந்து கீழே இறங்கியவன், சென்னியிடம் விவரத்தை பகிர்ந்தான். பின் சென்னி படைவீரர்களை நோக்கியும், இளங்குமரன் கடற்கரை நோக்கியும் பயணமாகினர். சற்று நேரத்திற்கெல்லாம் இளங்குமரன் ஒரு சிறு படகின் மீது பயணப்பட்டு சோழ வேந்தனின் நாவாயை அடைந்தான். சோழப் படை முகாமுக்கு திரும்பி இருந்த சென்னிக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. தீவுவாசிகள் இருவர் அங்கே நின்று கொண்டிருந்தனர். அவர்களின் முகத்தில் கலவரம் தெரிந்தது. சென்னியிடம் அவர்கள் இளங்குமரனை காண வேண்டும் என்று கூறி, சைகை செய்தனர். இளங்குமரன் நாவாய்க்கு சென்றிருப்பதை சைகை மூலம் காட்டி தெரிவிக்க முயன்றான் சென்னி.
அதற்குள் வந்த இருவரில் ஒருவன் சட்டென்று தரையில் விழுந்தான். இருமுறை உடல் வெட்டியவன் உயிர் பிறந்தது. மற்றொரு தீவுவாசிக்கு கண்களில் கர்ணகடூரமான பயம் தெரிவதை சென்னி உணர்ந்தான். உடனே அந்த தீவுவாசியை சமாதானப்படுத்திய சென்னியை அவன் நச்சரிக்கத் தொடங்கினான். இளங்குமரனை மீண்டும் மீண்டும் கேட்டான். சென்னி எவ்வளவோ முறை நாவாய்களை காட்டி சைகை செய்ததை அவன் புரிந்து கொள்ளவில்லை. அதற்குள் சோழ வீரர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. தீவுவாசி ஒருவன் இருந்தது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சென்னி வீரர்களில் ஒருவனிடம் கலங்கரை கோபுரம் சென்று, பந்த ஒளி மூலம் நாவாய் நோக்கி சைகை காட்ட கூறினான். அவன் ஓடிச்சென்று கலங்கரை விளக்கின் மீது ஏறி, பந்தம் மூலம் சைகை காட்டினான்.
சோழ சக்கரவர்த்தியுடன் உரையாடிக் கொண்டிருந்த இளங் குமரன், நடந்த விவரங்களை பூரணமாக சக்ரவர்த்தியிடம் எடுத்து கூறியிருந்தான். சக்கரவர்த்தி எதேச்சையாக கலங்கரை கோபுரத்தின் மீது தெரிந்த ஒளி சைகையை கவனித்தார். குமரா…!! அங்கே பார்!! கலங்கரை கோபுரத்திலிருந்து சைகை ஒளி தெரிகின்றது, என்றார் சோழ சக்கரவர்த்தி திரும்பி கலங்கரை கோபுரத்தை நோக்கிய குமரனுக்கு சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது. எனினும் சென்னிதான் தன்னை அழைக்கின்றான் என்பதை உணர்ந்து கொண்டவன், சக்கரவர்த்தியிடம்… சென்னி அவசரமாக அழைப்பதாக உணர்கின்றேன் என்றான்.
