பந்தர் பட்டினம் – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி #10

தஞ்சையில் இருந்து பந்தர் பட்டிணம்  நோக்கி குதிரையில் பயணம் செய்து கொண்டிருந்தார் நாகன். நாகன் பந்தர்பட்டினத்தில் பொறுப்பில் இருக்கும் தளபதி  ஆவார் …இவரே கடற்படை கனதிபதி.  அரண்மனையில் சேனாபதி விசாலனின் செய்தியைப் பெற்றுக் கொண்டு விரைவாக ஊர் திருப்பிக் கொண்டிருந்தார்.

விடியற்காலையில் சேனாபதி வீட்டில் அருந்திய நீராகாரம் வயிற்றில் குளிர்ந்து கொண்டிருந்தது. சூரியோதயம் முன்பு ஆரம்பித்தப் பயணம். சூரியன் வானில் முன்னேறிக் கொண்டிருந்த சமயம் நாகன் , ஊரின் குடியிருப்புப் பகுதியைத் தாண்டிக் கொண்டிருந்தார்….

வீட்டில் இருக்கும் பெண்கள் காலையிலேயே உரலை இடிக்கும் சத்தம் வெளியில் கேட்டது. சில பெண்கள் மாடுகளுக்கு உணவளிக்க வயல் வெளியில்  ஓட்டிக் கொண்டிருந்தனர்.  வயதானவர்கள் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு வெற்றிலையை மென்று , மண் நிறைந்த பித்தளைக் குப்பியில் எச்சிலைச் துப்பியபடி   ஊர்கதைப் பேசிக்கொண்டு இருந்தார்கள். 

நாகனுக்கு வேடிக்கையாக இருந்தது…..ஒரு நாள் பயணத்தில் எட்டிவிடும் பந்தர் பட்டினத்தில் மககள் இவ்வளவு சாவகாசமாக பகல் பொழுதைக் கழிப்பதில்லை, அவர்கள் எப்போதும் தேனியைப் போல பறந்து கொண்டே இருப்பார்கள் , அவர்களுக்கு ஓய்வெடுக்க நேரமில்லை….உணவருந்த, உறங்க என்று முக்கிய நேரங்களில் கூட வேறு சிந்தனைகளில் தான் இருப்பார்கள். 

ஆனால் தஞ்சையில் மக்கள் விவசாய தொழில் போக மீதி நேரத்தை மாட்டுத் தொழுவத்தில் செலவுச் செய்கிறார்கள் என்று தோன்றியது. அவர்கள் வாழ்க்கைத் தென்றல் போல நகர்ந்துக் கொண்டிருந்தது, வீட்டில் செல்வம் கொழித்தது….சாலைகளின் ஓரத்தில் குண்டு மணி தங்கமாவது குப்பையில் போகாத நாளே இல்லை. 

மீந்துப் போன வெண்ணை கழிவுநீர் கால்வாய்களில் மிதந்தபடிச் சென்றது. அதைக் கொத்தித் திங்க குருவிகள் தெருக்களை முற்றுகையிட்டது. தீவனங்களை ஆடுகளும் , மாடுகளும்  தின்ன முடியாமல் மிதப்பில் முறைத்துப் பார்த்தபடி அன்ன நடை போட்டுக் கொண்டிருந்தது. 

வாலிபர்கள் ஆங்காங்கே வில், வாள் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். வாலிபப் பெண்கள் குளக்கரையில் குளித்து விட்டு, நன்னீர் தேக்கத்தில் இருந்து  குடங்களில் நீரை சுமந்தபடி ஊருக்குள் வந்து கொண்டிருந்தனர். 

நாகன் அவர்களின் நீண்ட அடர்ந்த கூந்தலைப் பார்த்து வியந்தபடி பயணித்தார்.

நாகன் தன்னை அறியாமல் தனது அள்ளி முடிந்தக் கொண்டையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார்….எவ்வளவு தான் ஆண்கள் கூந்தலை வளர்த்தாலும் அது பெண்களுக்கு நிகராக வளர்வதில்லை என்பது அவனுடைய எண்ணம் …..!!

நாகன் நிகழ்வுகளை ரசித்தபடி ஊரைக் கடந்து வயல் பரப்பில் பயணத்தைத் தொடர்ந்தார், வயலில் நீர்ப்பாய்ந்து கொண்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஆண்கள் கோவணத்துடன் தங்களது தோள்களின் வலிமையைக் காட்டியபடி தண்ணீர் வரத்தை சரி செய்துக் கொண்டிருந்தனர். 

வயல்களில், கூட்டமாகச் சில வாத்துகள் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. ஊரைச் சுற்றி களைத்துப் போன பல வாத்துகள் கால்வாய் நீரில் நீந்திக் குளித்துக் கொண்டிருந்தது. 

நீண்டக் கருங்கூந்தலை அள்ளி முடிந்தப் பெண்ணொருத்தி  , மண் பானையைத்  தலையில் ஏந்தி கால்வாயில் எச்சரிக்கையாக மெல்ல மெல்ல நடந்துக் கொண்டிருந்தாள். 

நாகன் அவள் செயலைக் கண்டு வியந்தபடி, அவளைக் கவனித்தபடிக் குதிரையின் வேகத்தைக் குறைத்தார்…..அந்தப் பெண் இடையிடையேக் குனிந்து தண்ணீரில் வாத்து முட்டைகளைத் தேடித் தேடி பானையில் சேகரித்தபடி வந்தாள். வாத்துகள் நீந்தியபடி நீரில் முட்டைகளை இட்டுக் கொண்டேச் சென்றன ….

பின்னால் சென்ற அந்தப் பெண்ணும் அதற்காகக் காத்திருந்துப் பானையை நிரப்பிக் கொண்டிருந்தாள்.

நாகன் அவளது செய்கையால் உள்ளம் மகிழ்ந்து….இனிதே நகைத்தபடி வேகமாகக்  குதிரையைச் செலுத்தினார். ஆங்காங்கே ….. எதிர்ப்பட்ட வீரர்கள் நாகனை வணங்கியபடிச் சென்றனர். நாகன் ஒரு சிறியக்  கானகத்தைக் கடந்து தொண்டி எனும் கிராமத்தை அடைந்தார். 

அங்கே ஒரு சிவ ஆலயப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாகன் அதை மேற்பார்வையிடும் பொருட்டுச் சிறிது நேரம் அங்கேச் செலவிட நினைத்தார். அங்கே பலர் சிற்ப வேலையிலும் , ஒரு சிலர் தச்சு வேலையிலும்  மும்முரமாக இருந்தனர். அந்த இடத்தைச் சுற்றி சிலப் பெண்கள் அவர்களுக்கு உணவளிக்கும் பொருட்டு அருகில் இருந்த குடிலின் முன்பாக சமையல் வேலைச் செய்து கொண்டிருந்தனர். 

நாகன் குதிரையை நிழலில் கட்டி ,வைத்து விட்டுச்  சிற்ப வேலைப்பாடுகளைப் பார்வையிட்டார். அங்கே தலைமைப் பொறுப்பில் இருக்கும் சிற்பி , நாகனின் அடையாளத்தைத் தெரிந்துக் கொண்டு அருகில் வந்தான்….

வணக்கம் தளபதி அவர்களே …வாருங்கள், இதுவரையில்  திருப்பணிகள் சரியான முறையில் நடந்துக் கொண்டிருக்கிறது. 

மகுடா…. உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி , பார்த்தாலேத் தெரிகிறது வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது….அதைப் பாராட்டவே வந்தேன்…. வேறு ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா ? சேனாபதி அவர்கள் வேலை நிமித்தமாக ஏதாவது புது  ஆணையைப் பிறப்பித்து இருக்கிறாரா ? 

ஆமாம் தளபதி அவர்களே , அடுத்து வரும் பெளர்ணமிக்கு முன்பாக பணிகளை முடிக்கச் சொல்லி இருக்கிறார்…..

அதைத்தான் நானும் நினைவுபடுத்துகிறேன். இதுப் பேரரசர் உத்தரவு….உங்களுக்குத் தேவையான உதவிகளைத் தான் செய்துத் தருகிறேன்…..கேளுங்கள்..

மகுடன் யோசித்து விட்டு.

இல்லை தளபதியாரே…. ஆட்கள் போதுமான அளவில இருக்கிறார்கள்…இருப்பிடம் , உணவு என்று எதற்கும் குறைவில்லை , நீங்கள் கும்பாபிஷேகத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைத் தொடங்குங்கள்…எங்கள் பணியில் எந்த தாமதமும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்….

அப்படியே ஆகட்டும் மகுடா ! சேனாதிபதி  ஏற்பாடுகளை ஆரம்பித்து விட்டார்..எனக்கு  வேறு சில ஏற்பாடுகளுக்கான ஆணையைப் பணித்து இருக்கிறார்கள். 

“நல்லது…..நீங்கள் நீராடி விட்டு வாருங்கள் , மதிய உணவுத் தயாராக இருக்கிறது….” என்றார்.

