தீரன் சின்னமலை குறித்து, நூலாசிரியர் தான் நடத்திவந்த ‘தென்னகம்’ ஏட்டில் 20 பாகங்களாகத் தொடராக எழுதி வந்ததன் தொகுப்பே இந்நூல். ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே மேலப்பாளையத்தில் 1756-இல் பிறந்த தீர்த்தகிரி கவுண்டர் என்ற தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடத்திய போராட்டங்கள், வெற்றி பெற்ற மூன்று போர்கள், சூழ்ச்சி வலையில் அவரை நயவஞ்சகமாக வீழ்த்தி சிறைபிடிக்கப்பட்டது.. என்று படிக்கத் தொடங்கினால், இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து வாசிக்கத்தக்க வகையில் விறுவிறுப்பாக நூலைக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். ஆங்கிலேயர்களால் கண்துடைப்பு விசாரணை நடத்தப்பட்டு 1805-ஆம் ஆண்டு ஜூலை 31-இல் அவர் தூக்கிலிடப்பட்டார். 210 ஆண்டுகளைக் கடந்தாலும், அவருடைய நினைவிடங்கள், சிலைகளுக்கு இன்றும் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்துவதையும் சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர். அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல், நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்று செயல்பட்ட சின்னமலை மக்களின் வரிப்பணம் முழுமையாக மக்களுக்கே செலவிடப்பட வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் வசூலித்த தண்டல் பணத்தைப் பறித்து ஏழைகளுக்கு வழங்கிய அவரது தீரம் மெய்சிலிர்க்க வைக்கிறது. தன் வாழ்நாளில் பெரும்பகுதியை போர்களில் செலவிட்டிருந்தாலும், சின்னமலை கோயில்களுக்குச் செய்த திருப்பணிகள் அளப்பரியவை. சுதந்திரப் போராட்டத்தில், தமிழர்களின் பங்கு போற்றுதலுக்குரியது என்பதை உணர்த்தும் இந்த நூல் தமிழர்கள் வாசிக்கத் தவறவிடக் கூடாதது.