சிற்பச் செந்நூல் – வை . கணபதி ஸ்தபதி (2023 புதிய பதிப்பு)
தமிழ்மொழிக்கு அகத்தியனைப் போல சிற்பக் கலைக்கு மயனே முதலாசிரியன் ஆவான். இவன் இயற்றிய நூல் ‘மயமதம்’ எனப்படும். கட்டடக் கலையிலும், சிற்பக்கலையிலும், இவன் வகுத்தளித்த கொள்கையே ‘மயமதம்’ எனப்படுகிறது. இன்றளவும், இந்நூல் சிறப்பான நூலாக, அறிஞர்களாலும் சிற்பிகளாலும் போற்றிப் பின்பற்றப்படுகிறது. இவன் வழித்தோன்றிய நூலாசிரியர்கள் பலர்.
மானசாரம் என்ற கட்டடக்கலை நூல் முப்பத்து இரண்டு சிற்ப நூல் ஆசிரியர்களைக் குறிப்பிட்டு அவரவர் பெயரில் எழுந்த சிற்ப சாத்திரங்களையும், நாம் அறியச் செய்கின்றது. அவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட தென்னாட்டுச் சிற்பக் கலை மரபைச் சேர்ந்த கலை நூல்கள் ஆகும்.
தமிழக சிற்பக்கலை மரபின் சிறப்பியல்புகளை ஒருங்கே கொண்டு, அம்மரபு வழுவாமல், அம்மரபிற்கு மேலும் ஆக்கம் அளித்திடும் வகையில் எளிய நடையில் , இனிய தமிழில் , இயற்றப்பட்ட முதல் நூல். 339 பக்கங்களையும், 316 விளக்கப் படங்களையும் , கொண்ட இந்நூல் சிற்ப ஆகம வழி நின்று இலக்கணங்களை விரித்துரைக்கும், ஒப்பற்ற கலை நூல்.
கல், மரம், சுதை, உலோகம், வண்ணம் ஆகிய பொருள்களால் சிற்ப வடிவங்கள் செய்து வரும் அனைத்துச் சிற்பிகள் யாண்டும் பின்பற்றவல்ல சிறந்ததொரு குறிப்பு நூல் .
கலைபயில் மாணாக்கர்கள் , பரம்பரைச் சிற்பக் கலைஞர்கள், கைவினைஞர்கள், சிற்பக்கலைத் துறை ஆராய்ச்சியாளர்கள், தொல்பொருள் துறை ஆய்வாளர்கள், சிவாச்சாரியார்கள் வைணவ அர்ச்சகர்கள், ஆகம விற்பன்னர்கள், திருக்கோயில் அதிகாரிகள் மற்றும் கலைக்காவலர்கள் போன்றோர்க்குப் பெரிதும் பயன் தரும் நூல் .
புத்தக உள்ளடக்கம்
- சிற்பத் துறை அளவைகள்
- படிம வகைகள்
- தெய்வத் திருமேனிகளின் உயர நிர்ணயம்
- வைணவத் திருமேனிகளின்
- உயர மானங்கள்
- உற்சவப் படிமங்கள்
- ஆயாதி கணிதம்
- கை அமைதிகள்
- படிமங்களின் பங்க இலக்கணம்
- படிமத் திருக்கோலங்கள்
- நடனத் திருக்கோலங்கள்
- தலைக் கோலங்கள் அணிகலன்கள்
- ஆடைகள்
- கருக்கணிகள்
- சின்னங்கள்
- ஆயுதங்கள் விலங்குகள் – பறவைகள்
- கலையும் சுவையும் ஆகமக் கொள்கை விளக்கம்
- இலிங்கத் திருமேனி
- செப்புத் திருமேனிகள்
- கடுசர்க்கரைப் படிமங்கள்
- அறுவகை மானங்கள்
- தாளமானம்
- தாள வகைகள்
- உத்தம தசதாளம் – பொதுமானம்
- விஷ்ணுப் படிமம்
- கந்தப் படிமம்
- பௌத்த சமணப் படிமங்கள்
- மத்திம தசதாளம்
- பெண்மானம்
- ஆண்மானம்
- பெண்மானம் – வைணவம்
- இராமன் -சீதை – அனுமன் படிமங்கள்
- அதம தசதாளம்
- ஆண்மானம்
- பெண்மானம்