நாகன் மறுக்கவில்லை , அழைப்பை ஏற்றுக் கொண்டு அருகில் இருந்தக் குளத்தில் இறங்கிக் குளிக்க ஆரம்பித்தார்.  நாகன் நீரில் இறங்கியதும் குளத்தில் இருந்தக் கெண்டை மீன்கள் துள்ளி குதித்து தனது எதிர்ப்பைத் தெரியப்படுத்தியது. தாமரைக் கொடி குளம் முழுவதும் பரவிக் கிடந்தது. 

நாகன் பயணத்தின் களைப்பு நீங்க குளத்தில் நீந்தியபடி இருந்தார். நீரை விட்டு எழுந்திருக்க மனமில்லை. தனக்கு கொடுத்த ஆணை நினைவுக்கு வந்தது . அவசரமாக எழுந்து மேலே வந்து உடைகளை அணிந்துக் கொண்டு மகுடன் குடிலை நோக்கி நடந்தார். 

மகுடனின் மனைவி அருமையான நெல்லுச் சோறும் ,  குழைந்துப் போன துவரன் பருப்பு கடைசலுமாக கொதிக்கக் கொதிக்கப் பரிமாறினார். சோறும் நன்றாக வெந்து குழையும் பக்குவத்தில் இருந்தது. கை பட்டதும் பூவாக நெகிழ்ந்தது. நாகனுக்கு நல்ல பசி ….நொறுங்க பிணைந்து அதில் இரண்டு கரண்டி நெய்யைப் போட்டு சாப்பிட ஆரம்பித்தான். 

தொட்டுக் கொள்ள நார்த்தங்காய் ஊறுகாய் பசியைத் தூண்டியது. நல்லெண்ணெயில் பொறித்தப் பிஞ்சுக் கத்தரிக்காய் தொண்டையில் வழுக்கிப் போனது. அளவான மறுச் சாப்பாட்டிற்கு , வெண்ணை போலக் கெட்டியானத் தயிர் தயாராக இருந்தது. அதையும் ஒரு கைப் பார்த்து விட்டு , மகுடனிடம் விடைப் பெற்றுப் பயணத்தை ஆரம்பிக்க நினைத்தார். 

மகுடன் ,  வீட்டில் இருக்கும் குழந்தைகள் விளையாட  வழுவழுப்பான வெங்கற்களைப் பொறுக்கி குதிரையின் முதுகில் தொங்கிக் கொண்டிருந்தப் பையில் போட்டு விட்டான்.  

மகுடனின் மனைவி ஓடி வந்து நறுக்கி ஒழுங்கு படுத்தப்பட்டத் தாமரைக் தண்டுகளைக் கொடுத்தார். நாகன் அவர்களுடைய அன்புக்குக் கட்டுப்பட்டு அதைச் சிரித்தபடி ஏற்றுக் கொண்டார்.  

அவர்களிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டார். பயணத்தை வேகமாக,ஆரம்பித்தார். சூரியனின் தாக்கம் பாதி குறைந்து இருந்தது. குதிரையின் களைப்பு நீங்கி காற்றில் மின்னலாகப் பறந்தது. எவ்வளவு தான் வசதியாக வெளியூரில் இருந்தாலும் , அவரவர் சொந்த ஊரின் காற்று பட்டாலே உடலில் உள்ள பிணி போகும் என்பார்கள் அது உண்மை தான் என்று நாகனுக்குத் தோன்றியது. 

பந்தர் பட்டினத்தில் இருந்து அரசாங்க ஆணை நிமித்தமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் கிளம்பிச் சென்றார். ஆனாலும் ஏதோ பல வருடங்களாக தன் மண்ணை விட்டு பிரிந்ததைப் போல உணர்ந்தார். இது எப்போதும் ஏற்படும் உணர்ச்சி தான். நாகனுக்கு எப்போதும் தன்னுடைய பிறந்த ஊரின் மீது அபரிமிதமான பிரியம் இருக்கும். அதன் பொருட்டே அரண்மனையில் தங்க இடம் கிடைத்தும் கூட அதை தவிர்த்து  பந்தர் பட்டினத்தில் தனது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார். 

இதோ வந்து விட்டது….பந்தர் பட்டினம் , தேனீக்களாக மக்கள் அவரவர் வேலையில் மும்முரமாக இருந்தார்கள். அந்தி சாயும் நேரம் என்பதால் பெண்கள் வாசலில் நீர் தெளித்து, வீட்டில் விளக்கேற்றி வைத்துக் கொண்டிருந்தனர். அந்த தீபத்தின் வாடை தெருக்களில் வித்தியாசமான நறுமணத்தைக் கொண்டு வந்தது. நெய் தீபத்தில் இருந்து வரும் அந்த நறுமணத்திற்கு நாகன் அடிமை என்று சொல்லலாம். வீரர்கள் தீப் பந்தங்களைக் கொண்டு  தெருவிளக்குகளை ஏற்றி வைத்தபடிக் கண்ணில் பட்டனர். 

அவர்கள் நாகனைக் கண்டதும் மகிழ்ச்சியாகக் கையைக் கூப்பி வணங்கினார்கள். பெண்கள் வீட்டில் அடைந்து விட்டார்கள் போல தெருவில் அரசியல் பேசும் ஆடவர்கள்  அதிகமாக இருந்தார்கள். தெருவில்  மாட்டு வண்டியில் அவித்த நிலக்கடலையும், வள்ளிக்கிழங்கும். பித்தளைத் தூக்குப் பாத்திரங்களில் பருத்திப் பாலும் சுடச்சுட விற்றுக் கொண்டிருந்தார்கள். 

நாகனுக்கு எப்போதும் இதையெல்லாம் வேடிக்கைப் பார்க்கப் பிடிக்கும். மாட்டு வண்டியை நிறுத்திப் பிள்ளைகளுக்கு திண்பண்டங்களை வாங்கிக் கொண்டார். வீட்டை நெருங்கும் நேரத்தில் நன்றாக இருட்டி இருந்தது. நாகனின்  மகள் நித்திலா வீட்டு வாசலில் விளக்கேற்றி விட்டு அருகில் இருந்த சுவற்றில் இருந்தக் கோடுகளை எண்ணிக் கொண்டு இருந்தாள். 

நாகனின் குதிரையின் காலடி சத்தம் கேட்டது , வேகமாக ஓடி வந்தாள்….

அப்பா…அப்பா ….மகிழ்ச்சியில் சத்தம் போட்டபடி பட்டாம்பூச்சியாகப் பறந்து வந்தாள். நித்திலா சமீபத்தில் தான் பருவம் எய்தி இருந்தாள். தாய்யில்லாப் பிள்ளைகள் , இவர்களுக்காகவே நாகன் தன் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தாா்.

குதிரையில் இருந்து இறங்கி மகளுக்கு கையில் இருந்தத் திண்பண்டத்தைக்  கொடுத்தார். மகள் அதைப் பெற்றுக் கொண்டு உள்ளேச் சென்று ….

நீலா…நீலா….இங்கே ஓடிவா….அப்பா வந்து விட்டார்…..

நீலன் சிறியவன் , ஓடிவந்து அப்பாவை கட்டிக் கொண்டான். அவன் முகம் முழுவதும் கோபம் , நெஞ்சில் இருந்த ஏக்கம் நீண்ட பொறு மூச்சாக  வெளியே வந்தது. 

அப்பா , ஏன் இவ்வளவு தாமதம் ? நான் தினமும் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன் தெரியுமா ? 

நாகன் , நீலனை சமாதானம் செய்து பண்டங்களைக் கொடுத்து விட்டு ,தன் தாயை அழைத்தார். 

“அம்மா, அம்மா !”

தோள் வரைக் காது வளர்த்த, நல்ல கருத்த பெண் ஒருவர் உள்ளே இருந்து வெளியே வந்தார். நாகனுக்குப் பெண்வேடமிட்டால் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்ய வேண்டாம், தாய் அவரைப் போலவே இருந்தார் , உயரத்தில் கூட இருவரும் வாசல் நிலையைத் தொட்டார்கள். 

ஏண்டா அய்யா ,இரண்டு நாள் பயணமுன்னுச் சொன்னியே , இப்ப  இரண்டு வாரம் முடிந்தது. என்னால் இவங்களை வைத்துச் சமாளிக்க முடியவில்லை….உனக்கு இதெல்லாம் புரியாதா ? 

நீங்கள் வருத்தப்படக்கூடாது என்றுதான் முதலிலேயே வீரர்களிடம் தகவல் சொல்லி அனுப்பினேன்….அவர்கள் தகவல் சொல்ல வில்லையா ? 

சொன்னார்கள் அதில் ஒன்றும் குறை இல்லை, இப்போதெல்லாம் நீ சேனாபதியைச்  சந்திக்கச் சென்றால் தாமதமாக வருகிறாய்? 

என்ன செய்வது அம்மா ? பேரரசர் அயல் நாட்டுப் பயணத்திற்கு ஆயத்தமாகிறார். அதற்கான ஏற்பாடுகளை  நாம் தான் கவனிக்க வேண்டும். 

“எப்போது கிளப்புகிறார்கள் ? “

“தெரியவில்லை அம்மா…சிவன் கோவில் திருப்பணி வேலைகள் முடிந்த பிறகு இருக்கலாம்…”

பேசிக்கொண்டு இருக்கும் போதேத் தமயந்தித் தனது நிறைமாத வயிற்றைத் தள்ளிக் கொண்டு வந்தாள். 

