காதலின் தீபம் – இராஜேந்திரச் சோழன் சிறுகதைப் போட்டி #8

பனிப்பொழியும் காலை வேளையில் வீரர்கள் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். வாள் உரசும் சத்தம் அந்த பகுதியை நிறைத்தது. போர் வீரர்களுக்குப் பரவன் மழபாடி பயிற்சியளித்துக் கொண்டிருந்தார். அவர் இரண்டு வீரர்களை அழைத்து வாள் சண்டையிட செய்தார். இருவரும் திறமையானவர்கள். ஒருவரையொருவர் ஆக்ரோசமாக சண்டையிட்டனர். வாள்கள் மின்னல் போன்று மின்னின. இறுதியாக ஒருவன் வெற்றி பெற்றதாக அறிவித்தார். அவனை மற்ற வீரர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவன் மாறன் என்ற வீரனின் மகன்.

“உங்க அப்பாவைப்போலவே நீயும் சிறந்த வாள் வீரன்தான். வேட்டுவர்கள் பரம்பரையில் வந்தவன் தானே நீ.”

“ஆமாம் ஐயா”.

“உன் பெயரை நீயே சொல்” என்றார்.

“ஊராளி வேட்டுவன் அழகன் காளி என்பது என்னுடைய பெயர்” ஐயா என்று அறிமுகப்படுத்திக்கொண்டான்.

“நல்லது உன் பயிற்சி இதேபோல் திறமையாக இருந்தால் அடுத்த போருக்கு உன்னை அழைத்து செல்வேன்”.

“அதற்காக தான் காத்திருக்கிறேன் ஐயா.”

அவன் முதுகில் தட்டிக்கொடுத்து சென்றார். அவனுக்கு அதுவே மிகப்பெரிய பரிசாக எண்ணினான்.

சிறுவயது முதலே அவனுக்கு வாள் பயிற்சி செய்யும் வீரர்கள் மேல் ஒரு மதிப்பும்,மரியாதையும் உண்டு. தன்னுடைய இளம்வயதிலிருந்து மன்னர் இராஜராஜன், அவர் மகன் இராஜேந்திர சோழன் போர் வெற்றிகளை தன் தாத்தாவும்,தந்தையும் சொல்லக் கேட்டிருக்கிறான்.

நொய்யல் ஆற்றங்கரையில் சிறுவர்களுடன் விளையாடும் போதே குச்சியை வாள் போல் நினைத்து வீசுவான். போர் பற்றிய கதைகளும்,கனவுகளுமாய் வளர்ந்தான் காளி.

ஆற்றங்கரையில் இருந்த ஒரு நடுகல் வீரனின் சிலையை பெருமிதத்துடன் பார்ப்பான். இந்த மண்ணுக்காக உயிர் நீத்த உங்களை இந்த மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்று வியந்து பார்த்தான்.

அவனுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார் தந்தை மாறன்.

“அப்பா நான் ஒரு முறையாவது போருக்குச் சென்று வென்று விட்டு வந்தால்தான் திருமணம். அதுவரை எனக்குத் திருமணம் வேண்டாம்”.

“பெண்ணை முதலில் பார்த்துவிட்டு அப்புறம் பேசு. உன் குணம் அறிந்து நடக்கக்கூடியவள் பொன்னம்மாள்”.

“என் கவனம் சிதறும் என்று கவலைப்படுகிறேன் அப்பா”.

“உன் வயதில் நான் இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பன். மன்னர் இராஜராஜன் தலைமையில் பல போர்களில்  என்னைப்போன்ற பல வீரர்கள் ஈடுபட்டார்கள். நீ திருமணம் செய்தால் தான் எனக்கு நிம்மதி.எனக்கும் வயசாகிவிட்டது”.

“நிச்சயம் மட்டும் செய்து கொள்வோம் அப்பா. ஆனால் போருக்குப் பின்தான் திருமணம்”.

சரியென்று சொன்னானே என்று அவரும் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார். மாறனுக்கு ஒரு மகள். அவள் பெயர் மங்கை. அவளை உள்ளூரில் வேளாளர் ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.