மாமல்லபுரத்தில் தமிழ்நாடு அரசின் சிற்பக் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. 1957ல் உருவாக்கப்பட்ட இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்க தகுந்த நூல்களை தமிழிலேயே உருவாக்க 1970ல் மு. கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது முடிவுசெய்யப்பட்டது. படிமக் கலை இலக்கணம் (பிரதிமாலக்ஷணம்), உருவ அமைதி இலக்கணம் (ரூபத்யாணலக்ஷணம்), கட்டடக் கலை இலக்கணம் (பிராசாதலக்ஷணம்), பழுது நீக்கிப் பாதுகாக்கும் நெறி (ஜீர்ணோத்தாரணலக்ஷணம்) ஆகிய நான்கு புத்தகங்களை வெளியிட 1970 ஆகஸ்ட் 4ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.இந்தப் புத்தகங்களை எழுதுவதற்காக காலம்காலமாக இந்தப் பணிகளைச் செய்துவரும் கலைஞர்களிடமிருந்து ஓலைச் சுவடிகள் சேகரிக்கப்பட்டன. மாமல்லபுர சிற்பக் கலை பயிற்சி நிலையத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ம. வைத்தியநாத ஸ்தபதியிடமிருந்தே பெரும்பாலான ஓலைச் சுவடிகள் பெறப்பட்டன. தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம், புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்ட்டிடியூட் ஆகிய இடங்களில் இருந்த ஓலைச் சுவடிகளும் சேகரிக்கப்பட்டன. அச்சில் இருந்த சிற்ப, ஆகம நூல்களும் சேகரிக்கப்பட்டன. பல்வேறு கோவில்களுக்கு சென்று சிற்பங்களை பார்த்து, அவற்றிலிருந்து சில படிப்பினைகள் பெறப்பட்டன.ஓவியங்கள் வரையப்பட்டன. இந்த பணிகள் முடிய கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஆயின. முடிவில் MGR முதலமைச்சராக இருக்கும்போது 1978ல் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் இந்த நூலை வெளியிட்டது. 1994லும் 2001லும் மறுபதிப்புக் கண்ட இந்த நூல் அதற்குப் பிறகு அச்சில் வந்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையில், இந்தப் புத்ககத்தை மறுபதிப்புச் செய்திருக்கிறது இந்து சமய அறநிலையத் துறை.
சிற்பங்கள் பல்வேறு பொருள்களில் உருவாக்கப்படுகின்றன. அவற்றின் வகைகள், இந்தச் சிற்பங்களுக்கான அளவுகள், சிற்பங்களின் பல்வேறு அங்கங்கள், அவற்றின் முத்திரைகள், சிற்பங்களின் ஆபரணங்கள் அவற்றின் அடித்தளம், அவற்றைக் கண் திறப்பது ஆகியவை குறித்து விரிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம். இது தவிர ஆகமங்கள் குறித்த சிறிய விளக்கமும் இருக்கிறது.
புத்தகம் நெடுக, அவை சொல்லும் விஷயத்தை விளக்குவதற்காக கைகளால் வரையப்பட்ட ஏகப்பட்ட படங்கள் நிறைந்திருக்கின்றன.இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு, கோவில்களில் உள்ள சிற்பங்களில் எவ்வளவு விஷயங்களைக் கவனிக்காமல் கடந்துசெல்கிறோம், அவற்றுக்குப் பின்னால் எவ்வளவு பெரிய உழைப்பு இருக்கிறது என்பது விளங்குகிறது.
இந்தப் புத்தகம், ஒரு சிற்பக் கலை பாட நூல். ஆனால், தமிழக கோவில்களிலும் சிற்பங்களிலும் ஆர்வமுடையவர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல் இது. எளிய தமிழில் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த புத்தகத்திற்கு பின்னால் உள்ள உழைப்பையும் தகவல்களையும் பார்க்கும்போது, விலை மிகக் குறைவு. பெரிய சைஸில் 320க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தின் விலை 600 ரூபாய் மட்டுமே.
சிற்பச் செந்நூல்,
ஆசிரியர்: வை. கணபதி ஸ்தபதி,
வெளியீடு: இந்து சமய அறநிலையத் துறை, சென்னை.
விலை: ரூ. 600/-