“அண்ணா ….அவர் இன்னும் என்னைக் காண வரவே இல்லை…நீங்கள் அவருக்கு அதிகமான வேலையைச் கொடுத்து விட்டீர்களா ? “

இல்லை தமயந்தி , இது பேரரசர் உத்தரவு ! அதை மீற நாம் யார் ? எல்லாம் பயணம் ஆரம்பிக்கும் வரைதான்….அதன் பிறகு அரசாங்க பணிகள் குறைந்து விடும். 

அதற்குள் குழந்தைப் பிறந்து விடும் …..!

“அதுவும் நல்லது தானே , மறையன் உங்கள் இருவரையுமே சேர்த்துப் பார்த்துக் கொள்வான். “

பிரசவ நேரத்தில் அவர் என் அருகில் இருக்க வேண்டும் அண்ணா ! எனக்கு வேறு ஒன்றும் ஆசை இல்லை . 

நாகனுக்கு மனசு கனமாக இருந்தது. மறையன் ஒரு மருத்துவன் , அத்தை மகன் . ஒருவேளை இறுதி நேரத்தில்  மறையனும் பயணப்பட வேண்டி இருக்கும். தங்கைக்கு இது பிரசவ நேரம் வேறு……தமயந்தியைக் காணப் பாவமாக இருந்தது. அவளுக்கு ஒப்புக்குத்  தலையை அசைத்து வைத்தார். 

நீண்ட நாட்களுக்கு பிறகு குழந்தைகளிடம் கதைப் பேசி விட்டுப் படுத்து உறங்கினார். 

மறுநாள் காலையில் மாடுகள் சத்தம் காதைப் பிளந்தது. குழந்தைகள் விளையாடும் சத்தம் கிணற்றடியில் கேட்டது. வாசலில் சாணித் தெளிக்கும் சத்தமும் அதைத் தொடர்ந்து அம்மாவின் கால் தண்டைச் சத்தமும் கேட்டது. 

நாகன் இதையெல்லாம் ரசித்தபடி எழுந்து, கிணற்றடியில் குளிக்கச் சென்றார். எப்போதுமே நாகனின் பொறுப்பில் நிறைய வேலைகள் இருக்கும்..பேரரசர் ராஜேந்திர சோழன் துறைமுகத்திற்கு வருகிறார் என்றால் நாகனுக்கு தூங்க நேரமே இருக்காது. 

சேனாதிபதி விசாலன் , பந்தர் பட்டினத்தைப் பொறுத்தவரை நாகனைத் தவிர வேறு யாரிடமும் நேரிடையாக  எந்தப் பொறுப்பையும் கொடுக்க மாட்டார். நாகன் அங்கேயே பிறந்து வளர்ந்தவன் என்பதால் எல்லா ஏற்பாடுகளையும் துரிதமாகச் செய்வதில் வல்லவன். அயல்நாட்டு பயணத்திற்கான ஏற்பாடுகளை கவனிப்பதில் நல்ல அனுபவசாலி. 

நாகன் குளித்து விட்டு வந்தார் , அம்மா ஒரு வெள்ளிக் கும்பாவில் மோரில் கரைத்த தினைச் சோறைக் கொண்டு வந்து கொடுத்தார்.

“அம்மா , இன்று வீட்டிற்கு வரத் தாமதமாகும்….எனக்காகக் காத்திருக்க வேண்டாம்.”

“ம் …வரும் போது நித்திலாவின் கால் கொலுசைப் பட்டறையில் இருந்து வாங்கி வா!! “

சரி……தமயந்திக்கு இது பிரசவ நேரமா? 

இல்லை நாகா அவளுக்கு இது ஏழாவது மாதம் , இப்போதுத் தானே வளைகாப்பு  முடிந்தது. 

நாகன் யோசித்தபடி , குதிரை மீது ஏறி மின்னாலாகப் பார்த்தார்… சொக்கனேறியை நோக்கிப் பயணமானான். வழியில் இருந்த ஆலயங்களில் சங்கின்  ஒலி காதில் ஒலித்தது. நாகன் இடையில் ஒரு ஆலயத்தில் இறங்கிக் கடவுளை வணங்கி விட்டுச் சென்றார்.

ஒவ்வொரு எல்லையிலும் வீரர்கள் காலைப் பணியை ஆரம்பித்து இருந்தார்கள். நாகனைக் கண்டதும் கைகளைச் சைகை செய்தபடி இருந்தார்கள். 

நாகனுக்குப் பயணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லி சேனாபதி ஆணையிட்டிருந்தார். 

வேலையாட்களை ஏற்பாடுச் செய்யவே அங்கேச் சென்று கொண்டிருந்தார். காலை வேளை என்பதால் வயல் வெளிகளில் மக்கள் அதிகமாக விவசாய வேலைகளில் மும்முரமாக இருந்தார்கள். 

நாகனைக் கண்டதும் ஆண்கள் அவன் அருகில் ஓடி வந்தார்கள். 

என்ன கார் மேகத்தைக் காணவில்லை ? 

இதோ வந்துட்டேங்கய்யா ….கால்வாயில் கையைக் கழுவி விட்டு ஓடி வந்தான். 

நாகன் அவனைத் தனியாக அழைத்து ….

தளபதி உத்தரவு , பேரரசர் வெளிநாட்டுப் பயணம் செல்கிறார். நூற்றுக்கணக்கான ஆண்கள் பணிக்குத் தேவை ….! 

மீண்டும் வெளிநாட்டுப் பயணமா ?  நீண்ட நாட்கள் ஆகுமே…

ஆமாம் அதற்குத் தகுந்த மாதிரி பலசாலிகளாக ஏற்பாடுச் செய்யுங்கள். 

கார்மேகம் , உடலை நெளித்தபடி 

இந்த முறை சேவக அணியில்  என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் அய்யா ….

நாகன் யோசித்து விட்டு….

கார்மேகம் நீ இங்கே இல்லாமல் போனால் மற்ற பணிகளைப் பார்க்க ஆள் இல்லாமல் போகும்…?! வரப்பு நீரை யார் மேற்பார்வையிடுவது ….?

அதற்காக ஒருவனைப் பயிற்சி கொடுத்து வைத்திருக்கிறேன் அய்யா ….( இடையில் அருகில் இருந்த ஒரு இளைஞன் அழைத்தபடி ) ஏய் தங்கா … இங்க வா ? 

அவன் ஓடி வந்து நாகனை வங்கினான். 

என்னத் தங்கா உனக்கு மடைகளைத் தகுதி வாரியாகப் பிரித்து தண்ணீர் விடத் தெரியுமா ? கார்மேகம் ஒரு நாள் கூடத் தவறுச் செய்ததில்லை . ஒரு நாள் ஏமாந்தாலும் பயிர்கள் வாடும்.

நன்றாகப் பார்த்துக் கொள்வேன் அய்யா , என் தந்தையும் என்னோடு பணியில் இருப்பார். 

தங்கா நல்ல வலிமையான இளைஞனாகத் தெரிந்தான். நாகன் அவனை நன்றாக விசாரித்து விட்டு , தனியாகக் கார்மேகத்திடம் …..

“கார்மேகம் , இளைஞன் நல்ல வேலைக்காரன் போலத்தான் தெரிகிறான் , இவனை சேவக அணியில் சேர்த்து விடுவோம். தங்காவை நமது அயல்நாடுப் பயணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். அவனுடைய தந்தைக்கு மடையைத் திறந்து விடும் பணியைக் கொடு ….அவன் நமக்குத் தேவைப்படுவான். “

“அப்படியே ஆகட்டும் அய்யா ! “

நாகன் , கார்மேகத்திடம் பயணத்திற்குத் தேவையான ஆயுதங்கள் , தானியங்கள் , உடுக்க உடை என்று எல்லா ஏற்பாடுகளையும் பற்றி அவரோடு கலந்துப் பேசி முடிவுச் செய்தார். 

“கார்மேகம் , கிடங்கில் இருக்கும் ஆயுதங்களை மெருகேற்றி வையுங்கள் , தேவைப்பட்டால் உற்பத்திச்  செய்ய உத்தரவுக் கொடுங்கள். பேரரசர் வரும் சமயத்தில் எல்லாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதற்கு முன்பாகத் தளபதி அதை உறுதி செய்ய அடுத்தச் சில தினங்களில் வருவார் என்றுத் தோன்றுகிறது…”

“எல்லாம் தயார் நிலையில் இருக்கிறது. மேலும்  லட்சக்கணக்கான ஆயுதங்கள் தயாரிப்பில் இருக்கிறது , தளபதி வரும் சமயத்தில் அதுவும் வந்து விடும். “

“சரி அதைப் பார்வையிடலாம் வாருங்கள் !! “

இருவரும் ஆயுதக்கிடங்கிற்குச் சென்றனர். நூற்றுக்கணக்கான வீரர்கள் பாதுகாப்பிற்காகவும் , மற்றும் பல பணிகளுக்காக அமர்த்தப்பட்டு இருந்தனர். 

நாகன் வரிசையாகக் குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்களைப் பார்வையிட்டார். 

