இறையனார் களவியல் / Ir̲aiyan̲ār kaḷaviyal

350

இறையனார் களவியலுக்கு இது ஒரு மூலபாடப் பதிப்பு. இந்நூலில் வரும் மூலம் பாடத்தேர்விற்குப் பிறகு செப்பம் செய்ததன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. நூலில் நூற்பாக்களை விளங்கிக்கொள்வதற்குரிய உட்தலைப்புகள் எதுவும் தரப்படவில்லை. நூற்பாக்களில் நிறுத்தக்குறி எதுவும் பயன்படுத்தப்படவில்லை. நூற்பாக்கள் தமிழ் எண்களில் தரப்பட்டுள்ளன. சொற்சீரடி தனிச்சீராகக் காட்டப்பட்டுள்ளது. அடிகள் தமிழ் யாப்பிலக்கண அமைதிக்கேற்பப் பிரிக்கப்பட்டுள்ளன. நூற்பாக்கள் அனைத்தும் சந்தி, புணர்ச்சி, யாப்பு அமைதிக்கேற்பச் சீர்நிலையிலும் அடிநிலையிலும் அமைக்கப்பட்டுள்ளன.

இப்பகுதியில் நூற்பா முதலில் தரப்பட்டுள்ளது. நூற்பாக்களில் காணப்படும் பாடவேறுபாடுகளை அறிவதற்கு அனைத்து முதற் பதிப்புகளும் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இப்பதிப்புகளின் விளக்கம் நூலின் ஆறாம் பகுதியில் தரப்பட்டுள்ளது. பாடத்தேர்வுப் பகுதியில் 1883, 1899, 1916 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்த பதிப்புகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டன. இம்மூன்று மட்டுமே தொன்மைப் பதிப்புகளாகவும் சுவடிகளை ஒப்பிட்டு உருவாக்கம் செய்யப்பட்டவையாகவும் உள்ளன என்பதே இத்தேர்விற்கு அடிப்படையாகும். இம்மூன்றினை அடிப்படையாகக் கொண்டே பிற பதிப்புகள் உருவாக்கப்பட்டன என்பது ‘பதிப்பு விளக்கம்’ என்ற பகுதியில் தரப்பட்ட ஆய்வால் புலப்படும். பதிப்புகளில் காணப்பட்ட பாடவேறுபாட்டுக் குறிப்புகளும் உரைமேற்கோள் பகுதியில் தரப்பட்டுள்ளன.

இறையனார் களவியல் நூற்பாக்களை எடுத்தாளும் தொல்காப்பிய உரை தொடங்கிப் பல்வேறு உரை நூல்களிலிருந்தும் பாடவேறுபாடுகள் தொகுக்கப்பட்டுள்ளன. பரிபாடல், திருக்கோவையார், யாப்பருங்கலம், நம்பியகப்பொருள், தஞ்சைவாணன் கோவை, களவியற்காரிகை, இலக்கண விளக்கம் ஆகியவற்றின் பழைய உரைகள் இதற்குப் பயன்படுத்தப்பட்டன.

பதினைந்து ஓலைச்சுவடிகளும் மூன்று தாட்சுவடிகளுமாக மொத்தம் பதினெட்டுச் சுவடிகள் பாடவேறுபாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டன. சுவடிகளுக்கான கால வரையறையை உறுதிசெய்து அவ்வரிசைப்படி இப் பாடத்தேர்வுப் பகுதி தரப்பட்டுள்ளது. மேலும் இவற்றை ஓலைச்சுவடிகள், தாட்சுவடிகள் என இரண்டாகப் பிரித்து ஓலைச்சுவடிகள் முதற்கண் வைக்கப்பட்டன. மேலும் உரைகளுடன் கூடிய பத்து இறையனார் களவியல் சுவடிகளில் உரைமேற்கோள்களாகத் தரப்பட்ட களவியல் நூற்பாக்களும் பாடவேறுபாட்டிற்காக எடுக்கப்பட்டன.

இப்பதினெட்டுச் சுவடிகளும் உலக அளவில் திரட்டப்பட்டன. பிரான்ஸ் நாட்டின் பிபிலோதேகு நூலகத் தொகுப்பிலுள்ள இறையனார் களவியல் சுவடி அந்நிறுவனத்தோடு தொடர்புகொண்டு வரவழைக்கப்பட்டது. எஞ்சிய சுவடிகள் அனைத்தும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பணியாளர்களால் மின்படி (Digital copy) எடுக்கப்பட்டன. பின்னர் வரிசை மாறிக்கிடந்த ஓலைகளில் நூற்பாக்களைக் கண்டறிந்து, அவற்றை வரிசைப்படுத்திச் சுவடியியல் துறையினரால் எண்ணிடப்பட்டன. நூற்பாக்களை விரைவாகக் கண்டறியும் வகையில் நிறுவனக் கணினி நிரலாளரால் தேடுபொறியும் (Searching tool) அமைக்கப்பட்டது. சுவடிகளில் பல செல்லரிக்கப்பட்டவை. இராமபாணப் பூச்சிகளால் துளையிடப்பட்டவை. அவற்றிலிருந்து நூற்பாக்களை அடையாளங் கண்டு பிரித்தறிவது அயர்ச்சிதரும் பெரும் பணியாக அமைந்தது. இவ்வாறெல்லாம் பல கடும் பணிகளைச் சுவடியியல் துறையினர் செய்தது பதிப்பாசிரியருக்கும் வல்லுநர்களுக்கும் நூல் வரைவைத் தர ஏதுவானது. குறிப்பாக, மதுரைத் தமிழ்ச்சங்கத்து ஓலைச்சுவடி மிகவும் சிதைவுண்டிருந்தது. செல்லரித்துப் போன அச்சுவடியினைப் பதிப்பாசிரியர் படித்தறிந்து களவியல் நூற்பாக்களை இனங்காணச் சுவடியியல் துறையினரின் உழைப்பே உதவியது.

அறிவியல் அடிப்படையில் அனைத்துப் பாடங்களையும் ஆய்வு செய்யும் நோக்கத்துடனும் சுவடிகளில் காணும் பதிவுகள் அனைத்தையும் ஆய்வாளர்கள் அறியும் நோக்கத்துடனும் பாடத்தேர்வுப் பட்டியல் ஒருங்கிணைக்கப்பட்டது. Pages: 300

Out of stock

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.