பல்லவர் வரலாறு
‘பல்லவர்’ என்ற அரசமரபினர் எங்குத் தோன்றினர்? எங்கிருந்து தமிழகத்திற்கு வந்தனர்? அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களா? அல்லது தமிழரல்லாத வேற்றினத்தவரா? என்ற பல வினாக்களுக்கு உறுதியான, முடிவான விடை இதுவரையிலும் எட்டப்பெறவில்லை.
இவர்கள், மேற்கிந்தியப் பகுதிகளிலும் சிந்துவெளியிலும் வாழ்ந்திருந்த பஹ்லவர் அல்லது பார்த்தியர் என்றழைக்கப்பட்ட இனத்தவர் என்றொரு கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. சோழன் வெள்வேற் கிள்ளிக்கும் மணிபல்லவத் தீவிலிருந்த நாகர் குலத்தைச் சேர்ந்த பீலிவளைக்கும் பிறந்த தொண்டைமான் இளந்திரையன் மரபினரே பல்லவர் என்ற கருத்தும் கூறப்பட்டுள்ளது.
இவர்கள், வாகாடகர்களில் ஒரு பிரிவினராக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. சில அறிஞர்கள், ‘பல்லவர்கள்’ தொண்டை மண்டலத்திலேயே தோன்றியவர்கள் என்றும் கருதுகின்றனர். அத்துடன் ‘பலடர்’ என்று அழைக்கப்ட்ட புலிந்தர் என்றதொரு பழங்குடி இனத்திலிருந்து தோற்றம் பெற்றவரே பல்லவர் என்றும் கருத்துரைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகப் பகுதியிலிருந்த சூட்டு குலத்து நாகவம்ச அரசர்கள் மகாராட்டிரப் பகுதியிலிருந்த சகபஹலவர்களோடு உறவு கொண்டனர். அந்த பஹ்லவன் ஒருவன் மூலமே காஞ்சியில் பல்லவ அரசு தோன்றியது எனவும் எண்ணப்படுகிறது.
‘பல்லவர்’ என்ற பெயர், சங்க இலக்கியம் எதிலும் காணப்படவில்லை. ‘பல்லவம்’ என்பது சமஸ்கிருதச் சொல்லாகும். இச்சொல்லிற்கு இலை, கிளை, தளிர் எனப் பலபொருள்கள் கூறப்படினும் இவையனைத்தும் ‘மூல ஒன்றிலிருந்து கிளைத்துத் தோன்றியவை’ என்னும் அடிப்படைப் பொருண்மை உடையவை. ஆகவே, இதனைக் கொண்டு ஆந்திரத்தின் கிருஷ்ணா நதிப் பகுதியிலிருந்து ஆட்சி புரிந்த சாதவாகனஅரசமரபிலிருந்து கிளைத்தவர்களே பல்லவர்கள் என்ற கருத்தையும் அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆந்திரத்தின் கிருஷ்ணா நதிப் பகுதியைச் சார்ந்த (குண்டூர்ப் பகுதி) நிலப்பகுதி, பல்நாடு (Palnadu) என வழங்கியது. அப்பகுதியை. சாதவாகனருக்கு அடக்கி ஆண்டிருந்த குறுநில மன்னர் மரபினரே பின் தெற்கு நோக்கி வந்து காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர்; அவர்களே பல்லவர்கள் என்ற கருத்தும் நம்பத்தகுந்த ஒன்றாகவே அமைகிறது.
இவர்கள் கி.பி.3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.9ஆம் நூற்றாண்டு வரை (ஏறக்குறைய 600 ஆண்டுகள்) காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு, வடக்கே நெல்லூர் முதல் தெற்கில் காவிரிக்கரை வரையிலான, தமிழகத்தின் வடபகுதியை ஆட்சிபுரிந்தனர்.
பல்லவர்களை முற்கால, இடைக்கால, பிற்காலப் பல்லவர்களென மூன்றாகப் பகுப்பர்.