கத்தி , வேள், வாள் , கேடயம் , அரிவாள் , வீச்சரிவாள், கட்டாரி, வளரி , வலைத்ததடி ஆயுதம் ,பழு , பனை , சகடப் பொறி , தகர்ப் பொறி , கழுகுப் பொறி , புலிப்பொறி , களிற்றுப் பொறி , எரிசில் , வளைவிற் பொறி இன்னும் பல ஆயுதங்கள் லட்சக்கணக்கில் கூர்மைச் சரிபார்க்கப்பட்டுத் தயார் நிலையில் இருந்தது . 

நாகன் அவற்றின் செயல் தன்மையை இடை , இடையேச் சரிப் பார்த்தவாரு அவ்விடத்தைச் சுற்றி வந்தார். 

தளபதி ஒப்புதலுக்குப் பின்பு இவையெல்லாம் விரைவாக துறைமுகத்திற்கு கொண்டுச் செல்ல வேண்டும். புதிதாக ஆட்சேர்ப்பு விரைவாக இருக்கட்டும். அவர்களுக்கு ஆயுதங்களை கையாளச் சொல்லிக் கொடுக்க வேண்டும். விடுப்பில் சென்றப் பயிற்சிப் பெற்ற வீரர்களுக்கு அழைப்பு விடுத்து விரைவாக பணியில் அமர்த்துங்கள். 

கார்மேகம் , அவர் சொன்ன விவரங்களுக்கு தலையை ஆட்டியபடி சம்மதம் சொன்னார். நாகன் அருகில் இருந்தத் தச்சுப் பட்டறையில் நடந்த வேலைகளைக் கவனித்தபடி வந்தார். 

தளபதி வரும் சமயத்தில் எல்லா வேலைகளையும் முடித்து வைத்திருக்க வேண்டும். வண்டிகள் பயணத்திற்குத் தயாராக இருக்கட்டும். 

தற்போது பலநூறு வண்டிகளுக்கு மேல் தயாராக இருக்கிறது தளபதியாரே !

நாகன் கொட்டகை இருக்கும் இடத்திற்கு வந்தார் , வண்டிகளின் கட்டுமானப் பணிகளில் சிலர் ஈடுபட்டு இருந்தார்கள். நூற்றுக்கணக்கானக் குதிரைகள் தனது கம்பீரமானத் தோற்றத்தால் மிரட்டிக் கொண்டிருந்தது . 

“குதிரைகளுக்கு உணவு தரமாக இருக்கட்டும் …”

“அப்படியே ஆகட்டும் தளபதியாரே…”

குதிரைகள் நாகனின் உயரத்திற்கு மேல் இருந்தது. அருகில்  தொட்டிகளில்

கொள்ளும், பருத்திக் கொட்டையும் ஊறிக் கொண்டிருந்தது . குதிரைகள் அதைத் தின்றுக் கொழுகொழு வென்று இருந்தது. 

அதில் சில குதிரைகள்,  நாகனைக் கண்டதும் ஓடி வந்து தோளை உரசியது. நாகன் அதைத் தடவிக் கொடுத்தபடி , கார்மேகத்தோடு பேசிக்கொண்டிருந்தார். 

சூரியன் உச்சியை எட்டியது. நாகன் மதிய உணவை அங்கே முடித்து விட்டு , மருத்துவ குழுவைச் சந்திக்க மருதப் பட்டினம் பயணமானார். பந்தர் பட்டினத்திற்கு மிக அருகில் இருக்கும் ஊர் தான் மருதப்பட்டினம். 

இது நாகனின் தங்கை , தமயந்தி வாழ்க்கைப் பட்ட ஊர் . அத்தையைக் கட்டிக் கொடுத்ததும் இதே ஊர் தான் . அத்தையைக் கட்டிக் கொண்டவர்  வைத்தியர்,  என்பதால் மாப்பிள்ளையும்  அதேத் தொழிலைச் செய்து கொண்டிருந்தான். 

நாகனும் கூட அத்தையைக் கட்டிக் கொடுத்தப் புதிதில் இங்கே வந்து மருத்துவம் கற்றுக் கொண்டார். மாமன் இடையில் இறந்துப் போக மாப்பிள்ளை மறையன் எல்லாப் பொறுப்புக்களையும் ஏற்றான். 

மகுடன் தந்தையைவிடச் சிறந்தவன் என்று பெயர் பெற்றவன். போரில் அடிப்பட்ட வீரர்கள் அடுத்தச் சில தினங்களில் போருக்கு தயாராகி விடுவார்கள் , அந்த அளவிற்கு மகுடனின் மருத்துவம் புகழ்பெற்றது.

கங்கை கொண்ட சோழபுரம் முதல் பந்தர் பட்டினம் வரை மறையனின் மருத்துவம் தான் பேர் போனது. எந்த நேரமும் வீட்டில் மூலிகை வாசம் , கூடவே இடிக்கும் சத்தமும்,  அரைக்கும் சத்தமும் தாளம் போலக் கேட்டுக் கொண்டே இருக்கும். அந்தக் கிராமத்தை நெருங்கும் போதே மூலிகைகளின் மணம் மூக்கில் ஏறும் . 

சூரியன் உதிக்கும் போது ஆரம்பிக்கும் சத்தம் , சூரிய அஸ்தமனம் வரை கேட்கும். நாகன் அதில் எல்லாப் பக்குவமும் அறிந்தவர். ஒய்வு நேரத்தில் மறையன் அனுப்பும் மூலிகைகளைக் கொண்டு பந்தர் பட்டினத்தில் ,  மக்களுக்கு வைத்தியம் பார்ப்பதும் உண்டு. பல நேரங்களில் காயம்பட்ட வீரர்களுக்கு அவரே வைத்தியம் பார்ப்பார். 

நாகனைக் கண்டதும், அத்தை உள்ளே உரலில் மருந்தை இடித்துக் கொண்டிருந்தவர் அவசரமாக எழுந்து தாங்கித் தாங்கி நடந்து வந்தாள். 

மருமகனே எப்ப வந்தீங்க….அரசாங்க வேலையா வெளியூர் போனதாச் சொன்னாங்க ….? 

உள்ளே எட்டிப் பார்த்து ……

“ஏய் மறையா …இங்க வந்து பாரு ….உங்க மாமன் வந்திருக்கு….! “

மறையன் தலையில் கட்டியிருந்த முக்காட்டைக் கழட்டி விட்டு, நாகனை வணங்கியபடி வந்தான். 

மாமோய் எப்ப வந்திக ….? வீட்டில் எல்லோரும் நலமா?   தமயந்தி எப்படி இருக்கா ? 

எல்லோரும் சுகம் தான் மாப்பிள்ளை , தமயந்தி எப்பவும் உங்க நினைவாவே  இருக்கு !! 

மறையன் முகம் வாடிப் போனது. 

என்னச் செய்ய மாமா , அரசானைப்படி வெளிநாட்டுப் பயணத்திற்கு  மருந்துகள் தயார் செய்ய வேண்டும் , அதுப் போக உள்ளூர் தேவைகளுக்காக மருந்துகளை அனுப்பி வைக்க வேண்டும் . இன்னும் சில தினங்களுக்கு வேலை அதிகமாக இருக்கும். தளபதி வந்து ஒப்புதல் கொடுத்தால் சாமான்களை வண்டிகளில் ஏற்ற ஆரம்பித்து விடலாம். 

மறையா, நானும் அதைப் பார்வையிடவே வந்தேன். ஏற்பாடுகளை ஒரு முறைச் சரி பார்க்கலாமா ? 

வாருங்கள் வைத்திய சாலைக்குச் செல்வோம் ….

இருவரும் வைத்திய சாலைக்கு வந்தார்கள். உலக்கை இடிக்கும் சத்தம் அந்த இடத்தை அதிரச் செய்தது. நேர் , எதிருமாக பெண்கள் கல்லில் இடித்துக் கொண்டிருந்தார்கள். அப் பெண்கள் நல்ல பயிற்சி பெற்றவர்கள் போல, இடிக்கும் வேகமும் உலக்கையை லாவகமாகக் கையாண்ட விதமும் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. 

ரலில் இருந்தது சிறு குறிஞ்சான் பொடிப் போல , கசப்பு நாசியில் ஏறியது . அதற்கு அடுத்து அந்தப் பொடியைச் சலித்து மரப் பெட்டிகளில் சேகரம்  செய்துக் கொண்டிருந்தனர். 

அதைத் தாண்டிப் பச்சைக் கொடியைச் சாறு பிழிந்து சிறியதொரு நெருப்பில் வைத்து அதைக் களிம்புப் பக்குவத்திற்குக் கடைந்து கொண்டிருந்தனர். 

பின் வாசலில் சூடாக எள்ளெண்ணையின் வாசம் மூக்கைத் துளைக்க , ஒரு வயதான மூதாட்டி லேகியம் தயாரித்துக் கொண்டிருந்தார். எண்ணை சட்டியில் மிதந்து வந்து கொண்டிருந்தது. மூதாட்டி அதை விடாமல் சுருலச் சுருலக் கிண்டிக் கொண்டிருந்தார். 

தயார் செய்து வைக்கப்பட்ட மருத்துவ பொருட்கள் எல்லாம் மரப் பெட்டிகளில் அடைத்து அதன் முகப்பில் புங்க இலைச் சொருகி வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது. 