சரி வா போகலாம் என்றார் சக்கரவர்த்தி. மன்னர் மன்னா !!!.. முதலில் நான் சென்று விபரம் அறிந்து தங்களுக்கு தெரிவிக்கின்றேன். பிறகு நீங்கள் வருவதே நலமாக இருக்கும் என்றான் இளங்குமரன். இராஜேந்திரர் இளங்குமரனை நோக்கி…. குமரா ஆபத்தை சேர்ந்தே எதிர்கொள்வோம். பாதகமில்லை !!!… நம் படைகள் தான் நிலப்பரப்பில் உள்ளனவே!!?? என சமாதானம் கூறியவர், உடனே புறப்பட ஆவண செய்யுமாறு உத்தரவிட்டார். அடுத்த சில நாழிகைகளில்…. இளங்குமரன், சக்கரவர்த்தி, மற்றும் வைத்தியருடன் புறப்பட்ட படகு, வேகமாக கரையை ஒட்டி இருந்த மணல் திட்டை எட்டியது. மூவரும் வேகமாக படை முகாமை நோக்கி நடந்தனர். அதற்குள் முகாமிலிருந்த இரண்டாவது தீவுவாசியும், மூர்ச்சையடைந்து தரையில் வீழ்ந்தான். இதனிடையே இளங்குமரன், சக்கரவர்த்தி வைத்தியர் மூவரும் முகாமை எட்டினர். சென்னி அரசரை வணங்க, சோழப் படை வீரர்கள் தலைதாழ்த்தி பேரரசருக்கு வணக்கம் செலுத்தினர். சென்னி நடந்தவற்றை முழுமையாக மூவரிடமும் விளக்கினான். வைத்தியர் காலம் தாழ்த்தாது விழுந்து கிடந்தவர்களை பரிசோதித்தார். பின் உதட்டைப் பிதுக்கி கதர் இருவரும் இறந்து விட்டதை உறுதி படுத்தினார்.
இளங்குமரன் கானகத்தின் முகப்பை அடைந்து, அங்கிருந்த படியே கானகத்தை நோக்கி சமிஞ்சை ஒலி ஒன்றை எழுப்பினான். குரல் எழுப்பிய சில நாழிகைகள் கழித்து பதில் வந்தது. ஒலியின் தன்மையை கொண்டு தகவலை உணர்ந்து கொண்டவன், மீண்டும் சமிஞ்சை செய்ய, சிலர் ஓடி வரும் ஒலியும், தீ எரியும் ஒளியும் தெரிந்தது. மூன்று தீவுவாசிகள் பெரியக் கட்டைகளை கைகளில் ஏந்தி ஓடி வந்தனர். அவர்கள் மூவருடைய கட்டைகளும் பாதி எரிந்தும், எரியாமலும் இருந்தன. வந்தவர்கள் குமரனிடம் சைகையில் ஏதோ கூறினார்கள். பதிலுக்கு இளங்குமரன், பேரரசரையும், அருகில் நின்ற வைத்தியரையும் காட்டி குறிப்பளித்தான். அவர்கள் மூவரும் தலையசைக்க, சென்னியை அங்கேயே நிற்க கூறிவிட்டு… இளங்குமரன், சக்கரவர்த்தி, வைத்தியர் மூவரும் அந்த கானகவாசிகளுடன் புறப்பட்டனர். கையில் வைத்திருந்த அணையும் நிலையில் இருந்த கட்டைகளில், மூவரும் இடுப்பில் இருந்து ஒரு பொடியை எடுத்துத் தூவினர். உடனே நெருப்பு பற்றி எரிய தொடங்கியது. இராஜேந்திரர் வியந்து போனார். கானகவாசிகளின் சைகை மொழியும், அதை இளங்குமரன் கையாண்ட விதம் குறித்தும், கானகவாசிகளின் தீப்பந்த யுக்தியும் அரசருக்கும், வைத்தியருக்கும் பெரும் விந்தையாக இருந்தது.
அரை நாழிகை வேகமான பயணத்தில், அவர்கள் அந்த தீவுவாசிகளின் கிராமத்தை அடைந்தனர். அங்கே பலர் இறந்து கிடந்தனர். பலர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். மூவருக்கும் பெரும் அதிர்ச்சி தொற்றிக்கொண்டது. அதற்குள் தீவுவாசிகளின் தலைவன் இளங்குமரனை எதிர்கொண்டு வரவேற்றான்.
அவனிடம் சைகைளிலும், குரல் மூலமும் தகவல்களை தலைவன் கூற, அதை அரசரிடமும், வைத்தியரிடமும் இளங்குமரன் விளக்கினான்.
