நீதி இலக்கியங்கள் – களப்பிரர் காலத்தின் அளப்பரிய படைப்புகள்

100

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

களப்பிரர் காலத்தின் அரசியலும், இலக்கியமும்

“இருண்ட காலத்தில் பாடல் ஒலிக்குமா? ஒலிக்கும், இருண்ட காலத்தைப் பற்றி” என்பது ஜெர்மானிய இடதுசாரிக் கவிஞரும், நாடகாசிரியருமான பெர்ட்டோல்ட் பிரெக்டின் புகழ்பெற்ற கவிதை வரிகளாகும். வரலாற்றில் இருண்ட காலங்கள் என்கிற சொற்றொடர் மிகப் பிரபலமானது. காலம் எப்படி இருளும். பூமிப்பந்து கூட முழுசாய் யாருக்கும் இருள்வதில்லை. ஒரு பக்கம் இருளிருக்கும், மறுபக்கம் ஒளியிருக்கும். அவை சுழற்சியின் கதியில் மாறிமாறி வரும். தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககாலம் எனும் போது பொற்காலம் என்கிற படிமமும், களப்பிரர் காலம் என்கிறபோது இருண்ட காலம் என்கிற படிமமும் இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வரலாற்றுக் கல்விப் புலத்தில் அறிஞர்கள் என்று சொல்லப்படுவோர் உலவ விட்டிருக்கிறார்கள்.

ஆனால் அறிஞர்கள் எனப்படுவோர் அறிஞர்களாகத்தான் இருக்க வேண்டும் என அவசியமா என்ன? சிந்து சமவெளியின் காளையைக் குதிரையாக்க இந்துத்துவ அறிஞர்கள் முயல்கிறார்கள். கீழடியின் தொன்மை ஆய்வை மண்போட்டு மூடி வரலாற்றை இருண்ட காலத்தில் அமிழ்த்த விரும்புகிறவர்களும் அத்தகைய அறிவு! மரபின் தொடர்ச்சியாளர்களாகவே உள்ளனர். ஓர் அரசன் காலத்துக் கல்வெட்டுக்கள், அவன் வெல்லப்பட்டு, அடுத்த அரசன் வரும்போது, அவை சிதைக்கப்பட்டு, படிக்கற்களாக, அனைவரும் மதிக்கும்படி இருந்தவை இப்போது மிதிக்கும் படி ஆகும்வகையிலான வரலாறுகள் நம் கோவில்களெங்கும் பொதிந்து கிடக்கின்றன. வேதப்பார்ப்பனர்களின் அபரிமிதமாகப் பெருகிய யாகமுறைகளும், அவற்றில் பலியாக்கப்பட்டகால் நடைகளாகிய விவசாய உற்பத்திக் கருவிகளின் அழிவையும் எதிர்த்து, வரலாற்றில் பௌத்த, சமணப் பெரு நெறிகள் எழுந்தன. அவை இந்தியப் பரப்பெங்கும் பரவின.

அவை அன்றிருந்த ஆளும் சத்திரியர்களின் அணுக்கத்தைப் பெற்று கடல் கடந்தும் வளர்ந்தன. அத்தகைய ஓர் அலை தென்னகத்தில், தென்தமிழகத்தில் பரவியதே களப்பிரர்கால ஆட்சிஎனும் வரலாறு. பாண்டிய, சேர, சோழராகிய தமிழ்நிலத்து அரசர்கள் வேத வழிப்பட்ட அரசாளுமைகளாக வீற்றிருந்த காலத்தில் களப்பிரர்கள் அவர்களை வென்று, பௌத்த, சமண வழிப்பட்ட நெறிகளைத் தழைத்தோங்கச் செய்தனர். அதனால் பின்னால் அவர்களின் சுவடுகளே வரலாற்றில் அறியப்படாவண்ணம், வரலாற்றைத் திருத்தினார்கள். அது இருண்ட காலம் என்று கதை பரப்பினார்கள். அவர்களது வரலாற்றின் சுவடுகளைச் சிதைத்தார்கள்.

6 ஆம் நூற்றாண்டு முதல் தழைத்தோங்கத் தொடங்கிய பக்தி இயக்க காலத்தில், சைவ, வைணவ சமயக்குரவர்கள், பௌத்த, சமண மடாலயங்களை அழித்துத் தம்வயப்படுத்தினர். அனல் வாதம், புனல் வாதம் என்று கதைகட்டி இலக்கியங்களை அழித்தொழித்தனர். சமணர்களைக் கழுவிலேற்றிக் கொன்றனர். கோயில்களைத் தமதாக்கினர். கடவுளர்களை, விழாக்களை, பழக்க வழக்கங்களைத் தமதாக்கினர். ஆனால் அவற்றுக்கான மேலுறைகளில் தங்கள் சாயம்பூசினர். நூலின் அணிந்துரையில் பேரா.அருணன் சரியாகச் சுட்டுவதைப் போல வரலாற்றாளர் நீலகண்ட “சாஸ்திரி” அந்தக் காலத்தை இருண்டகாலம் என்று வரையறுத்து உலாவவிட்டது தற்செயலானதல்ல.