நானுக்கு ஏற்பாடுகள் திருப்தியாக,இருந்தது. மருந்துகள் பல மாதங்களாக பக்கவப்படுத்திச் செய்தாலொழிய உடனே மருந்துகள் கிடைப்பதென்பது முடியாத காரியம். 

மறையா, காயத்திற்கான மருந்துகள் அதிகமாக இருக்கட்டும். இது அயல்நாட்டுப்படையெடுப்பு …. பற்றாக்குறை ஏற்பட்டால் வீரர்கள் சிரமப்படுவார்கள். 

ஆகட்டும் மாமா ….இன்றும் இலைப் பறிக்க பெண்கள் காட்டிற்குள் சென்று இருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் இன்னும் அதிகமாகச் சேகரமாகும் , கவலை வேண்டாம். 

நல்லது மறையா , நான் கிளம்புகிறேன்…நீ எப்போது தமயந்தியைக் காண வருவாய் ? 

எப்படியும் பேரரசர் பந்தர் வரும் சமயத்தில் தான் வரமுடியும் என்றுத் தோன்றுகிறது. 

நாகன் எதுவும் சொல்லவில்லை , ஒரு தளபதியாக அவன் கூறியதைக் கேட்டு மகிழ்ந்து இருந்தாலும் , ஒரு அண்ணணாக வருத்தமாக இருந்தது. 

இலங்கைப் பயணத்தின் போது மறையனை அழைத்துச் செல்ல , தமயந்தி அனுமதிக்கவில்லை. அவளிடம் எவ்வளவோ சமாதானம் சொல்லி அழைத்துச் சென்றார். 

ஆனால் இந்த முறை பிரசவ நேரம் என்பதால் மறையனுக்கும் இந்தப் பயணத்தில் விருப்பம் இல்லை. இந்த முடிவுகளை தீர்மானிப்பது பேரரசர் என்பதால் , நாகன் இதுவரைப் பயணத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை. 

பேரரசர் ராஜேந்திர சோழன் அவர்களின் ஆணைப்படி , கடாரப் பயணத்திற்கானப் பணிகள் நடந்து கொண்டிருந்தது. ஆயுதங்கள் தயாராக இருந்தது. ராணுவ வீரர்கள் ஏற்கெனவேப் பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தார்கள். பயிற்சிப் பெற்ற  லட்சக்கணக்கான வீரர்கள் பயணத்திற்குத் தயாராக இருந்தார்கள். 

வாள் பயிற்சி வீரர்கள் , மற்றும் வில்லாலிகள் தங்களது பயிற்சிகளை தினமும் புதுப்பித்துக் கொண்டிருந்தனர்.

பயணத்தின் போதுத் தேவைப்படும் உணவு தானியங்கள் தயாராக இருந்தது. 

ஏற்கனவே ஆயிரக்கணக்கில் தண்ணீர் சேகரிக்கும் மரக்கலன்கள் தயாராக அடுக்கப்பட்டிருந்தது. புதிய கலன்கள் தயாராகிக் கொண்டிருந்தது. 

நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் , பயணத்திற்காகத் தயாராக இருந்தார்கள். அதில் மறையன் தான்  முக்கியமான மருத்துவர் , பேரரசர் ராஜேந்திரச் சோழனினிடம் நற்பெயரைப் பெற்றவன். அவன் இல்லாத மருத்துவக் குழு என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. 

நாகனுக்கு , தங்கையிடம் இதைச் சொல்லத் துணிவில்லை. நாகனின் மனைவி மூன்றாவது பிரசவத்தில் தான் வயிற்றில் குழந்தையோடு இறந்துப் போனாள். அதனால் நானுக்குப் பிரசவம் என்கிறச் சொல்லைக் கேட்டாலேப் பயமாக இருக்கும்

அதிலும் தமயந்தி பல வருடங்கள் கழித்து இப்போது தான் பிள்ளை உண்டாகி இருக்கிறாள் . மறையன் மருத்துவன் என்பதால் , தமயந்தி உடல் நலம் பற்றி எந்தக் கவலையும் இல்லை. ஆனால் அந்த நேரத்தில் கணவன் தன்னோடு இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள் . 

நாகனுக்குப் பயணத்திற்கானப் பணிகள் ஒருபக்கம் , தங்கையின், பிரசவம் மறுபக்கம் என்று மன உளைச்சலில் இருந்தார். தமயந்திக்கு வைத்தியம் சொல்வதற்காகவே தினமும் வீட்டிற்கு உறவுக்காரப்  பெண்கள் படையெடுத்தார்கள். 

நாகன் வீட்டிற்கு வரும் சமயத்தில் பொழுது சாய்ந்து விட்டது. திண்ணையில் பெரிசுகள் ஊர்க்கதைப் பேசிக்கொண்டு இருந்தார்கள். நித்திலா பக்கத்திலுள்ள வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். 

நீலன் , சாலையில் சிறுவர்களுடன் குஸ்திச் சண்டை போட்டுக் கொண்டிருந்தான். நாகனைக் கண்டதும் ஓடி வந்து குதிரையில் ஏறிக்கொண்டு ஊரை வலம்வரச் சொன்னான். 

தமயந்தி வாயிலில் உட்கார்ந்து வயிற்றை சுகமாகத் தடவிக் கொடுத்தபடி அமர்ந்திருந்தாள். முகத்தில் பெருகும் கூடி இருந்தது. தமயந்தி சாதாரணமாகவே அழகு தான். இப்போது அந்த அழகு இரண்டு மடங்காகக் கூடிப் போனது. கருங்கூந்தல் ஏற்கனவே இடையைத் தாண்டி தரையைத் தொடத் தயாராக இருந்தது. இப்போது அடர்த்திக் கூடிப் போய் அள்ளி முடிய வழியில்லாமல் அம்மா சடையை ஒன்னுக்கு ரெண்டாக பின்னி வைத்தார். 

அம்மா அவளுக்கு வெண்கலக் கும்பாவில் உளுத்தம் கஞ்சியைக் கலந்து கொடுத்தார்.

அருகில் அமர்ந்திருந்த மூதாட்டி , தயமந்தியின் வயிற்றை கை வைத்துப் பார்த்து விட்டு….

தமயந்தி…..என்னடிப் பிள்ள இன்னும் தல திரும்பாமக் கெடக்கு….?  இடுப்பு வளைய வேலையேச் செய்யறதில்லையா ? 

இல்ல அப்பத்தா….தெனமும் வாசக் கூட்டிப் பெருக்கி , சாணம் தெளிச்சு பின்ன நானே தான  கோலம் போடுறேன்……?!

பாத்தேண்டி , காலையில கூட உங்க ஆத்தா   சாணம் தெளிச்சத ….! என்று கூறிவிட்டு கிழவி வெற்றிலையில் எதையோ வைத்து தமயந்தி கையில் கொடுத்து விட்டு….

இங்க பாரு ஆத்தா….தெனமும் ஆமணக்கு எண்ணெய வயித்தில தடவி விடு , நல்லா வேலையைச்  செய்யக் கொடு , அசையாமக் கெடந்தா எப்படி பிள்ளப் பொறக்கும்..? 

ஆகட்டும் அத்தை…..இத நாகங்கிட்டச் சொல்லிட்டுப் போங்க , தங்கச்சி வேலைப் பாத்தா என்னத்தான் வையிறான் ….

எங்க அவன் ? 

இதோ வந்துட்டேன் அப்பத்தா !

நாகன் காதைத் திருகி விட்டபடி …

ஏலேய் , ஊருக்குத்தான் நீ தளபதி எனக்கு இல்லை…

ஆமா அப்பத்தா ….என்று சொல்லி விட்டு அவருடையக் காலைப் பிடித்து விட்டார். முதலில் திட்ட வந்தக் கிழவி ,நாதனுக்கு திருஷ்டி எடுத்து விட்டு….

என் ராசா …நீ எப்பவும் நல்லா இருக்கணும் !

இருவரையும் முத்தம் கொஞ்சி விட்டுக் கிழவி கைத்தடியை ஊணிக்கொண்டு நடந்தார். 

தமயந்திச் சிணுங்கிக் கொண்டே ….

அண்ணா என்னை எங்க வீட்டுக்கே கொண்டு போய் விட்டு விடுங்கள்…இங்கே எனக்கு எந்த வீட்டு வேலையும் இல்லை….இங்கே இருக்க எனக்குப் பிடிக்கவில்லை…!.

மனதில் , கணவனைப் பார்க்க ஆசையாக இருந்தது. அதன் வெளிப்பாடே இந்த வார்த்தைகள். நாகன் அதைப் புரிந்து கொண்டு…

அம்மா தினமும் இரண்டு பக்கா நெல்லை இடிக்கச் சொல்லுங்கள் , எல்லாம் சரியாகும். 

அம்மா சிரித்தபடி ….

அவளுக்கு இங்கே வேலையா இல்லை ? கிணற்றில் நீரை இறைக்கச் சொல்லு ! அம்மா வீட்டில் வேலைச் செய்யச் சோம்பல்…! 

இனிப் பாருங்கள் , நீங்களே வந்து சொன்னாலும் நான் நிறுத்தப் போவதில்லை. என்ற படி தமயந்தி கிணற்றடிக்குச் சென்றாள். நாகன் அம்மாவை விளையாட்டாகக் கோவித்தபடி …

என் தங்கையை வம்பு செய்வதே உங்களுக்கு வேலை , தமயந்தி …..தமயந்தி ..!