பல்லதேவன், வீர கூர்ச்சரன், ஸ்கந்த சிஷ்யன், குமார விஷ்ணு, புத்தவர்மன், சிவஸ்கந்தவர்மன், முதலாம் நந்திவர்மன் முதலிய அரசர்கள் முற்காலப் பல்லவராவர்.
இடைக்காலப் பல்லவர்கள் இருகிளைகளைச் சார்ந்தோர் ஆவர். சிம்மவிஷ்ணுவின் வழிவந்தோர் முதற்கிளையினர், பீமவர்மனின் வழிவந்தோர் மற்றொரு கிளையினர்.
பல்லவரின் நிலையான அரசும் பரவலும் பண்பாட்டு மேம்பாடும் சிம்மவிஷ்ணுவின் காலத்திலிருந்தே (கி.பி.550-580) தொடங்கின. சிம்மவிஷ்ணுவிற்குப் பின் அவன் மகன் முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி.580-630) பட்டமேற்றான். அவனுக்குப் பின் முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி.630-668) இரண்டாம் மகேந்திரவர்மன் (கி.பி.668-669), முதலாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி. 669-690) இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் இராஜசிம்மன் (கி.பி. 690-728) ஆகியோர் சிறப்புற ஆட்சிபுரிந்தனர். இராஜசிம்மனுக்குப் பின் பட்டத்திற்கு வந்த அவன் மகன் இரண்டாம் பரமேஸ்வரவர்மன் சிறிது காலமே ஆட்சி செய்துள்ளார்.
இரண்டாம் பரமேஸ்வரவர்மனுக்குப் பின் நாட்டில் பெரும் அரசியல் குழப்பம் நிலவியது. பீமவர்மனின் வழிவந்த இரண்டாம் நந்திவர்மன், மூன்றாம் நந்திவர்மன் முதலாகச் சிலர் ஆட்சிபுரிந்துள்ளனர்.
காவிரிக்கரை வரையிலான வடதமிழகத்துள் பல ஒப்பற்ற கலைச்சின்னங்கள் பல்லவர்களால் உருவாக்கப்பட்டன. ஆயினும் மல்லைச் சின்னங்கள் அவற்றுள் தலையாயவை. குடைவரைகள், ஒற்றைக் கற்றளிகள், திறந்தவெளிப் புடைப்புச் சிற்பத்தொகுதிகள், கட்டுமானக் கோயில்கள் என அனைத்து வகைமை சார்ந்த முயற்சிகளும் இங்கு ஒருங்கே இடம் பெற்றுள்ளன.
இவையனைத்தும் பல அரசர்களின் காலங்களில் உருவானவையா? அல்லது ஓர் அரசனே அனைத்துவிதச் சின்னங்களையும் உருவாக்கினாரா? என்ற வினாக்களுக்கு இன்றும் உறுதியான, முடிவான விடை எட்டப் பெறவில்லை.
அளவையியல் என்னும் தர்க்கவியல் அணுகுமுறை, கலைப்பாணி என்பன கொண்டு இச்சின்னங்களை அணுகிய ஆய்வாளர்கள் பலரும் இவையனைத்தும் பல்வேறு அரசர்களால் பல்வேறு காலக் கட்டங்களில் உருவாக்கப்பட்டவை; குறிப்பாக முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன், முதலாம் பரமேஸ்வரவர்மன், இரண்டாம் நரசிம்மன் எனும் இராஜசிம்மன் ஆகிய நான்கு அரசர்களின் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்னும் கருத்தினை முன் வைத்துள்ளனர்.
ஆனால் தி.ந. இராமச்சந்திரன், இரா. நாகசாமி முதலிய அறிஞர்கள் மல்லையிலுள்ள சின்னங்கள் அனைத்தும் இராஜசிம்மன் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்று முடிவு கூறியுள்ளனர். (நூலிலிருந்து)
மாமல்லபுரம் – முனைவர் சா.பாலுசாமி
விலை: 230/-
வெளியீடு:பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்
Buy this book online: https://www.heritager.in/product/mamallapuram-dr-s-balusami/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers