ஆய்வு முறை
தமிழகப் பாறை ஓவியங்களின் வரைவுகள், குறியீடுகளின் வெளிப்பாடு, அமைப்பு அவற்றின் சிறப்பியல்புகள் என்பன குறித்துக் கண்டோம். தமிழகத்தில் இடம்பெறுகின்ற ஓவியங் களை ஆய்வு செய்யுமிடத்து மூன்று முக்கியப் பகுதிகளைக் காணுதல் வேண்டும். பாறை ஓவியங்களின் பொருள் காணுதல் என்னும் நிலைக்கு இவை மூன்றும் முக்கிய நிலைக் களங்களாக அமைகின்றன. அவை அ. ஓவியங்கள் (எழுத்து) ஆ. வெளிப் பாட்டு முறை, இ. வடிவமைப்பு முறை/வரைவு முறை என்பனவாகும்.
அ. ஓவியங்கள் (எழுத்து)
பாறை ஓவியங்களுக்குரிய பொருள் காணும்போது ஓவியங்களும், இடங்களும், சூழலும் நம்பிக்கைகளும் என்பவை பற்றிய செய்திகளில், புலப்பாட்டுத் தெளிவு பெறுதல் வேண்டும்.
ஐரோப்பிய நாடுகளில் காணப்படுகின்ற தொல் பழங்காலத்துக் குகை ஓவியங்களில் அதிகமாக விலங்கினங்களே இடம்பெறுகின்றன. ஆனால் இந்தியாவில் சற்று மாறுபட்டுக் காணப் படுகிறது. சில பகுதிகளில் விலங்கின வடிவங்கள் அதிக அளவிலும், வேறு சில இடங்களில் மனித வடிவங்கள் அதிக அளவிலும் இடம்பெறுகின்றன.
ஆஸ்திரேலியாவிலும் விலங்கினங்களைவிட மனித வடிவங்களே அதிகம் காணப்படுகின்றன. எனவே, இவ்விரண்டு இடங்களுக்குரிய சூழ்நிலைகள், அங்கு வாழ்ந்த இனங்கள், மிருகங்கள் பற்றிய அறிவு மிகவும் தேவைப்படுகின்றது. இங்கு என்ன என்ன ஓவியங்கள் இடம்பெறுகின்றன என்பது குறித்தே ஆய்வுஅணுகுமுறை அமைகின்றது.