என்ன அண்ணா ? 

இந்த நேரத்தில் எதற்காக இந்த வேலை , நாளைக் காலையிலிருந்தேச் செய்யலாம். நான் உனக்கு உதவி செய்கிறேன்….

என்ன உதவி செய்வாய்? 

அருகில் வந்து ரகசிய குரலில் அம்மாவுக்குத் தெரியாமல்…

நானே நீரை இறைக்கிறேன் ……

இதைக் கேட்ட தங்கை சிரிக்க , அம்மா கோபப்பட்டார் . 

நல்ல அண்ணன் , நல்லத் தங்கை …எப்படியோப் போங்க …!

அம்மா இரவில் தமயந்திக்கு, வெந்நீரில் இரண்டு சொட்டு ஆமணக்கு எண்ணெய் கலந்துக் கொடுத்து விட்டு….

இதாப் பாரு புள்ள , என்ன இருந்தாலும் நீதான் பிள்ளையப் பெறணும். செல்ல மெல்லாம் செல்லுபடி ஆகாது…

ம்…..எங்க அத்தான் இருக்காரு…..

இருந்தா…..? 

எனக்கு வலிக்காகமப் பிள்ளைப் பெற மருத்து கொடுப்பாங்க…! 

அடி ஆத்தே….இத யாருச் சொன்னா ? 

எங்க அயித்த  …!

அடக் கடவுளே ….நாகா இங்கப் பாருடா …! 

நாகன் காதில் கேட்டாலும் பதில் எதுவும் சொல்லவில்லை. மனதில் பயணத்திற்கு முன்னால் பிரசவம் ஆகவேண்டும் என்று வேண்டிக் கொண்டுப்படுத்தார். 

நித்திலா , அத்தைக்குக் கால்களைப் பிடித்து விட்டபடி , அத்தையின் வயிற்றை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளுக்கு அம்மாவின் நினைவு வந்தது. ஆனாலும் எதுவும் கேட்கவில்லை. அப்பா , அம்மா பற்றி சொல்ல வேண்டாம் என்றுச் சொல்லி இருக்கிறார். 

இரண்டொரு நாளில் சேனாபதியிடம் இருந்துச் சேதி வந்தது. செய்தி என்னவென்றால்  அரசரும் , பேரரசரும் தொண்டியில் சிவ ஆலய பிரதிஷ்டை முடிந்ததும் பந்தருக்கு வரப் போகிறார்கள் என்பதாகும். செய்தி கொண்டுவந்த வீரனை அனுப்பி விட்டு , விரைவாகச்  சொக்கனேரி நோக்கிப் பயணமானார் . 

சேனாபதி விசாலன் சொக்கனேறி வருகிறார் என்றால் அயல்நாட்டுப் பயணம் விரைவாக ஆரம்பிக்கப் போகிறது என்று அர்த்தம். நானுக்கு ஏற்பாடுகளை விடத் தமயந்தி பிரசவம் நினைவிற்கு வந்து வதைத்தது. பயிற்சி கூடத்தில் சேனாபதி , நாகனுக்காகக்  காத்திருந்தார். 

கார் மேகம் , ராணுவ வீரர்களை முன்னதாகவே அங்கே வரவழைத்திருந்தார்.

வீரர்களுக்கான தகுதிச் சுற்று ஆரம்பமானது. 

நாகன் அவர்களுடைய இலக்கை நிர்ணயம் செய்தார். முதலில் வில்லாலிகளுக்கான தேர்வு ஆரம்பமானது. 

வீரர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள். அம்பு நொடியில் இலக்கை அடைந்தது . வீரர்களின் வேகம் வியப்பாக இருந்தது. சேனாபதி விசாலன் , நாகனைப் பாராட்டினார் .

நாகா உனது உழைப்பு வீணாவில்லை ….உனது பயிற்சி நன்றாக வேலைச் செய்கிறது. பயணம் ஆரம்பிக்கும் வரை இவர்கள் இங்கே தங்கி இருந்து பயிற்சி செய்யட்டும். 

அடுத்தடுத்து வீரர்களைத் தேர்வு செய்து அருகில் இருந்த பயிற்சி மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். 

சேனாபதி அடுத்து ஆயுதக் கிடங்கை பார்வையிட்டார். சேனாபதி ஆயுதங்கள் இறுப்புப் போதவில்லை என்றுக் கூறவே …தயாரிப்பு வேலைகளை நாகன் துரிதப்படுத்தினார். 

வீரர்களுக்குத் தரமான உணவு வழங்கப்பட்டது. காலை உணவாக விடிந்ததும் கேப்பைக் கூழும் ,தனியாக பானையில் உப்புக்கண்டக் கறியும் பிரட்டி வைக்கப்பட்டு இருந்தது . 

மதிய உணவில் முழு வாத்துகறியை  , மிளகுச் சேர்த்து வறுத்துப் பெரிய சட்டியில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இடையிடையே தேங்காய்ப் பாலும் , பருத்திப் பாலும் அண்டாவில் சூடாக நிறைத்து வைத்திருந்தார்கள். 

சமையல் வேலையில் நூற்றுக்கணக்கான ஆண்களும் ,பெண்களும் ஈடுபட்டிருந்தார்கள். 

மலை வாழையும் , செவ்வாழையும்  கணக்கிலாமல் தொங்க விடப்பட்டிருந்தது. மாதுளை முத்துக்கள் ஒருப் பக்கம் , கொய்யா மறுபக்கம் என்று வீரர்களுக்கு ஊட்டச்சத்தளிக்க குவித்துக் கிடந்தது. 

அவித்த நிலக்கடலையும் , மக்காச்சோளமும் சூடாக அவ்வப்போது கூடையில்  கொண்டு வைக்கப்பட்டது. இரவுச் சாப்பாடு , பகல் சாப்பாட்டை மிஞ்சியது . சோளச் சோறும் நெய்யில் வறுத்த வெள்ளாட்டங்கறியும் , திருக்கை மீன் குழப்பும் நாக்குச் செத்தவனுக்கும், நரம்பு செத்தவனுக்கும் உயிர் கொடுத்துக் கொண்டிருந்தது . 

சேனாபதி விசாலன் அருகில் இருந்த மாநகரங்களில் இருந்தும் வீரர்களை வரவழைத்திருந்தார் . நாகன் அவர்களுக்கு பயிற்சி கொடுக்கவும் , வசதிகளைச் செய்துக் கொடுக்கவும் ஒரு மாதக் காலம் ஓடி விட்டது. 

நாகனுக்கு மனமெல்லாம் வீட்டைச் சுற்றி வந்தது. தமயந்தி கண் முன்னே வந்து நின்றாள். அவளைப் பார்க்க வேண்டும் என்றுத் தோன்றியது. 

சேனாபதி ஆயுதங்களையும் ,  தானியங்களையும்  கப்பலில் ஏற்றச் சொல்லி உத்தரவிட்டார். நாகன் அதற்கான வண்டிகளை ஏற்பாடுகளைச் செய்தார். கப்பலில் பொருட்களை ஏற்றும் பணி ஆரம்பமானது. தங்கா, நாகனுக்கு உதவியாக இருந்தான். 

பணியாட்களை வைத்து ஆயுதங்கள் நூற்றுக்கணக்கான வண்டிகளில் ஏற்றப்பட்டு பகுதி , பகுதியாக அனுப்பி வைக்கப்பட்டது. 

பெருவாரியான வண்டிகளை அனுப்பி வைத்ததும் சேனாபதி அந்த வண்டிகளோடு கிளம்பிச் சென்றார். சேனாபதி விசாகன் தான் ஜலாதிபதியும் பதியும் ஆவார். ஜலாதிபதி என்பவர் கடற்படையின் தலைவர் அவருக்கு கீழே பயிற்சி பெற்ற அதிபதி , கனதிபதி , மண்டலாதிபதி , கஜபதி , ஈட்டிமார் , சேவை என்று ஆயுதப் பொறுப்பில் பலர் தலைமைப் பொறுப்பை வகித்தார்கள். அவர்களுக்கு கீழே நல்ல பயிற்சி பெற்றப் படைகள் இருந்தது. 

நாகன் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு , கார்மேகம் , தங்கா இருவரையும் அழைத்துக் கொண்டு பந்தர் பட்டினம் நோக்கிக் கிளம்பிச் சென்றார். 

நாட்கள் வேகமாக ஓடியது. தமயந்திக்கு பிரசவ நேரம் நெருங்க ஆரம்பித்தது. மறையனுக்கு செய்தி அனுப்பப்பட்டது. மறையனுக்கு மருத்துவப் பொருட்களை பந்தருக்கு அனுப்ப உத்தரவு வந்தது. நூற்றுக்கணக்கான குதிரை வண்டிகளில் மருத்துவப் பொருட்களும் தயாரிக்கத் தேவையான எண்ணெய் மற்றும் உரல் , நெய் , தேன் எல்லாம் சரி பார்க்கப்பட்டு அனுப்பப்பட்டது. இதற்கே ஒரு வார நாட்கள் முழுவதும் ஆகி விட்டது. 