நேற்று இரவிலிருந்து இவர்களில் பலருக்கும் காய்ச்சல் ஏற்பட்டதாகவும், இவர்கள் கொத்துக் கொத்தாக இறக்க தொடங்கியதாகவும் தலைவன் கூறுகிறான். ஏதோ கடவுள் குற்றம் ஏற்பட்டு விட்டதாக இவர்கள் கருதுகின்றனர்….. என்றான் இளங்குமரன். கடவுள் குற்றமா? என்ற இராஜேந்திரர், அப்படி தவறு என்ன நடந்தது? என விசாரி என்றார். அரசரும் இளங்குமரனும், அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த வேளையில் சஞ்சீவ சித்தர், அவர்களில் சிலரை நாடி பிடித்து சோதித்து இருந்தார். சட்டென்று முகம் மாறியவர். பேரரசே இவர்களின் நோய்க்கு தெய்வ கோபம் காரணம் அல்ல.!!???.. நாமே காரணம்!!! என மெல்லிய குரலில் கூறினார்.
சக்கரவர்த்தி அதிர்ச்சியும் கோபமும் கலந்த குரலில் கேட்டார், என்ன சொல்கிறீர் வைத்தியரே? நாம் எவ்வாறு இவர்களுக்கு ஏற்பட்ட நோய்க்கு காரணமாக முடியும்? என்றார்.
“முடியும் அரசே இவர்கள் பிறந்தது முதல் இறக்கும் வரை இயற்கையோடு வாழ்ந்து இயற்கையின் சூழலுக்கு ஏற்ப பழகியவர்கள். இவர்களுக்கு வெளிப்பகுதியில் இருந்து வருபவர்களிடம் உள்ள உடல் எதிர்ப்பு சக்தி இருக்காது. இவர்களை நம்முடைய சுவாச சூடு கூட எளிதாக நோய்வாய்ப்பட வைத்துவிடும். மேலும் நம்முடைய உணவுப் பழக்கமும், நாம் உபயோகிக்கும் உணவு பொருட்களிலுள்ள வாசமும் கூட விஷமாக தாக்கக்கூடும். இவர்களுக்கு ஏற்பட்டுள்ள விஷக்காய்ச்சல் உயிரிழப்பும் அதுவே என உறுதிபடக் கூறினார். இதற்கு மருந்து எதுவும் கொடுத்து குணப்படுத்த இயலாதா வைத்தியரே!!?? என்றார் பேரரசர்.
இல்லை அரசே நாம் உபயோகிக்கும் எந்த மருந்தையும் இவர்களுக்கு கொடுக்க இயலாது. காரமும், புளிப்பும், கசப்பும் கலந்திருக்கும் நம் மருந்துகள் மேலும் இவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். நம்முடைய மருந்துகளும், வைத்திய முறைகளும் இவர்களுக்கு குணம் தர இயலாது என்றார்… சஞ்சீவ சித்தர்.
வைத்தியரே என் கண் முன்னே ஒரு தவறும் செய்யாத இந்த பூர்வகுடி மக்கள் கொத்துக்தாக இறப்பதை எப்படி காண இயலும். நம்முடைய படைகளை உடனடியாக விலக்கிக் கொள்ள செய்துவிட்டால், இவர்களுக்கு குணம் ஏற்படும் என்கிறீர்கள். அதை இப்போதே செயல் படுத்திவிடலாம். ஆனால் உயிருக்கு போராடுபவர்களையும், உயிரோடு இருப்பவர்களையும் காப்பாற்ற வழி ஏதேனும் கண்டுபிடியுங்கள் என்றார். சக்கரவர்த்தி இதைக் கூறியபோது “குடிமக்களை காக்கத் துடிக்கும் அரசனாக மட்டுமல்லாது, ஒரு தகப்பனாகவே மாறியிருந்தார். அரசர் அவரின் விழிகளில் கட்டி நின்ற கண்ணீ ரை” இளங்குமரனும் வைத்தியரும் காணத் தவறவில்லை .
