தமிழ்ப் பண்பாட்டுக் கருவூலங்களாகத் திகழும் கோயில்களைப் பற்றிய ஆய்வுகள் அதிக அளவில் நிகழ்த்தப்படல் வேண்டும். அத்தகைய ஆய்வுகளின் வாயிலாகக் கோயிற்கலைகளில் பொதிந்து கிடக்கும் அழகியல் கூறுகள், அக்காலச் சமூகம், அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம் போன்ற அனைத்துக் கூறுகளையும் முழுமையாக அறிய இயலும். இவைதவிரக் கோயிற் கட்டடக்கலை அமைப்பு முறைகள், சிற்பங்களின் அமைப்பு முறைகள், அவற்றில் காணப்படும் உத்திகள், ஓவியங்களில் வெளிப்படும் அக்கால ஆடை அணிகலன்கள், திருவிழாக்கள், சமூகத்தோடு கொண்டிருந்த தொடர்புகள், வழிபாட்டு முறைகள் ஆகமங்களில் காணப்படும் கோயிற்கலை பற்றிய கருத்துக்கள் எனப் பல்வேறு செய்திகளையும் இத்தகு ஆய்வுகளால் அறியலாம்.
கோயில் ஆய்வுகள் பெருகிவரும் இன்றைய சூழலில் கோயில் ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில், அவர்களுக்கு வழிகாட்டும் வண்ணம் கோயில் ஆய்வு நெறிமுறைகளைச் சொல்லும்படியான நூல்கள் தமிழில் இதுகாரும் தோன்றவில்லை என்பது பெரும் குறையாகவே இருந்து வருகிறது. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் “பாண்டிய நாட்டு வைணவக் கோயில்களில் கலையும் கட்டடக் கலையும்” எனும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வை நான் மேற்கொண்டபோது கோயில் ஆய்வு நெறிமுறைகள் தொடர்பான நூல்கள் இல்லாத காரணத்தால் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்திக்க நேர்ந்தது. இனிவரும் காலத்தில் கோயில் ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கு இத்தகைய இடர்ப்பாடுகள் நேரா வண்ணம் நெறிமுறைகள் தொடர்பாக ஒரு நூலை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் அச்சூழலில் தோன்றியது. அதன் காரணமாக மேற்கொண்ட முயற்சியின் விளைவாக எழுந்ததுவே உங்கள் கரங்களில் திகழும் இந்நூல்
இந்நூலின்கண் கோயில் ஆய்வு தொடர்பான அனைத்து நெறிமுறைகளும் முழுமையாக இடம்பெற்றுள்ளன சொல்வதற்கில்லை, என்றாலும் தமிழில் கோயில் எனச் ஆய்வு நெறிமுறைகளை அறிமுகம் செய்யும் முதல் நூல் இதுவாகும். இதுபோன்று கோயில் ஆய்வு நெறிமுறைகள் தொடர்பாகப் பல ஆய்வு நூல்கள் வெளிவர வேண்டும் என்பது என் அவா கோயிற்கலைகளில் நல்ல பயிற்சியுள்ள பெரும் பேராசிரியர்கள் இத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். “கோயில் ஆய்வும் நெறிமுறைகளும்” என்னும் இந்நூலில் கோயிற்கலைக் கூறுகளைப் பற்றி விளக்கியுள்ளதோடு ஆய்வில் பயன்படுத்தப்பட வேண்டிய நெறிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முறையாக
இந்நூல் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு மட்டுமேயல்லாது கோயில் பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்கண் விளக்கப்பட்டுள்ள செய்திகளை எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் தொடர்புடைய வரைப்படங்கள், நிழற்படங்கள் அந்தந்த இடங்களிலேயே ஆய்வாளர்கள் புரிந்துகொள்ளும் வகையில் இடம்பெற்றுள்ளன. மேலும் பின்னிணைப்பாகத் தமிழகத்தை ஆட்சி செய்த அரச வம்சங்களின் பட்டியலும், முக்கியமான கலைச் சொற்களும் அவற்றின் விளக்கங்களும் அனைவருக்கும் பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.