மறையனுக்கும் கப்பலில் பயணப்பட உத்தரவு வந்தது . ஆணையை வாங்கிக் கொண்டு , தனதுத் தாயை அழைத்துக் கொண்டு பந்தருக்கு வந்தான். 

பந்தர் முழுவதும் வீரர்கள் மயமாக இருந்தது. ஊர் முழுவதும் பரபரப்பாக இருந்தது. மக்கள் ஓட்டமும் நடையுமாக இருந்தார்கள். பேரரசர் ராஜேந்திர சோழனும் , அரசர் ராஜாதி ராஜசோழனும் பந்தருக்கு வந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. 

கார்மேகத்தோடு , தங்காவும் அவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய நியமிக்கப்பட்டார்கள். 

அரசர்கள் இருவரும் திரிச்சடை கப்பலில் தங்கி இருந்தார்கள். திரிச்சடை மிகப்பெரிய ராணுவக் கப்பல். இதில் அரசர்களும் சேனாபதி , தளபதி , வீரர்கள் என்று அனைவருக்கும் தனித்தனியாக தங்கும் அறைகளும் , பயிற்சிக் கூடமும்  இடம்பெற்றிருந்தது.  

ஊரேத் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. எல்லா வீடுகளிலும் மாவிலைத் தோரணங்கள் கட்டி வாசலில் பாணக்கம் கரைத்து மண் பானைகளில் வரிசையாக வைத்து இருந்தார்கள். பேரரசர் தனது ஆட்சியை விரிவுபடுத்தப் போகிறார் என்ற சந்தோசம் மக்களிடம் அதிகமாகத் தெரிந்தது. 

ஊரில் எதுவும் விற்பனைக்கு இல்லை , எல்லாம் இலவசமாகக் கிடைத்தது. வீட்டுத் திண்ணையிலும்  அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. மக்கள் ராணுவ வீரர்களுக்குத் தங்களது அன்பைச் செலுத்திக் கொண்டிருந்தார்கள். 

ஊர் முழுவதும் வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது. சேனாபதி விசாலனோடு எல்லாத் தளபதிகளும் களத்தில் இறங்கி வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்

நாகன் தாரிணி கப்பலில் ஆயுதங்களை ஏற்றும் பணியில் இருந்தார். தாரிணி கப்பல் அதிகமாகத் தாக்குதல்களின் போது பயன்படுத்தப்படும் நடுத்தர வகைக்கப்பல் 

மீதி ஆயுதங்கள் , மருந்துகள் மற்றும் தானியங்கள் வஜ்ரா , மற்றும் சிறிய வகை கப்பலில்  ஏற்றும் வேலையும் நடந்து கொண்டிருந்தது. 

இரண்டொரு நாளில் இந்தப் பணிகள் முடித்து , கடைசி நாளன்று மரக்கலன்களில் நீரை நிரம்ப வேண்டும். 

அதற்கு அடுத்த நாளில் பிராமணர் குறித்துக் கொடுத்த நன்னாளில் பயணம் கடாரத்தை நோக்கி…..

நாகன் நிமிர்ந்து திரிசடை கப்பலைப் பார்த்தார். கப்பல் விண்ணைத் தொட்டு விடுமோ என்று ஐயமாக இருந்தது . புலிக் கொடி காற்றில் படபட வென அடித்தது . 

கப்பலின் பிரம்மாண்டத்தில் நாகன் மனம் கிறங்கிப் போனது. திடீரென்று மின்னலடித்தது போல மஞ்சள் நிற ஒலி கப்பலின் மேல் தளத்தில் பரவிக் கிடந்தது. 

ஆமாம் அது பேரரசர் ராஜேந்திர சோழன் அவர்களின் பிரம்மிப்பான தோற்றம்…தோள் வரை சுருண்டுக் கிடந்தக் கூந்தல் , வலிமையான தோள்கள். தங்கத்தில் கனமான தாழம்பூ மாலை , காதில் வைரக் கடுக்கண்…..வெண் பட்டில் வேட்டி அங்க வஸ்த்திரம், நெற்றியில் திருநீரில் பட்டை நடுவில் குங்குமம். நாகன் தன்னை அறியாமல் கைகளை தலைக்கு மேலே தூக்கிக் கும்பிட்டார். 

அதைக் கண்ட பேரரசர் தனது கையை உயர்த்தி காட்டினார். நாகன் உடல் மெய்சிலிர்த்தது. அவ்வப்போது ஆலோசனைகளில் கலந்துக் கொள்வதும் அவரோடு நெருக்கமானவர் பழகியது உண்மை தான் , ஆனால் பேரரசரை எப்போது பார்த்தாலும் நாகனுக்கு இந்த உணர்வு ஏற்படும் , ஏன் என்று காரணம் தெரியவில்லை. 

பேரரசர் அருகில் அரசர் நின்று கொண்டிருந்தார் . இளமைத் துள்ளும் பார்வை , தந்தைப் போல வீரம் மிகுந்தத் தோற்றம் உடலில் கவசம் தரித்துப் பயணத்திற்கு முன்பே ராணுவ வீரன் உடையில் , அவரைக் கண்டதும் கரையில் நின்றுக் கொண்டிருந்த மக்களுக்கு நெஞ்சில் உரமேறியது. இரண்டு அரசர்களையும் ஒருங்கே பார்த்த மயக்கத்தில் மக்கள் கோஷமிட்டார்கள். சேனாபதி அவர்களோடு நின்று அரசரைப் பார்த்து மகிழ்ந்தபடி இருந்தார். 

தங்காவிடம் பணிகளை ஒப்படைத்து விட்டு    நாகன் , அரசர்களைக் கண்ட மயக்கத்திலேயே வீடு வந்துச் சேர்ந்தார்.  எப்படி வீட்டிற்கு வந்தார் என்றுத் தெரியவே இல்லை.

வாசலில் மறையனின் மாட்டு வண்டி நின்று கொண்டிருந்தது. நாகன் வீட்டிற்கு வந்து பல  நாட்களுக்கு ஆனது, அதிகமான வேலைப் பளு காரணமாகத் தமயந்தி பற்றி நினைக்கவே இல்லை , மறையன் வண்டியைக் கண்டதும் . தமயந்தி நினைவு வந்தது. 

அவசரமாக உள்ளேச் சென்றுப் பார்த்தார் , தமயந்தி தனி அறையில் படுக்க வைக்கப்பட்டு இருந்தாள். பிரசவ வலி அடிக்கடி வந்து கொண்டிருந்தது. 

அம்மா , நாகனை கவலையோடுப் பார்த்தார். இந்த ஒரு வாரமாக தமயந்திக்கு விட்டு விட்டு, வலி வந்த வண்ணம் இருந்தது. அம்மா நாகன் உடனிருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து……

நாகா …..நீங்கள் இருவரும் நாளைப் பயணப்பட வேண்டுமா ? தமயந்தி இன்னும் பிரசவ வலி வரவில்லை. பாவம் அடிக்கடி சூட்டு வலியால்  துடிக்கிறாள்…..

நாகன் எதுவும் பதில் சொல்ல முடியாமல் தவித்தார் . குழந்தைகள் அத்தை வலியால் துடிப்பதைக் கண்டு பயந்துக் கிடந்தார்கள். அக்கம் பக்கம் இருந்தப் பெண்கள் அனைவரும் இங்கே தான் தவம் கிடந்தார்கள். 

வெந்நீர் தயாராக அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது. மறையன் முகத்தில் ஈயாடவில்லை …..அவளுக்குப் பச்சிலை மருந்தைக் கொடுத்து விட்டு , வயிற்றில் எண்ணைத் தடவி விட்டு வெளியே வந்தான் . 

நாகன் அவனைத் தனியாக அழைத்துப் பேசினான். 

மறையா பிரசவம் எப்போதும் ஆகும்…..? 

எப்போது வேண்டுமானாலும் ஆகிவிடும். ஆனால் தமயந்தி தான் மிகவும் சோர்வாக இருக்கிறாள். 

நாதனுக்கு மனைவி ஞாபகம் வந்தது. உடலில் ஏதோ ஒரு துடிப்பு உண்டானது.  கடவுளை வேண்டிக் கொண்டு மறையனுக்கு ஆறுதல் சொன்னார் . 

மறையா பேரரசர் நாளை விடிந்ததும் , வீரர்களைக் கப்பலில் ஏற்றச் சொல்லி இருக்கிறார். எப்படியும் சூரியன் உச்சியை எட்டும் போது கப்பல் கிளம்பி விடும் என்று தோன்றுகிறது. நான் இரவேக் கிளப்பி விடுவேன். நீ நாளைக் காலையில் வீட்டில் இருந்து கிளம்பி விடு ….முடிந்தவரையில் நீ கடைசிக் கப்பலில் ஏறும்படிப் பார்த்துக் கொள்கிறேன். 

மறையனுக்கு மனமில்லை. ஆனாலும் பயணத்தை அவன் தவிர்க்க விரும்பவில்லை. இது அரசரின் ஆணை. 

சரி மாமா…தமயந்திக்குத் தெரியாமல் கிளம்பி விடுகிறேன். அந்த ஈசன் அருளால் அதற்குள் பிரசவம் நடந்து விட்டால் நன்றாக இருக்கும். 

