உற்பத்தி முறையை அடிப்படையாகக் கொண்ட மார்க்சிய வரலாற்று அணுகுமுறை பயனளிக்கும் விதத்தில் உள்ளது. தமிழ் சமூகத்தைப்பற்றி இன்னும் ஒரு முழுமையான நூல் இன்னமும் வெளிவரவில்லை எனினும் தமிழ்ச்சமூகத்தின் ஒருசில காலகட்டங்களைப் பற்றிய படைப்புகள் ஆங்காங்கே வெளி வந்துள்ளன. இத்தகைய ஒளிக் கீற்றுக்களில் ஒன்றாகவே தோழர் ஆ.இரவிகார்த்திகேயனின் இந்நூல் அமைந்துள்ளது.
புராதானக் காலக்கட்டம் தொடங்கி இன்றைய காலகட்டம் வரையிலான தமிழ்ச் சமூகத்தை விளங்கிக்கொள்ள துணை செய்கிறது வேட்டைச்சமூகம். கால்நடைச் சமூகம், உழவுச் சமூகம், வணிகச்சமூகம் என உருவெடுத்த பண்டைய தமிழ்ச் சமூக அமைப்புகளில் தெய்வங்களைப்பற்றி தமிழ்ச்சமூகத்தின் பிற அம்சங்களோடு காலம் தோறும் உருவான உற்பத்திப் போக்குடன் ஆராய்ந்துள்ளது போர்கள் அதிகம் பெற்ற சூழவிலும், நாடோடி வாழ்க்கை முறைமாறி நிலைத்த பிரதேச வாழ்க்கை முறைக்கு உயர்ந்த சூழலிலும் அவற்றிற்கு ஏற்ப தெய்வ வடிவங்கள் மாறியதையும், உற்பத்திக்கு பயன்படும் நீரிடங்கள் எவ்வாறு வழிபடுதலங்களாகவும் பயன்பட்டன என்பதையும் ஆண்டான் அடிமைச்சமூகத்தில் பெருத்தெய்வ வழிபாடு குறித்தும் விளக்குகிறது இந்நூல்.
ஆரியமயப்பட்ட நெறிமுறைகளும் பெருந்தெய்வ வழிபாடுகளும் பெருகிய காலங்களில் கிராமப்புற மக்கள் பாரம்பரிய தமிழ் கடவுள்களையும் சிறு தெய்வ வழிபாடுகளையும் தொடர்ந்து கடைபிடிப்பதின் மூலம் தம் தனித்துவத்தை இழந்து விடாமல் இருந்தமையை விளக்குகிறது. அதன் ஆதிக்க மறுப்பு போக்கையும் சுட்டிக் காட்டுகிறது. சாதிப்படிநிலைகளில் மதிப்பீடு செய்வதில் சைவத்திற்கும், வைணவத்திற்கும் இடையிலான வேறுபாடுகளும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய இனத்திற்குள் பண்டைய தமிழ்ச் சமூகத்திற்கு முதன்மையான ஆதாரமாக இலக்கியங்கள் அமைகின்றன. கி.பி. 5ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு அதிக கல்பொறிகள் ஆரியமயமாக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்திலே அதிகம் கிடைக்கின்றன. பிற மொழியினர், புதிய சமயத்தினர் ஆகியோர் இங்கு ஆதிக்க சக்திகளாக உருமாறிய போது இங்கே இருந்த பரம்பரிய ஆளும் சக்திகள் அவற்றை எதிகொண்ட விதம் பற்றியும் இந்நூல் பேசுகிறது.
தம் தேசிய இன அடையாளத்தை பேணிக்கொள்ள பாரம்பரியமாக முகிழ்ந்து வளர்ந்த ஆதிக்க எதிர்ப்புக் கூறுகளை வளர்த்தெடுப்பதற்கு இந்நூல் பயன்படும்.