மான் விழிகளும்,மாதுளம்பூ நிறத்துடன்,நீண்ட நெடிய கார்குழலும்,தலையில் நெற்றிச்சுட்டியும்,காதில் குண்டலமும்,கழுத்தில் முத்தாரமும்,கையில் முத்து வளையலும், காலில் வெள்ளிக் காப்புகளும் அணிந்து பாவை போல் அழகாக இருந்தாள் பொன்னம்மாள். அவளின் தந்தை ராமன் கொடுமணல் என்னும் இடத்தில் இரும்பை சக்தி வாய்ந்த வெப்ப உலைகளில் இட்டு,உருக்கி எஃகாக மாற்றும் பணியைச் செய்தார். பொன்னம்மாளும்,தாயும் சேர்ந்து அலங்காரப் பொருள்கள் செய்வதில் வல்லவர்கள். நீலமணி, செவ்வந்திக்கல், மரகதம்,வைடூரியம்,பச்சை போன்ற நகைக்கற்களில் அணிகலன்கள் செய்வதில் அந்த ஊர்ப் பெண்களும் திறமை உடையவர்களாக இருந்தனர்.

பெண்ணைப்பற்றி பெருமையாகச் சொன்னார் ராமன். “குடும்ப வேலையிலும்,கைவேலையிலும் தேர்ந்தவள் பொன்னம்மாள்” என்றார்.

பொன்னம்மாளைப் பார்த்தவுடன் காளிக்கும் பிடித்துவிட்டது. கணப்பொழுதில் சுண்டி இழுத்தது அவளது விழிகள்.

ஆவணி மாதம் வளர்பிறை முகூர்த்தத்தில் அழகன் காளிக்கும், பொன்னம்மாளுக்கும் ஊர் பெரியோர்களால் நிச்சயம் நடை பெற்றது.

இரு பறவைகள் வானில் சிறகடித்துப் பறப்பது போல பொன்னம்மாளும்,காளியும் நொய்யல் ஆற்றங்கரையில் கூடிக்களித்தனர். அவள் தன் கையால் செய்த செவ்வந்திக்கல் பதித்த மோதிரம் ஒன்றை காளிக்குப் பரிசாகத் தந்தாள்.

காளி அவளுக்குப் பிடித்த முத்துமாலை பரிசாகத் தந்தான்.

“நீங்களே போட்டு விடுங்கள் ஐயன்”.

அவன் இரும்புக்கரங்கள் மெல்லிய அவளின் கழுத்தின் மீது மாலையைப் போட்டது.

“நம் உறவின் சாட்சியாக இந்த மாலையும்,ஆறும் இருக்கும்.நான் இப்போதே உங்கள் மனைவிதான்” என்றாள் பொன்னம்மாள்.

போரில் கலந்து கொள்ள வேண்டும். என்னுடைய சோழ மண்ணைக் காக்க இன்னுயிரைத் தந்தாலும் மகிழ்ச்சியோடு இறப்பேன் என்று சொல்லிக்கொண்டேயிருந்தான் காளி.

சோழ வீரர்களுக்கு இந்த மண் மீதும்,மன்னன் மீதும் உள்ள இயல்பான உணர்வு இது என்று பொன்னம்மாளும் உணர்ந்திருந்தாள்.

“நீங்கள் போரில் வெற்றி பெற்று வருவீர்கள் ஐயனே!”

“எனக்காக நீ காத்திருக்கும் போது உனக்காகவே வெற்றியோடு வருவேன். ஒருவேளை என் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் நீ வேறொரு வாழ்க்கைக்குத் தயார் படுத்திக்கொள். நீ எப்போதும் என்னுடைய தோழியாக இரு போதும்” என்றான்.

“அவசரமாக அவன் வாயைப் பொத்தினாள் பொன்னம்மாள். இதென்ன அபசகுனமான பேச்சு. அப்படியெல்லாம் நடக்காது ஐயனே” என்று கண்ணீருடன் கூறினாள்.

“போர் என்றால் வெற்றியும்,இழப்புகளும் சகஜம். போர் வீரரை மணந்து கொள்ளும் பெண்களும் வீராங்கனையாக இருப்பது தான் எனக்குப் பிடிக்கும்”.

“நான் ஒன்றும் கோழையல்ல. இந்த காதல் என்னை அப்படிச் செய்துவிட்டது” என்று அவன் கரம் கோர்த்தாள்.

“பேச்சை மாற்ற எண்ணி உனக்கு என்ன பிடிக்கும்” என்றான் காளி.

