இன்றைய பிராமணமயப்படுத்தப்பட்ட கர்நாடக இசையுலகம் தேவதாசிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட இசைக்கொடையை மறந்துவிட்டு அவர்களை ஒதுக்கிவைத்துள்ளது; இதை மாற்றவேண்டும் என்கிறார் டி.எம். கிருஷ்ணா. தேவதாசி மரபைச் சேர்ந்தவர்களின் இசையைத் தொடர்ந்து உதாசீனம் செய்துவந்தால் கர்நாடக இசையுலகம் செழிக்காது என்றும் அவர் வாதிடுகிறார். ‘பிராமணர்களால் பிராமணர்களுக்காக’ என்றில்லாமல் அனைவருக்காகவும் கர்நாடக இசையின் கதவுகள் திறந்துவிடப்படவேண்டும் என்பதும் டி.எம். கிருஷ்ணாவின் கோரிக்கையாக இருக்கிறது. அப்படியே ஆணாதிக்கத்தையும் மட்டுப்படுத்த அவர் விரும்புகிறார். இந்த நியாயமான சீர்திருத்தங்களைப் பரிசீலிக்கக்கூட கர்நாடக இசையுலகம் தயாராக இல்லை என்னும்போது நாகரத்தினம்மாவின் ஆளுமை மேலும் உயர்ந்து நிற்கிறது
நான் ஒரு தேவர் அடியாள்’ என்று பொதுமேடைகளில் தன்னை அறிமுகம் செய்துகொள்வது பெங்களூர் நாகரத்தினம்மாவின் (1878-1952) வழக்கம். கலைகளைப் போற்றிப் பாதுகாக்கும் மதிப்புக்குரிய ஓரிடத்தைத் தேவதாசிகள் வகித்தபோது அவர் இதனைச் செய்யவில்லை; பாலியல் தொழிலாளர்களுக்கு இணையாக அவர்கள் கீழிறக்கப்பட்டு புழுதியில் வீசப்பட்டபோது நாகரத்தினம்மா தன்னுடைய தேவதாசி அடையாளத்தைப் பெருமிதத்துடன் வெளிப்படுத்திக்கொண்டார். நாகரத்தினம்மாவின் ஆளுமை எப்படிப்பட்டது என்பதற்கு இது ஓர் உதாரணம் மட்டுமே. வி.ஸ்ரீராமின் The Devadasi and the Saint நூலை வாசிக்கும்போது கொந்தளிப்பான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து, சாதித்த ஒரு பெண்ணின் உத்வேகமூட்டும் வாழ்க்கைச் சித்திரம் நமக்குக் கிடைக்கிறது.