வைத்தியர் சிறிது நேரம் தீவிரமாக யோசித்த படியே சிறிது தூரம் நடந்தார். ஒரு கானகவாசி சிறுவன், கையில் வைத்திருந்த வில்லையும், கல்போன்ற பொருளையும், கண்ட போது அவருடைய முகத்தில் நம்பிக்கை ரேகை பரவத் தொடங்கியது. வேகமாக இளங்குமரனிடம் திரும்பியவர், குமரா பூர்வகுடி தலைவனிடம் அதோ அந்த சிறுவன் வைத்திருக்கும் வில் செய்யப்பட்ட மரத்தின் இலைகளையும், அவன் கையில் வைத்துள்ள உருண்டை பற்றியம் விசாரி. அவை இரண்டும் எனக்கு உடனே வேண்டும். மேலும் மலைத்தேன் இருக்குமெனில் அதையும் கொண்டு வர சொல் என்றார். இளங்குமரன் பூர்வகுடி தலைவனிடம் சைகையில் தகவல்களை கேட்டான். அவனும் வைத்தியர் கூறியவற்றை கொண்டுவர, மற்றவர்களை அனுப்பினான்.
சற்று நேரத்திற்கெல்லாம் கானகத்தின் உள்ளே சென்ற பூர்வகுடிகள் வைத்தியர் குறிப்பிட்டிருந்த இலைகளையும் பிசின் போன்ற அந்த உருண்டையையும் தேனையும் கொண்டுவந்து வைத்தியர் முன் வைத்தனர். அவற்றைப் பெற்றுக்கொண்ட வைத்தியர் அருகில் இருந்த ஒரு பாறை குழிக்குள், மலை வேம்பு இலைகளை இட்டு, ஒரு கல்லால் அரைக்கத் தொடங்கினார். வைத்தியர் இலைகளை அரைத்ததை கண்ட அந்த பூர்வகுடிப் பெண்கள் வீடுகளுக்குள் சென்று பெரிய மரத்துண்டுகளை கொண்டு வந்தனர். அதன் நடுவே ஒரு குழி இருந்தது. வைத்தியர் செய்வது போன்றே அவர்களும் இலைகளை இடித்து அறைந்து வைத்தியருக்கு உதவினர். அவர்களின் அரவை அனைத்தையும் வைத்தியர் பதம் பார்த்தார். பின் அவற்றை ஒன்றாக ஒரு மறக்குடுவையில் சேகரித்தார் அதிலுள்ள சாரு தெளியும் வரை வைத்தவர், பிசின் கட்டிகளை பாறையின் மீது வைத்து பொடித்தார். அருகில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் இருந்து கனல் துண்டுகள் சிலவற்றை தனியே பிரித்தார். அவற்றின் மீது அந்த பிசின் பொடியையும் மலை வேம்பு தளைகள் சிலவற்றையும் ஒன்றாக போட்டார். அதிலிருந்து எழும்பிய புகை கானகம் முழுவதும் பரவி மணம் வீசியது. சற்று அதிகமாக மீண்டும் மீண்டும் அந்த புகையை போடுமாறு கூறியவர், இளங்குமரன் உதவியுடன் அந்த மலைவேம்பு சாறை வடிகட்டி, அதில் தேனை கலந்து ஒவ்வொருவரையாக அழைத்து குடிக்க கொடுத்தார்.
அதற்குள் கிழக்கு வானில் சூரியன் உதயத்தை தொடங்கியிருந்தான். மருந்தை குடித்து, நறுமண புகையை சுவாசித்தவர்களுக்கு, மேற்கொண்டு காய்ச்சலோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. பூர்வகுடிகளின் தலைவன் பெருமகிழ்ச்சி கொண்டான். விடிந்த பின்பு தான் இராஜேந்திர அரசருக்கும், வைத்தியருக்கும் தாங்கள் ஒரு சொர்க்க புரியில் நிற்பது தெரிந்தது. சுற்றியிருந்த ஒவ்வொரு மரங்களும், செடிகளும் சுனை நீரும், மூங்கிலும் அவற்றை வெட்டி அவர்கள் சேகரித்து வைத்திருந்த அரிசியும், சாம்பிராணி மரங்களும், அவற்றில் வடிந்து கட்டி நின்ற பிசினும், மரங்களுக்கு இடையே கட்டப்பட்டிருந்த தேன்கூடுகளும், இராஜேந்திரரை மலைக்கச் செய்தது. வைத்தியருக்கும் அது ஒரு சஞ்சீவி மலை காடாக காட்சியளித்தது.