“இந்த ஆற்றங்கரையில் உங்களோடு நேரம் செலவிட வேண்டும். இங்கேயே நமக்கு வீடும் அமைத்துக்கொள்ள வேண்டும். வீரனின் மனைவி என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ள வேண்டும்” என்று பட்டியலிட்டாள்.

“அவன் எல்லாம் நல்லபடியே நடக்கும்” என்று சொல்லிப் பயிற்சிக்குக் கிளம்பினான்.

அரசவையில் மன்னன் இராஜேந்திரன் பேசிக்கொண்டிருந்தார். தந்தைக்குச் சற்றும் குறைவில்லாத கம்பீரமும்,அகன்ற தோள்களும்,வீரத் தழும்புகளும் அவர் வெற்றியைப் பறைசாற்றும்படி இருந்தது. சேடிப் பெண்கள் விசிறிக்கொண்டிருந்தனர். அருகில் சேனாதிபதி அருண்மொழியும், அரையன் ராஜராஜனும்,நிதியமைச்சரும் தன் மாமனுமாகிய வந்தியத்தேவரும், உபதளபதிகளும் உடனிருந்தனர். நெடுநாட்களாகவே சேர அரசின் மேல் திரும்பப் போர் தொடுக்கும் ஆலோசனை நடைபெற்று வந்தது.

“திறை செலுத்திய போதும் சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மன் இப்போதும் துள்ளுகிறான்” என்றார் சோழப்படையின் சேனாதிபதி அருண்மொழி.

இராஜேந்திரனுக்குக் கோபம் வந்தது. “ஏன் காந்தளூர் சாலைப் போர் அதற்குள் மறந்து விட்டதா அவர்களுக்கு?,உதகையைத் தீக்கிரை ஆக்கியதும் நினைவில் இல்லையா?”

“அரசே! இப்போது ஈழ மன்னன் மகிந்தர் அவனுக்கு உதவுவதாகத் தெரியவந்துள்ளது.”

“உடனே போர் முரசு அறிவியுங்கள்! சேர மன்னனின் கொட்டம் அடக்கி,ஈழ மன்னனுக்கும் சேர்த்துப் பாடம் புகட்டவேண்டும் என்று ஆணையிட்டார்.”

அடுத்த இரு நாட்களில் ஊர் மக்களுக்கு வீரன் ஒருவன் முரசு அறிவித்துப் போர் பற்றிச் சொல்லிக்கொண்டே சென்றான். எக்காளம் ஊதப்பட்டது.யானைப்படை,குதிரைப்படை எல்லாம் தயார் நிலையிலிருந்தது. மக்கள் போரை வரவேற்று நிசும்பசூதனியை வேண்டிக்கொண்டார்கள்.

காளிக்கும் தகவல் வந்தது. பொன்னம்மாள்,தாய், தந்தையிடமும் விடைபெற்று போர்க்களம் செல்ல ஆயத்தமானான்.

வீரர்களுக்குரிய அரையாடை அணிந்து, இடுப்பில் குறுவாளும் தரித்து தலையில் தலைப்பாகை அணிந்தும்,அகன்ற தோளில் போர் கவச உடையும் அணிந்திருந்தான் காளி. வாள் வீரர்கள் இறுக்கமாக அணிந்து கொள்கின்ற மணிக்கட்டு பட்டை அணிந்திருந்தான். பொன்னம்மாள் காளியின் நெற்றியில் வீரத்திலகம் வைத்து அனுப்பி வைத்தாள். அவள் கண்ணில் வழிந்த கண்ணீரை அவன் பார்க்காமல் துடைத்துக் கொண்டாள். போரில் வெற்றி பெற்றவுடன் திருமணம் செய்வதாக உறுதி அளித்தான் காளி.

மனதில் கணவனாக வரித்துக்கொண்ட காளியின் வெற்றி செய்திக்காகக் காத்திருந்தாள் பொன்னம்மாள்.

