சங்க காலம் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் நடனம், இசை, ஓவியம், சிற்பம் ஆகிய கலை வடிவங்கள் பரிணாம வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றன. தமிழகக் கலைகள் கோயில் சார்ந்தே இயங்கி வந்திருக்கின்றன. கோயில் என்ற நிறுவனம் உருவாகி வளர்ந்தெழுந்தபோது, கடவுளர்கள் ஆர்ப்பாட்டமான வழிபாட்டுக்குரியவர்களாக மாற்றப்பட்டார்கள் இசையும் நடனமும் மங்கலகரமானவையாகக் கருதப்பட்டன.
கடவுள்களைப் புகழ்ந்தும், அவர்களின் மகிமைகளை வெளிப்படுத்தவும் பதிகங்களும் பாசுரங்களும் பாடப்பட்டன. வழிபாட்டின் ஓர் அங்கமாகக் கோயில்களுக்குப் பெண்கள் நேர்ந்துவிடப்பட்டார்கள். கோயில்களில் இறை சேவைக்காக நேர்ந்துவிடப்பட்ட தேவரடியார் பெண்கள் கலைகளைக் கற்றுத் தேர்ந்து வளர்த்து வந்திருக்கிறார்கள். நீண்ட நெடிய கலை மரபில் தேவரடியார்களின் பங்களிப்பைப் பல தளங்களில் இந்நூல் விரிவாக ஆராய்கிறது.