மறையன் குரல் வலுவில்லாமல் இருந்தது. நாகன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு நடுநிசியில் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றார். தமயந்தி பிரசவ வேதனையில் கத்திக் கொண்டிருந்தாள். 

நாகனுக்கு உடம்பெல்லாம் என்னவோ போல இருந்தது. அம்மாவிடம் விடைப் பெற்று விட்டுக் குழந்தைகளுக்கு முத்தமிட்டுவிட்டுக் கிளம்பிச் சென்றார். அத்தை , தமயந்தி அருகில் உட்கார்ந்து கொண்டு ஆதரவாகக் கையைப் பிடித்துக் கொண்டிருந்தார். அருகில் சிலப் பெண்கள் தயாராக அமர்ந்திருந்தார்கள்.

நாகன் கடமையேக் கண்ணாக துறைமுகத்திற்கக் கிளம்பிச் சென்றார். வழியெங்கும் பந்தங்கள் ஏற்றப்பட்டு கப்பலில் விடுப்பட்டப் பொருட்களை ஏற்றவதிலும் , கப்பலை அலங்கரிப்பதிலும் நூற்றுக்கணக்கான வீரர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். 

தங்காவோடு , நாகன் பணிகளில் மூழ்கிப் போனார். சேனாபதி விசாலன் ….பேரரசருடன் கிளம்புவதற்கான ஏற்பாடுகளைச் பற்றி ஆலோசனைச் செய்தனர். 

அரசர்களுக்கென்று சைவச் சமையல் செய்ய சமையல்காரர் தனியாக ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தார்கள். படை வீரர்களுக்கும் தனியாக சமையல்காரர்கள் குழு ஒன்று இருந்தது. அனைவரும் பந்தரில் தயாராக இருந்தார்கள். 

விடியும் நேரம் வந்தது….வீரர்கள் படைப் பிரிவுகள் அடிப்படையில்  அவர்கள் ஒவ்வொரு கப்பலாகப் பகிர்ந்து அனுப்பிக் கொண்டு இருந்தார்கள். 

பிராமணர்கள் குறித்துக் கொடுத்த நேரத்தில் பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டது. நாகன் , மறையனை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார். மறையன் எங்கே வராமல் இருந்து விடுவானோ என்று ஒரு பக்கம் பதப்பதைப்பாக இருந்தது. 

இறுதியாக இசைக் கலைஞர்கள் மற்றும் சேனாபதி , மற்ற நகரங்களில் இருந்து வந்தத் தளபதிகள் மட்டுமே கரையில் இருந்தார்கள். 

பூஜைகள் முடிந்தது , பேரரசர் அரசர் இருவரும் திரிசடைக் கப்பலில் ஏற ஆரம்பித்தார்கள். நாகனுக்கு பதற்றமாக இருந்தது . மறையன் மருத்துவக் குழுவின் தலைவனாகவும் இருந்தான் அதனால் காரணம் எதுவும் சொல்ல முடியாது. 

நாகன், மறையனின் தாமத்திற்கான காரணம் தெரியாமல் பதற்றத்துடன் இருந்தார். பிரசவம் ஆகி இருக்குமா ? இல்லை ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு தமயந்தி சிரமப்படுகிறாளா?  எதுவும் தெரியாமல் தவித்தார். 

இசைக் கலைஞர்களும் , மற்ற தளபதிகளும் ஏறி விட்டார்கள். நாகன் ஏற  வேண்டிய முறை , சேனாபதி விசாலன் , நாகனிடம் மறையன் பற்றிக் கேட்டார். நாகன் பதில் சொல்ல முடியாமல் தவித்தார். சங்கு ஊதிப் பயணத்தை ஆரம்பித்து வைத்தார்கள். 

கப்பல் மெல்ல நகர ஆயத்தமானது. நாகனுக்கு மறையன் வரவில்லை என்கிற கோபத்தை விட , தமயந்திக்கு என்னவாகி இருக்கும் என்கிறப் பயம் அதிகமாக இருந்தது. 

கண்களில் நீர் தேங்கியது . தூரத்தில் குதிரையில்  மறையன் வேகமாக வந்து கொண்டிருந்தான். 

நாகன் பரபரப்பாக கரையில் இருந்தவர்களுக்கு ஜாடை செய்தார். கப்பல் நீண்ட தூரம் சென்றிருக்கவில்லை , ஆனால் மறையன் நீந்தி வந்து ஏணியில் ஏற முடியாத நிலை. 

கரையில் இருந்தவர்கள் ,மறையனை தோணியில் ஏறிக்கொண்டு வேகமாகத் துடுப்பைப் போட்டுக் கொண்டிருந்தானர். 

நாகன் இருந்த கப்பல் அருகில் சென்று , கயிற்றின் மூலமாக ஏறி மறையன் மேல் தளத்திற்கு வந்தான். 

இப்போது தான் நாகனுக்கு  உயிர் வந்தது. அவன் ஏதாவது நல்ல செய்தி சொல்லுவான் என்று எதிர்பார்த்தபடி முகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தார். 

நாகன் தன்னை ஆசுவாசப் படுத்துக் கொண்டு ….

மாமா ……தமயந்தி நல்லா இருக்கா , மருமகன் பொறந்திருக்கான்…என்றான். நாகனுக்கு ஆனந்தம் தாங்காமல் மறையனைத் தோளுக்கு மேலே தூக்கிக் கொண்டாடினார் . 

அதே நேரத்தில் கப்பலின் மேல் தளத்தில் இருந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பொருட்டு சங்கு ஊதப்பட்டது. மனதில் ஒரு பலம் ஏற்பட்டது. இனி எதிரிகள் யாராக இருந்தால் என்ன ?இது என்னச் சாதாரணப் படையா ? பேரரசர் ராஜேந்திரச் சோழனின் கடற்படை என்கிறக் கர்வம் ஒவ்வொரு வீரனுக்குள்ளும்ஏற்பட்டது. 

கடல் அரசனின் மேலே தனது கம்பீரமான கடற்படையைத் திரட்டிக் கொண்டு கிளம்பினார் ராஜேந்திரச் சோழன் …..கடாரத்தை நோக்கிக் கம்பீரமாக சங்குகள் சத்தமிட , பறைகள் ஒலிக்க பயணம் ஆரம்பமானது. 

                           ***************

2016 ல் நடந்த அகழ்வாராய்ச்சியில் தஞ்சை அருகில் இருந்த மந்தர்பட்டினத்தில் கிடைத்த செப்புக் காசுகள் , சுடு மண்குழாய் , ஆபரணங்கள் , ஊது உலை இவை எல்லாம் அந்த இடத்தில் இருந்து ஏற்றுமதி இறக்குமதித் தொழில் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாகப் படித்தேன் . அதன் அடிப்படையில் அங்கே இருந்துப் படைகள் கடல் வழியாகக் கடாரத்திற்குப் பயணம் செய்து இருந்தால் !! என்கிற கற்பனைக் கதை தான் இது ….

நன்றி

தரஹி கண்ணன். 

15 Comments

  1. வரலாற்றுப் பக்கங்களில் நாம் படிக்கும், ‘ராஜேந்திர சோழன் கடாரத்தைப் போரிட்டுக் கைப்பற்றினார்’ என்ற ஒருவரிக்குப் பின் எத்தனை பேரின் முயற்சியும் உழைப்பும் உள்ளது என்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இதில் தமயந்திக்கு பிரசவம் நல்லமுறை நடந்து தாயும் சேயும் பிழைப்பார்களா? மறையன் கப்பல் ஏறுவானா என ஒரு மர்மநாவல் படிப்பதில் ஏற்படும் பரபரப்பு வேறு. அருமை. நீண்டநாட்களுக்குப்பின் ஒரு வரலாற்றுப் பெருங்கதை(சிறுகதை என்று என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை)யைப் படித்ததில் பரம திருப்தி.

  2. வருத்தம் அளிக்கிறது. இது சிறுகதை என்பதால். கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் போல ஒரு நல்ல நாவலை எதிர்பார்க்கிறேன்.அந்த திறமை இந்த பந்தர் பட்டினத்தில் காண்கிறேன்.நாகனின் பயணத்தில் கிராமகாட்சிகள்,திரைப்படம் போல ஓடுகிறது.

  3. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி

  4. Beautiful narration and excellent creativity….. Even though it is a short story…it gives immense satisfaction for story lovers. Great work sister.

  5. அழகான கதை , தகவல்கள் அருமை வாழ்த்துக்கள்

  6. அழகான கதை

    அருமையான சொல்லாடல்கள்

    பழங்காலத்தில் ஒரு நகரம் எப்படி இருந்திருக்கும்.

    ஒரு படையெடுப்பு எப்படி இருக்கும் என்பதை காட்டியுள்ளது.

    சராசரி மக்களின் வாழ்க்கை முறையை காட்டிய விதம் அருமை.

    நானும் பக்கத்தில் வாழ்ந்த உணர்வு.

    ஆங்காங்கே எழுத்துப்பிழைகள் உள்ளன. மற்றபடி குறைகள் ஏதும் இல்லை.

    மென்மேலும் எழுத வாழ்த்துக்கள்.

Leave a Reply