உலகில் பண்டையக் கலைகளுள் ஒன்று நெசவுக் கலை. தொன்மையான இந்த நெசவுத் தொழிலில் காலச் சுழற்சி, மனிதப் பயன்பாடு ஆகியவற்றுக்கேற்ப ஏற்பட்ட பல பரிணாமங்களையும், இந்தத் தொழிலின் பயன்படுத்தப்பட்ட தொன்மையான சொற்கள் பல அழிந்தும், சில நிலைபேறு அடைந்தும், பல புதிய சொல்லாகத் திரிந்தும், பிறமொழிச் சொற்களுடன் கலந்தும் உள்ள நிலையையும் இந்த நூல் எடுத்துரைக்கிறது.
குறிப்பாக ‘கோபி’ வட்டத்தை ஆய்வு எல்லையாகக் கொண்டுள்ள இந்த நூலில் கைத்தறி, விசைத்தறி என இரு வகைத் தறிகளின் கலைச்சொற்களுடன், அதற்கான விளக்கத்தையும், புகைப்படங்களையும் தொகுத்து – இணைத்துத் தந்திருப்பது வெகு சிறப்பு. ‘கோபி வட்டமும் நெசவுத் தொழிலும்’ என்ற முதல் பகுதியில் கோபி வட்டத்தின் பெயர்க் காரணம், நெசவின் தொன்மை, சிறப்பு ஆகியவை இலக்கியச் சான்றுகளுடன் தரப்பட்டுள்ளன.
கோபி வட்டத்தின் எல்லைகள், நிலப்பரப்பு, மக்கள் தொகை, போக்குவரத்து வசதிகள், கலாசாரப் பரிமாற்றங்கள், மக்களின் தொழில் சிறப்புகள், தறிகளின் வரலாறு, நெசவாளர் சங்கத்தின் தன்மைகள் போன்றவையும் விளக்கப்பட்டுள்ளன. ‘மொழியியல் நோக்கினில் நெசவுக்கலைச் சொற்கள்’ என்ற பகுதியில் நெசவுக்கலைச் சொற்களுடன், ஒலியனியல், உருவு ஒலியனியல், தொடரனியல், பொருண்மையியல், மொழிக்கலப்பு, மொழித்திரிபு முதலியவற்றுக்கான விளக்கம் உள்ளது.