பன்முகத் திறமை கொண்ட நூலாசிரியர், கள ஆய்வு மேற்கொண்டு, வேலூர் வட்டம், ஜவ்வாது மலையில் அடங்கிய மொழலை கிராமம் முதல், கோவிலூர் வரை, 32 கிராமங்களில் கள ஆய்வு செய்து, அங்கு நிலவும் வாழ்வு முறை, தொழில், பண்பாடு, திருமணம், உணவு முறை, பேச்சு மொழி போன்ற எல்லாத் தகவல்களையும் திரட்டி வழங்கியுள்ளார்.
அறிமுகம் துவங்கி, கள ஆய்வுக்கு உதவியவர்கள் வரை, 13 தலைப்புகளில் புகைப்படத்துடன் விளக்கியுள்ளார். தம் கள ஆய்வில் மலைவாழ் மக்களோடு நேரில் உரையாடி, அவர்களுடைய இன்ப, துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட அனுபவத்தை இந்த நூலில் பதிவு செய்துள்ளார்.
மலைவாழ் மக்கள் இறைவனை வழிபட்டு, அங்கு கிடைக்கும் இயற்கைப் பொருட்களை வைத்தே பிரசாதம் தயார் செய்கின்றனர். முக்கியமாக பழங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மலைப்பகுதியில் பாம்புக் கடிக்கு எல்லாரும் வைத்தியம் பார்ப்பது இல்லை. பச்சிலை வைத்தியம் தெரிந்த வேடி மகன் என்பவர் மருத்துவராக உள்ளார். இந்த மலை கிராமங்களுக்கு தலைநகராய் விளங்குவது புதூர் நாடு. இங்குள்ள கோவில்களில் மணியடித்து வழிபாடு செய்தல் வழக்கமாக உள்ளது. 32 கிராமங்களுள் மிக உயர்ந்த மலை தான் சேம்பறை மலை.
இம்மலையின் மேல் அனுமன் கோவில் உள்ளது. இங்கு, தேன் எடுத்தல் தொழில் நடைபெறுகிறது. பயிர்களை அறுவடை செய்யும் முன், மூன்று கற்களை நட்டு வைத்து, அதன் முன் ஒரு கல்லை வைத்து வழிபடுகின்றனர். அந்தக் கல்லைக் காவல் தெய்வம் என்கின்றனர் (பக்.10). இங்கு வாழும் கிராம மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, இன்னொரு கிராமத்திற்குச் சென்று பலியிட்டு அன்னதானம் இடுவது, மலைவாழ் மக்களுக்குரிய சிறப்பு அம்சமாகும்
கள ஆய்வில் நேரில் காணும்போது தான், அவர்களுக்கான வாழ்வாதாரத் தேவை என்ன என்பதை அறிய முடியும் என்று, சமுதாய வளர்ச்சிக் கண்ணோடு ஆசிரியர் தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார். மலையாளி என்பதற்கு ஆசிரியர் தரும் விளக்கம் புதுமையாக உள்ளது. மலைகளில் வாழ்ந்து வருவதால் மலையாளிகள் என்று அழைக்கப்பட்டனர்.
மலையை ஆள்பவர்கள், 32 கிராமங்களில் வாழ்பவர்களுள், 100 சதவீதம் பேரும் மலையாளிகள். வெளிநபர் யாரையும் அனுமதிப்பதில்லை. போதுமான போக்குவரத்து வசதியின்றி காணப்படுகிறது. ஜவ்வாது மலையாளிகளின் பூர்வீகம் பற்றி, பல வேறுபட்ட கதைகள் வழக்கில் உள்ளன. இவர்கள் முழுமையான முன்னேற்றம் அடையவில்லை. இயற்கையோடு வாழ்ந்து, ஏதேனும் ஒரு விழாவைக் கொண்டாடி ஒன்றுபட்டு மகிழ்வுடன் வாழ்கின்றனர்.
வழிபாடு என்பது சிறு தெய்வ வழிபாடு, இறந்தவர் வழிபாடு, பசு வழிபாடு என்னும் வழிபாடுகளை நடத்துகின்றனர். மாட்டிறைச்சி உண்பதில்லை; காட்டுப்பன்றியின் இறைச்சியை உண்கின்றனர்.
ஒரு சிலரிடம் மது அருந்தும் பழக்கம் உள்ளது. சமூகக் கட்டுப்பாடுகளில் ஊர் தலைவர் பொறுப்பாக உள்ளார். தேன் எடுத்தல், விவசாயம் என்று துவங்கி, தினை, சாமை, நெல், பயிர் வகைகள், குச்சிக் கிழங்கு, வாழை, பலா என்பது வரை இவர்களது தொழிலாக உள்ளன. விழாக்களை ஆடல், பாடல், மேளதாளம் என மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்; சில சடங்குகளையும் கொண்டாடுகின்றனர்.
இயற்கை மருத்துவ முறை மற்றும் ஜோதிடம் கேட்டல் போன்ற பழக்கங்களும் உள்ளன. மலைவாழ் மக்களின் பேச்சு, தமிழ் மொழி என்றாலும், பேச்சு வழக்கில் பல மாற்றங்கள் உள்ளன. வயதான பழங்குடி மலையாள இன மக்கள் தமிழ் பேசினாலும், பிறரால் எளிதில் புரிந்து கொள்ள இயலாது.
மலைவாழ் மக்கள் வறுமையில் வாடுபவர்களாகவும், விவசாயத்தைத் தவிர, வேறு ஒன்றும் அறியாதவர்களாகவும் உள்ளனர். நவீன விஞ்ஞான வசதிகள் எதுவும் அவர்களைச் சென்று அடைந்ததாகத் தெரியவில்லை.
இவர்களுக்குக் கல்வி யும், வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும் என்று நூலை முடித்துள்ளார். ஜவ்வாது மலைப் பகுதிக்கு நேரில் அழைத்துச் சென்று காட்டியது போன்ற உணர்வு, இந்த நூலைப் படிக்கும்போது ஏற்படுகிறது.