விடிகாலையில் குதிரையின் குளம்படிச் சத்தம் கேட்டது. மக்கள் எல்லோரும் வீரர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

இராஜேந்திர சோழர் வாழ்க! என்றும் அவரின் மெய்க்கீர்த்தியான “திருமன்னி வளர” முழுதும் அந்தணர்களால் பாடப்பெற்றது. அரசியார் வீரமாதேவி,மற்றும் அரண்மனை பெண்டிர் அனைவரும் அரசருக்குக் கும்ப மரியாதை செய்து நெற்றியில் வெற்றித் திலகம் இட்டனர். அரசரின் வெற்றிக்காகக் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

படைகளுக்கு முதன்மை ஏற்று அரையன் ராஜராஜன் குதிரையில் முன்னேறிச் சென்றார். புலிக்கொடி ஏந்திய வீரன் ஒருவன் அவர் பின்னே செல்ல,அவனுக்குப் பின்னால் குதிரைப்படை வீரர்களும்,யானைப்படை வீரர்களும் சென்றனர். நடுவில் தேரின் மீது மன்னர் இராஜேந்திரன் சிங்கம் போல் அமர்ந்து வந்தார். வழியெல்லாம் மக்கள் பூத்தூவி அவரை வாழ்த்தினார்கள்.

படைவீரர்கள் ஆரவாரத்துடன் சென்றார்கள். சோழப்பெரும்படை பாண்டிய நாட்டின் வழியாகச் சேர நாட்டிற்குப் புறப்பட்டது. அப்போது சேரனின் நண்பனான பாண்டிய மன்னன் அமரபுயங்கன் சோழப் படைகளைத் தடுக்க முற்பட்டான்.

வீரர்கள் அரசரின் ஆணைக்காகக் காத்திருந்தார்கள். ராஜேந்திரன் சினம் கொண்டு தன் படையுடன் பாண்டியப் படைகள் மீதும் வேங்கையெனப் பாய்ந்தான்.

காளியும் தன் வாள் வீசும் திறனால் பல வீரர்களைக் கொன்று குவித்தான். பாண்டிய வீரர்களை ஓட ஓட விரட்டினார்கள் சோழ வீரர்கள்.

சேர தேசம் முழுதும் காடும்,மலைகளும் சூழ்ந்து இருந்தது. வீரர்கள் அங்கங்கே சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு,உணவும் எடுத்துக்கொண்டார்கள். அவ்வளவு பெரிய படைக்கு உணவு சமைக்கும் ஆட்களும்,வைத்தியம் செய்யும் ஆட்களும் சேர்ந்தே பயணப்பட்டார்கள்.

அடர்ந்த காடுகளுக்குள் சோழப்படை வேகமாக முன்னேறியது. பகலில் தீப்பந்தம் உதவியுடனே செல்ல வேண்டியிருந்தது. மதில்களால் சூழப்பட்ட சேர நாட்டை முற்றுகையிட்டனர்.சோழ சேர போர் கடுமையாக நடைபெற்றது. எங்கெங்கும் மரண ஓலங்கள், கையிழந்து,காலிழந்து குற்றுயிரும்,குளை உயிருமாய்ப் பலர் ஓலமிட்டனர். கேடயமும், குறுவாளும்,கத்தியும்,ஈட்டி முனைகளும்,சுருள்வாளும் மோதிக்கொண்ட சத்தம் விண்ணைப் பிளந்தது. விலங்கோடு விலங்காய் வெறி கொண்டு போரிட்டனர்.

‘சோழ மன்னர் வாழ்க’ என்ற வாழ்த்தொலி விண்ணும்,மண்ணும் கலந்தன.

சேர நாட்டின் அழகு நகரத்தின் மதில்களை இடித்தனர். கோட்டைக் கொத்தளங்களைத் தகர்த்தனர். மாளிகைகளைத் தரைமட்டமாக்கினர்.

கோபுரங்களை உடைத்தனர். சிறைச்சாலைகள் தகர்த்தப்பட்டன.

அரையன் ராஜராஜன் குதிரையில் அமர்ந்து தன்னை நோக்கி வரும் அம்புகளைத் தடுத்து,பல வீரர்களைத் தன் புஜபலத்தால் வெட்டிச் சாய்த்தார். எதிர்பாராத விதமாக சேர வீரன் எய்த அம்பு அரையன் மேல் விழப்போக,அதை தடுத்தான் காளி. அவனைப் பார்த்து புன்னகைத்தார் அரையன்.

