தமிழர்களின் இல்லங்களை அவசியம் அலங்கரிக்க வேண்டிய நூல்களில் இது முக்கியமானது.
வட இந்திய மன்னர்களில் யாருக்கும் இல்லாத பெரும் சிறப்பு ராஜேந்திர சோழனுக்கு உண்டு! இந்தியத் துணைக் கண்டத்தின் எல்லையைத் தாண்டிச் சென்று போரிட்டவர் என வட இந்தியாவில் யாருமில்லை. இப்போதைய ஆப்கானிஸ்தான் வரை அந்தக் காலத்தில் நீண்டிருந்த பெருநிலப் பரப்புக்குள்தான் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொண்டார்கள். ஆனால் ராஜேந்திரன் மாபெரும் கடற்படையை நிறுவி, இப்போதைய தாய்லாந்து, மலேசியா, இந்தோனேஷியா, கம்போடியா என பல நாடுகளை வெற்றி கொண்டவன். அவனது கடற்படைக்கு இந்தியப் பெருங்கடல் ஒரு குளம் போல இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கிட்டத்தட்ட தெற்காசியாவின் பெரும்பாலான நிலப்பரப்பை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்த தமிழ் மன்னன் அவன்.
ராஜேந்திரன் சோழ தேசத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் ஆயிரமாவது ஆண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அதையொட்டியே இந்த நூல் வெளிவருகிறது. ஏராளமான கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்படும் சோழர் வரலாற்று நூல்கள் பலவும் ராஜராஜ சோழனைக் கொண்டாடுகிற அளவுக்கு அவனது மகன் ராஜேந்திரனைக் கொண்டாடுவதில்லை. தந்தையைத் தாண்டி பாய்ச்சல் காட்டிய அந்த வீரமகனின் நேர்த்தியான வரலாறு இந்த நூலில் உங்கள் கண்முன் விரியும். பல விஷயங்களை தமிழர்கள் தங்களின் பெருமிதமான அடையாளமாகக் கருதுகிறார்கள். விழாக்களில் பொங்கல் முதல் உடைகளில் வேட்டி வரை அந்த அடையாளங்கள் ஏராளம். ராஜேந்திர சோழனும் அப்படிப்பட்ட ஓர் அடையாளம்தான். தமிழினத்தின் வீரத்துக்கும் ஆளுமைக்கும் நிர்வாகத் திறனுக்கும் அவன் எப்படி உதாரணமாக இருந்தான் என்பதை மிக சுவாரசியமான நடையில் விவரித்திருக்கிறார் வெ.நீலகண்டன்.