விடியும் வரை அங்கிருந்த பாறை மேட்டில் அமர்ந்து இருந்த சோழ சக்ரவர்த்தியை பூர்வகுடி தலைவனும், அவன் மக்களும் வணங்கி நின்றனர். தங்கள் உயிர் காக்க வந்த கடவுளாக பாவித்தனர். ஒரு பெரிய “முத்தை” சோழ சக்கரவர்த்திகளுக்கு பரிசாக அளித்தனர்.
சக்கரவர்த்தி அந்த மக்களின் அன்பில் திக்கு முக்காடிப் போனார். இளங்குமரனை அழைத்த பூர்வகுடி மக்கள் தலைவன் சோழ சக்கரவர்த்தியிடம் கூறுமாறு சில தகவல்களை கூறினான்.
அது என்னவென்றால், “இந்தக் கடவுளை போன்ற மனிதருக்கு நாங்களும் எங்கள் தலைமுறைகளும் கட்டுப்பட்டு இருப்போம். இந்த கடல் பரப்பில் நிகழும் அத்தனை விபரங்களையும் ஒற்றறிந்து அவருக்கு அனுப்பி வைப்போம். எந்த சூழ்நிலையிலும் சோழ சக்கரவர்த்தி, இவரை சார்ந்தவர் தவிர்த்த வெளியாட்களை இந்த மண்ணில் அனுமதியோம்” என்றும், எங்கள் உயிர் உள்ளவரை எங்கள் விசுவாசம் மாறாது” என்பது தான் அந்த தகவல்.
இதைக் கூறிய பின் தலைவன் முதல், குழந்தை வரை தங்கள் கைகளை கிழித்து சோழ சக்கரவர்த்தியின் நெற்றியில் திலகம் இட்டு சத்தியம் செய்தனர். சக்கரவர்த்தி மெய் சிலிர்த்து நின்றார்.
இளங்குமரனை அழைத்தவர், உடனே சோழப் படைகள் தாயகம் திரும்ப உத்தரவிட்டார். அந்த நாளின் உச்சி வேளையில் சோழப் படைகள் பெரியநாக்காவாரம் என்னும் அந்த தீவை விட்டு வெளியேறின.
நாவாயின் முகப்பில் நின்றிருந்த சக்கரவர்த்தி திரும்பிப் பார்த்தார். கலங்கரை கோபுரத்தின் மீது புலிக்கொடி பறந்துகொண்டிருந்தது. இளங்குமரனை நோக்கி திரும்பியவர், குமரா நீ …. இந்த தீவு மக்களின் அன்பை எனக்குப் பெற்றுக்கொடுத்து இருக்கின்றாய். “அவர்கள் நிலப்பரப்பை அவர்களிடமே நாம் ஒப்படைத்து விட்டோம். இதில் எனக்கு பெரிய மனத்திருப்தி. நம்மைப் போன்ற மனிதர்கள், மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசைகளால் மற்றவர்களின் உயிரை அவருக்கே தெரியாமல் குடிப்பவர்கள் ஆனோம்”. “நம் மூச்சுக் காற்றுக் கூட நஞ்சு” என்பதை இந்த பூர்வ குடிகள் எனக்கு கற்றுத் தந்து விட்டனர். “இந்த ஒரு செயல் நிறைவேறவோ என்னவோ பதினைந்து திங்கள் கடார பகுதியில் போரிட்டோம் போலிருக்கிறது ஆனால் முடிவு சுகமாக அமைந்தது” என்ற இராஜேந்திர சக்கரவர்த்தி இளங்குமரனை ஆரத்தழுவிக் கொண்டார்.
நாவாய்கள் நாகை துறைமுகம் நோக்கி விரைவாக விரைந்தன. “இந்த அன்பின் பிணைப்பு, இன்றும் தொடர்கிறது. “பெரிய நாக்காவாரம்” தீவின் முனைப் பகுதியில் இன்றும் அந்த கலங்கரை கோபுரம் கம்பீரமாக நிற்கின்றது. தமிழனின் அரசு இங்கு வரை வியாபித்திருந்தது என்பதனையும், இந்திய தேசத்தின் தென் எல்லை குமரி அல்ல, இந்திரா முனை என்னும் உண்மையையும், இந்த கலங்கரை கோபுரம் உரக்க உலகிற்கு சொல்லிக் கொண்டிருக்கிறது”
முற்றும்.
