த. சுந்தரராஜ் உலகச் செம்மொழிகளின் முதல் இலக்கணங்களைத் தமிழின் தொல்காப்பியத்தோடு ஓப்பீடு செய்வதில் ஈடுபாடுடையவர். இந்நூலில் அறபு மொழியின் முதல் இலக்கணமாக விளங்கும் அல் – கிதாப்பையும் (கி.பி. 800), தமிழின் முதல் இலக்கணமாக விளங்கும் தொல்காப்பியத்தையும் (கி.மு. 300 – 500) ஒலியியல் நோக்கில் ஒப்பிடுகிறார். காலம்,
இடம், மொழிக்குடும்பம் என அனைத்திலும் இருவேறு துருவங்களாக விளங்கும் இவ்விரு மரபிலக்கணங்களின் தனித்தன்மைக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை, அவற்றிற்குள் உள்ள ஒற்றுமைக்கும் கொடுக்கிறார். அவ்வொற்றுமைக் கூறுகளின் வழி தமிழுக்கும் அறபுக்கும் உள்ள இலக்கண உறவிற்கான அகச்சான்றுகளைத் தேடுகிறார். தமிழுக்கும் அறபுக்கும் இடையில் நாம் கண்டடைந்த வாணிப உறவைத் தொடர்ந்து, இலக்கண உறவிற்கான இந்த மொழியியல் தேடுதல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
மொழியியலார் வரையறுத்துள்ள கிரேக்கம், இலத்தீன், ஹீப்ரூ, அறபு, சீனம், சமஸ்கிருதம், தமிழ் என்னும் ஏழு செவ்வியல் இலக்கண மரபுகளுள், சமஸ்கிருத இலக்கண மரபோடு கூடிய தமிழ் இலக்கண ஒப்பாய்வுக்குப் பின், பிறிதொரு செவ்வியல் இலக்கண மரபோடு ஒப்பிட்டு ஆயும் முதலாவது நூல் என்ற பெருமை ‘தொல்காப்பியமும் அல்-கிதாப்பும்’ என்னும் இந்நூலுக்கு உண்டு.