ஐங்குறுநூறு: மருதம் / Aiṅkuṟunūṟu: Marutam

800

பாடத் தேர்வுப் பகுதியில் பாடங்களை அறிவியல் முறைப்படி (Scientific method) ஆய்ந்து இறுதியாக்கப்பெற்ற மூலமே இப்பகுதியில் தரப்படுகிறது. பத்துக்களின் தலைப்பை எழுதுதல், ‘பத்து முற்றும்’ என்று குறித்தல், மூலத்தின் இறுதியில் புலவர் பெயர் சுட்டும் முறை ஆகியன ஓலைச் சுவடி முறையாதலால், அவை மட்டும் இப்பகுதியில் அச்சிடப்பட்டுள்ளன; பாடல் விளக்கத்திற்காகத் தரப்படும் உள்தலைப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. பாடல்கள் யாப்பு, புணர்ச்சி, சந்தி விதிகளுக்கு உட்படுத்தப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளன; கூற்றுகளும் தமிழ்ச் சொற்புணர்ச்சி விதிகளுக்கு ஏற்பவே இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. சந்தி பிரித்துப் பதிப்பது செம்பதிப்பு (Critical edition) முறையன்று என்பது குறிப்பிடத்தகும்; சந்தி பிரித்துப் பதிப்பிப்பது செவ்வியல் தமிழை (Classical Tamil) முழுமையாகத் தருவது ஆகாது.

முந்தைய பதிப்புகளில் கூற்றுகள் யாவும் சந்தி பிரித்தே அச்சிடப்பெற்றுள்ளன; இச்செம்பதிப்பில் சந்தி பிரிக்காமல், பழந்தமிழ் இலக்கண மரபைப் பேணும் வகையில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இக் காரணத்திற்காகவே கூற்றின் தொடக்கத்தில் ஓலைச் சுவடியில் உள்ளது போன்றே ‘என்பது’ என்பதைக் குறிக்கும் ‘எ-து’ என்ற சுருக்க எழுத்துகள் அச்சிடப்பட்டுள்ளன.

செம்பதிப்பின் இன்றியமையாப் பகுதி இது. கிடைக்கக் கூடிய அனைத்துச் சுவடிகளும் ஆயப்பெற்று அவற்றிலுள்ள பாடங்கள் தொகுக்கப்பெற்று ஒவ்வொரு பாடத்திற்கும் நேராக அப்பாடத்தைத் தரும் சுவடிகளைக் காலவாரியாக எழுதித்தரும் சீரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது; ஓலைச் சுவடிகளின் வரிசைக்குப் பின்பு தாள் சுவடிகள் சிறிது இடைவெளிவிட்டுக் காட்டப்பட்டுள. இவற்றின்பின் பதிப்புகளை எல்லாம் ஆய்ந்து சுவடிகளை ஆதாரமாகப் பெற்ற பதிப்புகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பாடங்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. பாடங்களின் மேல் எண்களைச் சிறு எழுத்தில் அச்சிட்டு நூலின் அடிப்பகுதியில் குறிப்புத் (Footnote) தரும் முறையினும் இதுவே சிறந்தது என்பதை இச்செம்பதிப்பு நூலைப் படிப்பார் இனிது உணரலாம்.

Out of stock

Add to Wishlist
Add to Wishlist

Additional information

Weight1 kg