Team Heritager November 11, 2022 0

பள்ளிப்படை கோவில் பொருள் என்ன?

“பள்ளிப்படைக் கோயில்” என்பது சோழர்காலத்தில் பெரிதும் காணப்பட்ட இறந்தோர் நினைவாக எழுப்பப்படும் ஆலயமாகும்.

இதில் படை என்பது, படுதல் (இறத்தல் – வீழ்தல்) என்ற சொல்லில் வந்தது.

பழைய நடுகற்களில் படுதல் என்பது பட்டான் கல் என வரும். அதன் பொருள் இறந்தோர் கல் என்பதாகும். உதாரணமாக: நடுகல் கல்வெட்டுகளில் வரும் “எய்து பட்டான்கல்” என்பது எதிரி எய்த அம்பு பட்டு இறந்ததை உணர்த்தும்.

புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகளில் குரங்குப்படை என்ற சொல்லாடல் வருகின்றது. இதன் பொருள் குரங்கு பட்டடை என்பதன் திரிபாகும். “குரங்கு” என்பதற்கு “தாழ்தல்” என்பது பொருள். “பட்டடை” என்பதற்கு படு அடைத்தல் என்பது பொருள். 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர்கள் கல்வெட்டில் குரங்கு பட்டடை என்ற பகுதி ஒரு நிலத்தின் பகுதியாக குறிப்பிடப்படுகின்றது. எனவே பள்ளி படையில் வருகின்ற படை என்பது பட்டடை = படு+அடை என்பதின் சுருக்கம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதே பொருளிலேயே பள்ளிப்படையும் வருகின்றது.

பள்ளி என்பது படுத்து உறங்குதலைக் குறிக்கும். எ.கா: பள்ளியறை உறங்கும் அறை. ஆனால், இங்கு “இறப்பு” என்ற நிரந்தர உறக்கத்தை குறிக்கும். பள்ளிப்படை என்பதன் விளக்கப்பொருள்: “இறந்தோர் துயில் கொள்ளுமிடம்” என்பதாகும்.

பள்ளிப்படை எழுப்புதல், பெருங்கற்கால பண்பாட்டின் தொடர்ச்சி என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அரச குடும்பத்தில் உள்ளவர்கள், அரசர்கள் இறந்தால் பள்ளிப்படைக் கோவிலாக எழுப்பப்படுகிறது.

படம்: திருப்புறம்பியப் போரில் சோழருக்கு ஆதரவாக போரிட்டு வீரநிலை அடைந்த கங்க மன்னன் பிருத்விபதியை நன்றியுடன் நினைவுகூறும் விதமாக, சோழர்கள் எழுப்பிய பள்ளிப்படை எனக் கருதப்படுகிறது. ஆனால் கல்வெட்டு தகவல் ஏதும் இல்லை. திருப்புறம்பியம்.

visit: www.heritager.in | Heritager.in

Join Our Whatsapp: https://chat.whatsapp.com/FUgfNDGPv3WHfOyfstaqbB

Category: