கிபி 1857, 1858, 1859 களில் இந்தியா முழுவதும் நடைபெற்ற சிப்பாய்களின் எழுச்சி, புரட்சி குறித்தும் இந்திய சுதந்திரப்பெரும் போர் குறித்தும், குறிப்பாக அதில் பங்கேற்ற மௌலவிகள், முஸ்லிம் மன்னர்கள், அரசியல் இளவரசர்கள், படைத்தளபதிகள், சிப்பாய்கள், பொதுமக்கள், புரட்சியில் பங்கேற்ற இன்னபிறர், ஆகியோரைப் பற்றியும் வரலாற்றுக் குறிப்புகள் முழுவதுமாகவும் முறையாகவும் தொகுக்கப்பட்டு தமிழில் இதுகாறும் தரப்படவில்லை. இறையருளால் அந்தப் பணி இப்போது ஓரளவு நிறைவேறும் என்று நம்புகிறேன். அத்துடன் 1857 புரட்சியில் தென்னகம், குறிப்பாக தமிழகம் ஆற்றிய பங்கினையும், அதில் முஸ்லிம் வீரர்களின் முக்கிய பங்களிப்பு பற்றியும் இந்த நூலில் சில வரலாற்று விவரங்களைத் தந்துள்ளேன்.
இந்திய திரு நாட்டின் விடுதலைக்காக 1857இல் நடைபெற்ற புரட்சியில் இந்திய சுதந்திரப் பெரும்போரில் சீறி எழுந்த முஸ்லிம்களின் தியாக வரலாற்றையும் வரலாற்று
ஆசிரியர்களால் குறிப்பிடப்படாமல் விடுபட்டுப்போன தென்னகத்தின் பங்களிப்பு பற்றியும், அதில் பங்கேற்ற முஸ்லிம்கள் பற்றியும் இயன்றவரை இந்நூலில் தொகுத்து இருக்கிறேன். குறிப்பாக சென்னை ராஜதானியில் புரட்சியின் பங்கே இல்லை என்ற வரலாற்றுப்
பிழையிணைத்திருத்திட இந்த நூலில் முயற்சித்துள்ளேன்.
இன்னும் தொடர்ந்து அந்தப் பணியினை செய்து வருகிறேன். சுதந்திரமும் சுயமரியாதையும் இருகண்கள் என கருதி வாழும் இந்திய முஸ்லிம்கள் தங்கள் வீட்டை மறந்து, நாட்டை நினைத்துத் தங்களை மெழுகுவர்த்திகள் ஆக்கிக்கொண்டு இந்திய நாட்டிற்கு சுதந்திரம் மீட்டுத் தந்தனர். நம் கண்ணறையின் ஒளி படாமல் கல்லறையில் துயிலும் அந்த விடுதலை வீரர்கள் கண்ணியத்திற்குரியவர்கள். அவர்கள் நம் கருத்தில் நிறைந்திருந்தது, கால காலங்களுக்கும் முஸ்லிம்கள் இந்த மண்ணில் யாருக்கும் தாழாமல், தன்மானத்தோடு சரிநிகர் சமமாக வாழவும், ஜனநாயகத்தால் ஆளவும், நாளும் நாளும் உத்வேகம் தந்து கொண்டே இருப்பார்கள். அத்தகைய வீரத் தியாகிகளின் வரலாற்றினை நிணைத்துப் போற்றுதல் மிக மிக அவசியம்.
இவ்வாறு இந்நூலின் ஆசிரியர் செ. திவான் அவர்கள் தமது முன்னுரையில் கூறியிருக்கிறார்.