மேலும் அருணன் குறிப்பிடுவதைப் போல, “அது ‘இருண்ட காலமாக’ ஒரு சாராருக்கு இருந்தது. சங்ககாலத்துப் பாண்டியர் ஆட்சியில் பிராமணியவாதிகளுக்குத் தானமாக நிலங்கள் கொடுக்கப்பட்டன. அடுத்து வந்தகளப்பிர மன்னர்கள் அவற்றை ரத்து செய்துவிட்டார்கள். இதனால் ஆத்திரம் கொண்ட பிராமணியவாதிகள் பிற்காலத்தில் அவர்களைக் ‘கலியரசர்கள்’ என்று செப்பேடுகளில் பதிந்துவைத்தார்கள். அதை அப்படியே எதிரொலிக்கிறார் சாஸ்திரியார்.”ஆனால் அந்த இருண்ட காலத்தில்தான் சங்கம் மருவிய காலத்து இலக்கியங்கள் என்று சொல்லப்படுகின்ற பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் நமக்குக் கிடைக்கின்றன. ப.முருகன் எழுதிய இந்நூலின் தலைப்பே “நீதி இலக்கியங்கள்-களப்பிரர் காலத்தின் அளப்பரிய படைப்புகள்” என்று இந்த வரலாற்று அரசியலின் முக்கியத்துவத்தை வெகு அழகாக எடுத்துரைக்கின்றது.

களப்பிரர் காலத்தில்தான் கி.பி.470-ல் வச்சிரநந்தி எனும் சமண முனிவர் மதுரையில் தமிழ்ச் சங்கத்தைத் துவங்கினார் என்பதையும், தமிழ் வளர்க்கும் பணியில் ஈடுபட்டார் என்பதையும் அவர்களால் மறைக்க முடியவில்லை. களப்பிரர்கள் பாலி மொழியை ஆதரித்தனர். சமண சமயத்தைப் பேணினர். இதனால் தமிழ்மொழி ஆதரிக்கப்படாமல் வளம் குன்றி சிறந்த தமிழ் நூல்கள் தோன்றும் சூழல் அமையவில்லை என்று கூறுகின்றனர். ஆனால் இந்தக் காலத்தில்தான் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐம்பெரும்காப்பியங்களும், உதயண குமார காவியம், நாக குமார காவியம், யசோதர குமார காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐஞ்சிறு காப்பியங்களும், திருக்குறள் உள்ளிட்ட நீதி நூல்களும் தோன்றின.” என்று நூலின் முதல் அத்தியாயத்திலேயே முருகன் முன்வைக்கும் வாதங்கள் இந்தக் காலத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

*சங்க இலக்கியத்துக்குச் சங்க இலக்கியம் என்கிற பெயர் கிடைக்கவே காரணமானவர்கள் களப்பிரர்கள்தான்* என்று *மு.வ.வின் தமிழ் இலக்கிய வரலாற்றி* லிருந்து முருகன் எடுத்து வைக்கும் கருத்துகள் மிகுந்த பொருட்செறிவுள்ளவை. பதிணென் கீழ்க்கணக்கு நூல் வரிசையில் வைக்கப்பட்டுள்ள “ஆசாரக்கோவை” முழுக்க முழுக்கசமண, பௌத்தக் கருத்தியலில் இருந்து மாறித்தனித்து, வைதீக நெறி சார்ந்து வெளிப்படுத்தும் கருத்துநிலையும் ஆய்தற்குரியன. அதுபோலவே வ.உ.சி.யால் பதிப்பிக்கப்பட்ட “இன்னிலை” யைப் பதிணென் கீழ்க்கணக்கு வரிசையில் வைப்பது குறித்த விவாதங்களும் சுவையானவை. இத்தகைய வலுவான வரலாற்றுப் பின்புலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய, சுருக்கமான அறிமுகம், அவற்றின் கட்டமைப்பு, பா வகைகள், கருத்தியல் நிலைகள், வரலாற்றுத் தரவுகள், வாழ்க்கைச் சுவை நலன்கள் என்று தமக்கேயுரிய தேர்ந்ததெள்ளிய நடையில் முருகனின் இந்நூல் இலங்குகிறது. மேலும் திருக்குறள் தவிர்த்து கல்விப் புலத்தாராலேயே கைவிடப்பட்ட இலக்கியங்கள் போலான பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய ப.முருகனின் இந்நூலானது தமிழ் இலக்கிய மாணவர்களுக்கும் உதவக்கூடிய அரு நூல்,

நீதி இலக்கியங்கள் – களப்பிரர் காலத்தின் அளப்பரிய படைப்புகள்

பக்:140 விலை: ரூ.100/-

Buy:

Weight0.25 kg

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.