தமிழகத்தின் மிக முக்கியமான தொல்பொருள் ஆய்வாளர்களில் ஒருவரும், தமிழக வரலாற்றை கல்வெட்டுகள் மற்றும் கோயில்களின் வழியே தேடுபவருமான குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூல் இது. தமிழ்நாட்டுத் திருக்கோயில்களை வழிபாட்டுத் தலங்கள் மட்டுமே என நினைக்கக்கூடாது. ஆகமம், சிற்பம், ஓவியம், செப்புத் திருமேனிகள், கட்டடக்கலை, மரவேலைப்பாடுகள், நாட்டியம், இசை என எண்ணற்ற கவின் கலைகள் சார்ந்த துறைகள் எத்தனையோ நூற்றாண்டுகளாக அங்கு வாழ்ந்துகொண்டே இருக்கின்றன. அறம் சார்ந்த சமுதாயம் உருப்பெற திருக்கோயில்களே காரணமாக இருந்தன. தருமநீதி தழைக்கின்ற இடமும் அதுதான்.
பெருமன்னர்களும், சிற்றரசர்களும், அவர்கள்தம் அலுவலர்கள், படைத்தலைவர்கள், அரசியர், ஊர்ச்சபையோர், கொடையாளர்கள், கடைநிலைச் சாமானியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் நாட்டிற்கு விட்டுச் சென்ற வரலாற்று ஆவணங்கள் அனைத்தும் கல்வெட்டுகளாகவும், செப்பேட்டுச் சாசனங்களாகவும் உறைகின்ற இடமும் திருக்கோயில்தான். நம் முன்னோர்களின் சமூக அக்கறை எவ்வளவு ஆழமானது என்பதைத் கல்லெழுத்துக்கள் வாயிலாக அறியலாம். குறிப்பாக நீராதாரங்களைத் திருக்கோயில்கள் எவ்வாறு காத்து நின்றன என்பதை உணரலாம்.
இப்படிக் கல்வெட்டுகள் வழியாகக் கோயில்கள் சொல்லும் கதைகள், முன்னோர்களை நினைத்து நம்மைப் பெருமிதம் கொள்ளச் செய்யும்.