அவனுடைய வாள் வீசும் திறனும்,ஈட்டி எறிதலும் பார்த்து சகவீரர்களே ஆச்சரியம் அடைந்தனர். உறுதியான நெஞ்சத்துடன் அவன் பல வீரர்களை வெட்டி சாய்த்தான். இறுதியில்

வீரன் அழகன் காளி போரில் தன் மார் மீது வேல் தாங்கி உயிர்நீத்தான். கொஞ்ச நஞ்சம் மிச்சமிருக்கும் உயிரையும் மொத்தமாய் உள்ளிழுக்கும் பொன்னம்மாவின் நினைவில் அவன் மண்ணில் வீழ்ந்தான். இவனைப்போல எண்ணற்ற வீரர்கள் தேசத்துக்காக உயிர் நீத்தனர். காளியின் வீட்டுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இறந்த போர் வீரர்களின் மனக்கேதம் தீர்க்க நந்தா விளக்கு எரிக்க நிவந்தம் அளிக்கவும்,நடுகல் எடுக்கவும் ஆணையிட்டார் மன்னர்.

சேரர் மணிமுடியினை கைப்பற்றினார் ராஜேந்திர சோழன். மன்னர் ஈழ தேசம் நோக்கி முன்னேறினார்.

பாண்டிய நாட்டின் சிறப்புமிக்க வெண் முத்துகள்,பொன்னால் செய்த ஆபரணங்கள் எல்லாம் கவர்ந்து வந்தனர். ராஜேந்திரன் தன் மகனைச் சோழ பாண்டியன் எனும் பெயரில் பாண்டிய நாட்டுப் பிரதிநிதியாக்கினான்.

காளியின் தந்தை மாறனுக்கு மகன் போரில் இறந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. ஒரே மகனை இழந்த அவர் கதறி அழுதார். கல்யாணம் நிச்சயம் ஆன கையோடு இப்படி இறந்து பட்டானே என்று ஆற்றமுடியாத துயரில் ஆழ்ந்தார். “தன்னுடைய ஒரே மகனையும் போரில் பறிகொடுத்து விட்டேனே” என்று அழுத தாய்க்கு ஆறுதல் சொல்ல யாராலும் முடியவில்லை.

செய்தி கேட்ட பொன்னம்மாள் செய்வதறியாது தவித்தாள். “எனக்கானவன்,என்னைக் காப்பவன்” என்ற அதீத நம்பிக்கை உடைந்த தருணம், அவள் உடற்கூடு ஜீவனை இழந்த தேகமாகச் சரிந்து விழுந்தது. அருகில் இருப்பவர்கள் தண்ணீர் தெளித்து அவளை எழுப்பினார்கள். கண்ணீர் வற்றிப்போகும் அளவுக்குக் கதறித் தீர்த்தாள்.

அவன் நினைவாக நடுகல் வைத்து வழிபட வேண்டும் என்று மாறன் எண்ணினார். அதற்காகக் கல் ஒன்றைத் தேடி அலைந்தார். தகுந்த கல்லை எடுத்து அழகன் காளியின் உருவம் செதுக்கப்பட்டு கல்வீடு போன்ற அமைப்பை உருவாக்கினர். வடிவுள்ளமங்களம் என்னும் இடத்தில்  நொய்யல் ஆற்றின் வடகரையில் உள்ள ஒரு தோட்டத்தில் நடுகல் அமைக்கப்பட்டது. அவன் சிறுவயதில் ஓடித்திரிந்த நொய்யல் ஆற்றங்கரையில் அவனுடைய நடுகல் வைக்கப்பட்டது.

வலது கையில் வாளும் இடது கையில் வில்லும் வடித்து, தலையில் கொண்டையைக் கட்டிய முடிச்சின் துணி பறந்தவண்ணமும் இடையில் குறுவாளும் முழங்காலுக்கு மேலிட்ட அரையாடையும் அணிந்தவாறு செதுக்கினர்.

பொன்னம்மாளுக்கு நேரில் காளியைப் பார்ப்பது போன்றே இருந்தது. என் கழுத்தில் மாலையிடுவீர்கள் என்றே நினைத்தேன் ஐயனே. உங்கள் நினைவாக எழுப்பும் இந்த நடுகல்லுக்கு மாலையிடும் நிலை ஏற்படும் என்று நினைக்கவேயில்லை என்று அழுதவாறே கல்லுக்குத் தண்ணீர் ஊற்றி மாலையிட்டாள். மாலையிலிருந்து ஒரு பூ அவள் மேல் விழுந்தது. அவனின் காதல் பரிசாக அந்த பூவை ஏந்தி தீபம் ஏற்றினாள் பொன்னம்மாள்.

