ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் வரலாற்றையும் கடந்த காலத் திருப்பணிகளையும் ஆய்வு நோக்கில் சிறப்பாகத் தந்திருக்கிறார் வரலாற்று ஆய்வாளரான எஸ்.எம். கமால். 1800-ஆம் ஆண்டுகளின் வரலாறு, புராண, இதிகாசங்களிலுள்ள ராமேசுவரம் பற்றிய பதிவுகள் எல்லாமும் தொகுக்கப் பெற்றுள்ளன. கோயில் அமைப்பு பற்றி விளக்கும்போது, யாருடைய காலத்தில் யாரால் கட்டப்பட்டன, திருப்பணிகள் செய்யப்பட்டன என்ற விவரங்களும் தரப்பட்டுள்ளன. மொத்த கோயிலின் கட்டுமானப் பணிகளும் முடிய 170 ஆண்டுகளாயின என்று மேற்கோள் காட்டுகிறார் ஆசிரியர். திருப்பணியில் சேதுபதி மன்னர்கள், சாளுக்கிய மன்னர், இலங்கை மன்னர், திருவிதாங்கூர் மன்னர், நாகூர் கோமுட்டி வணிகர் மட்டுமின்றி நகரத்தார்கள் பங்களிப்பும் விவரிக்கப்படுகிறது.
கோயில் நடைமுறைகளுடன், விழாக்கள் பற்றியும் குறிப்பிடும் ஆசிரியர், சடங்குகளையும் வாகனங்கள் பற்றிய குறிப்புகளையும் தருகிறார். மறவர் சீமையில் தொடர்ந்த அரசியல் குழப்பங்கள் எவ்வாறெல்லாம் கோயிலையும் அதன் நிர்வாகத்தையும் பாதித்தன என்ற விவரிப்புடன், கோயிலைக் கொள்ளையிட்ட சின்ன ராமநாதன் போன்றோரைப் பற்றிய தகவல்களும் தரப் பட்டுள்ளன. கல்வெட்டு, செப்பேட்டுச் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளதுடன், ‘இராமேஸ்வரம் குடிகள்’ என்ற இயலில் தீவின் சமுதாய அமைப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோயிலுக்குப் பின்னாலும் ஒரு பெரும் அரசியலும் வரலாறும் இருக்கிறது என்பதை உறுதி செய்கிறது இந்த நூல்.