(வரலாற்று சிறுகதை) எழுத்தாளர்: பாரதிப்பிரியன்
மூலங்கள்
1. திரு. மா. இராசமாணிக்கனார் எழுதிய சோழர் வரலாறு நூல் – பக்கம் 107
மாநாக்காவாரம் ஸ்ரீவிசய பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதற்கான தகவல்.
2. திரு. அ. இராஜராஜ சோழன் அவர்கள் எழுதிய “வரலாற்றுப் பக்கங்களில் மட்டுமே மணக்கும் கங்கை கொண்ட சோழபுரம்” நூலில் இருந்து @ ஸ்ரீவிசயத்தின் அரசன் – விஜயோத் துங்கவர்மன் என்னும் ஆதாரம் @. பக்கம் 20 முதல் 22 முடிய. @. சோழர்கள் கடலின் தோழர்கள் என்னும் தகவல் பக்கம் 31 முதல் 34 வரை
3 . திரு. மா. இராசமாணிக்கனார் எழுதிய இராஜேந்திர சோழன் நூலிலிருந்து @. கடாரப் போரும், மாநாக்காவாரம் குறித்த தகவலும் பக்கம் 62 முதல் 64 வரை
4. இராஜேந்திரன் செய்திக்கோவை நூலிலிருந்து
@. இராஜேந்திரன் மெய்கீர்த்தி – (46-50), (61-65) @. கடலில் வென்ற நாடுகள் – காரணம் – பக்கம் 9
திரு. இராஜசேகர தங்கமணி எழுதிய முதலாம் இராசேந்திர சோழன் நூலிலிருந்து. @. மாநாக்காவார தீவின் வெற்றி – பக்கம் 143-161 வரை குறிப்பாக பக்கம் 157.
6.
www.vaettoli.blogspot.com/2014/08/blog-post_27.html @.கி.பி. 1024 முதல் மாநாக்காவாரம் தீவுகளில் குடியேற்றம் @ A.பி. 1066-ல் இராஜேந்திரரின் இரண்டாம் வருகை @. “கங்கா நதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர் கோன் என்னும் கல்வெட்டு தூண் நங்கௌரி தீவில் இன்றும் உள்ளது. @ மாநாக்காவாரம் என்பதே இன்றைய கிரேட் நிக்கோபார் தீவுகள் @. நாக தீபம் என்பதே இன்றைய நங்கௌரி தீவு. இது லிட்டில் நிக்கோபார் தீவில் உள்ளது. @. காரதீபம் என்பதே கார் நிக்கோபார் தீவுகள். @ நக்க சாரணர் என்றும், நாகர் மலை என்றும் மணிமேகலையில் குறிப்புள்ளது.
எழுத்தாளர் பாரதிப்ரியன் எழுதிய கலங்கரை கோபுரம் வரலாற்று செய்திகளை அளவான கற்பனையுடன் இராஜேந்திர சோழனின் கடற்படையெடுப்பு மற்றும் மன்னனின் மனிதாபிமான அடிப்படையில் பெருமாநக்காவரத் தீவினை வென்ற செய்தியைத் தெரிவிக்கின்றது.
சென்டினல் தீவுகளில் இன்று மானிடர் நுழையக்கூடாது. ஆனால் அன்று சோழத்தளபதி அன்பினை ஆயுதமாகக் கொண்டு இதயங்களை வெற்றி கொண்ட செய்தியை கதையாக்கி நமது மனதில் வெற்றி கொண்டுள்ளார்.
இளம் வரலாற்று கதை எழுதும் எழுத்தாளர்களில் தனக்கென்று ஒரு நடை கொண்டு எழுதும் பாரதிப்ரியன் தொடர்ந்து நிறைய எழுத வேண்டும் என்று உளமாற வாழ்த்துகிறோம்.