உயிர்ப்பலி இட வேண்டும் என்று ஒரு ஆட்டை வெட்டி,ரத்தத்தைப் பீச்சி அடித்தனர். விரும்பிய பொருள் அனைத்தையும் வைத்துப் படைத்தார் தந்தை.

பொன்னம்மாள் அவன் விரும்பிய உயிர். கற்சிலையாய் அவன்,உயிர் சிலையாய் அவள். மண்ணிற்காக உயிர் நீத்த அவன் காலம் காலமாய் வாழ்வான் என்று ஊர்மக்கள் தெய்வமாய் வழிபடத் தொடங்கினர்.

அந்த ஆற்றங்கரை அருகிலேயே சிறு குடிசை அமைத்து பொன்னம்மாள் தினமும் அவனின் நடுகல்லுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டாள். அது ஒரு காதலின் தீபமாகச் சுடர் விட்டது.

அன்பின் ஒரு வார்த்தைக்காய் இன்னும் எத்தனை ஜென்மமென்றாலும் காத்திருப்பேன் ஐயனே. பழகிய கொஞ்ச நாளில் நீங்கள் காட்டிய அன்பை மொத்தமாய் கண்டு வாயடைத்துப் போயிருக்கிறேன் ஐயனே! என் வாழ்வு முடியும் வரை உங்கள் நினைவுகளிலே வாழ்வேன் என்று மனதில் உறுதியேற்று அவனுடன் நினைவில் வாழ்ந்தாள் பொன்னம்மாள்.

https://veludharan.blogspot.com/

கல்வெட்டு:

ராஜேந்திர சோழன் கால கல்வெட்டு:

“ஸ்வஸ்திஸ்ரீ பூர்வதேசமும் கங்கையும்……

      சோழர்க்குச் செல்லா நின்ற யாண்டு

          ……..ஊராளி வேட்டுவன் அழகன்

          காளி அவன் இதில் பட்டான்.”

இக்கல்வெட்டு கூறும் செய்தி: 

1) ஸ்வஸ்தி ஸ்ரீ பூர்வ தேசமும் கங்கையும் 

2) கடாரமும் கொண்ட ஸ்ரீ இராஜேந்திர 

3) சோழர்க்கு செல்லநின்ற யாண்டு 

4) ………. ஊராளி வேட்டுவன் அழகன் 

5) காளி அவன் இதில் பட்டான் 

முதலாம் ராஜேந்திர சோழனின் சேர நாட்டுப் படையெடுப்பின் போது, சோழர்  படையில் பணிபுரிந்த அழகன் காளி, அப்போரில் அடைந்த வீரமரணத்தை சிறப்பிக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடுகல் இது.

– ஜெயா சிங்காரவேலு

5 Comments

  1. Very nice story Jaya. Most of the story written about king. This story tell about the brave man. So nice and happy to read Jaya

  2. வரலாற்றுக் காலத்திற்கே சென்று வந்த உணர்வு கதையைப் படித்து முடித்தவுடன் தோன்றியது

  3. அருமையான கதை…

    ஒரு கல்வெட்டில் அழகான காதல் காவியம் படைத்துள்ளீர்கள்.

    பொன்னம்மாள் மனதை வசிகரித்து விட்டார்.

    அழகாக பழங்கால கிராமத்து வாசனையில் ஆரம்பித்த கதை, அரசவை, போர் என்று நீண்டுகொண்டே செல்கிறது.

    போர்க்காட்சிகளில் வர்ணனை சற்று குறைவாக இருந்ததது.

    காளியின் வீரசாகசங்கள் இன்னும் விவரிக்கப்பட்டு இருக்கலாம்.

    திரும்பி வெற்றி வீரனாய் வருவான் என்று நினைக்க திடீரென்று அவன் வேல் பாய்ந்து இறந்தது அதிர்ச்சி அளித்தது.

    மென்மேலும் எழுத வாழ்த்துக்கள் அக்கா.

    வெற்றி வேந்தன்

Leave a Reply