தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில், தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆத்தூருக்கு வடமேற்கே சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில், வாழைத் தோட்டங்களால் சூழப்பட்ட வயல்களுக்கு மத்தியில், கொற்கை என்னும் குக்கிராமம் அமைந்து அணி செய்கிறது. கொற்கைக் கிராமத்தின் வடபுறத்தில் கொற்கையையொட்டிக் குளமொன்று அமைந்துள்ளது. இக்குளத்தைக் கொற்கைப் பகுதிமக்கள் பழைய துறைமுகம் என்று கூறுகின்றனர்.
குளத்தின் நடுவே கொற்கை நங்கை கோயில் அமைந்து விளங்குகிறது. கொற்கைக் குளத்தின் வடகரையில், சுமார் ஐம்பது வீடுகளைக் கொண்ட ‘அக்கசாலை’ என்ற கொற்கையைச் சேர்ந்த சின்னஞ்சிறிய கிராமம் இருக்கிறது. இதனை அப்பகுதி மக்கள், அக்காசாலை என அழைக்கின்றனர்.. குளக்கரையின் தென்புறம் வாழைத் தோட்டத்திற்கு மத்தியில் அக்கசாலைப் பிள்ளையார் கோயில் அமைந்து விளங்குகிறது. அக்கசாலைக்கு வடபுறம். கூப்பிடுதூரத்தில் (சுமார் கால் கிலோமீட்டர் தூரத்தில்) மாறமங்கலம் என்னும் கிராமம் அமைந்து விளங்குகிறது. அக்கசாலைக்கும் மாறமங்கலத்திற்கும் இடையே, கிழக்கு மேற்காக கடலை நோக்கிச் சிற்றாற்று வாய்க்கால் செல்கிறது. இவ்வாய்க்காலில், கன்னிமார் குட்டம் என்ற பழமையான நீர்நிலையும் அமைந்து விளங்குகிறது.
அக்கசாலைக்குக் கீழ்புறம் கொடுங்கண்ணி என்ற சிறிய கிராமம் உள்ளது. மாறமங்கலத்தின் வடபுறம், சுமார் இரு கிலோமீட்டர் தொலைவில் இடையர்காடு என்னும் கிராமம் இருக்கிறது. இக்கிராமம் மணிமேகலைக் காப்பியத்தில் ‘கோவலர் இருக்கை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இடையர் காட்டில் இப்போது வாழும் மக்களில் பெரும்பாலோர் கிறித்தவர்களேயாவர். கிறிஸ்தவ ஆலயமும் மேல்நிலைப் பள்ளியும் உள்ளன. இடையர்காட்டுக்குக் கிழக்கே. மஞ்சள் நீர்க்காயல் என்ற கிராமமும், மஞ்சள் நீர்க்காயலுக்குக் கிழக்குப்புறத்தில், தூத்துக்குடி – திருச்செந்தூர் நெடுஞ்சாலை யில் பழைய காயல் என்ற பண்டையத் துறைமுக நகரமும் அமைந்து விளங்குகின்றன. இதேபோல, அக்கசாலைக்கும் மாறமங்கலத்திற்கும் கிழக்கே அகரம் என்ற பழமையான ஊரும், அகரத்திற்குக் கிழக்கே, தூத்துக்குடி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் முக்காணி என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஊரும் அமைந்து விளங்குகின்றன.
கொற்கைக்குத் தென்புறம், கூப்பிடு தூரத்தில், சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில், கொற்கை மணலூர் என்ற சிறிய கிராமம் இருக்கிறது. கொற்கை மணலூர் என்ற பெயர், பண்டையச் சங்ககாலக் கொற்கைத்துறைமுகத்தை நினைவுபடுத்துகிறது. கொற்கை மணலூருக்குத் தெற்கே. சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உமரிக்காடு என்ற ஊர் இருக்கிறது. உமரிக்காட்டில், உமரிக்கோட்டைவாழ் அய்யனார் கோயில் இருக்கிறது. உமரிக்காட்டுக்குத் தெற்கே வாழவல்லான் என்ற ஊர் இருக்கிறது. திவ்யப்பிரபந்தத்தில் பயின்றுவரும் வல்லவாழ் என்ற வைணவத்தலம் இதுவாக இருக்கலாமோ?
கொற்கைக்குத் தென்மேற்கே, சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் செந்நெல்மாநகர் என்ற ஊர் இருக்கிறது. இவ்வூர், திருச்செந்தூர்க் கல்வெட்டில் சாலியம் எனப்பயின்று வந்துள்ளது. சாலி என்பது ஒரு நெல் வகையைக் குறிக்கும்.தளவாய்புறச் செப்பேட்டில், ‘செஞ்சாலி விளைகழனி என்ற தொடர் பயின்று வந்துள்ளது. செந்நெல்மாநகருக்கு மேற்கே, ஆறுமுகமங்கலம் என்ற ஊரும் அங்கே ஆயிரத்தெண் பிள்ளையார் என்ற விநாயகர் கோயிலும் அமைந்து விளங்குகிறது. கல்வெட்டில், ஆறுமுக மங்கலம் அருகமங்கலம் எனவும், மாறமங்கலம் ஆயிரத்தெண்பிள்ளையார் ஆயிரத்தெண்மர் வசக்கல் எனவும் பயின்று வந்துள்ளன. மாறமங்கலம் கல்வெட்டில், குணமந்த்ரநல்லூர், படுதரமங்கலம், சோழபாண்டிய நல்லூர் போன்ற ஊர்ப் பெயர்களும் பயின்று வந்துள்ளன. இந்த மூன்று ஊர்களும், மாறமங்கலத்தைச் சேர்ந்த சிற்றூர்களாக முற்காலத்தில் இருந்துள்ளன.
இதுகாறும் கண்ட ஊர்கள் அனைத்தும், தாமிரபரணியாறு கடலோடு கலக்குமிடத்தில், ஆற்றின் வடகரையில் வாழைத் தோட்டங்களுக்கு இடையே அமைந்து விளங்குகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இவ்வூர்கள் அனைத்தும் ஒரே நகரமாக இணைந்து கோநகர் கொற்கையாக, கொற்கைத் துறைமுகமாக, பாண்டியர்களின் தலைநகரமாக, துறைமுகப்ட்டினமாக விளங்கி இருக்க வேண்டும்.
வடமொழியின் ஆதிகாவியமான வால்மீகி இராமாயணத்தில், பாண்டிய மன்னர்களைப் பற்றிய குறிப்பு வருகிறது. வியாச முனிவரின் மகாபாரதத்திலும் தமிழ்நாட்டின் சிறப்பும், பாண்டியர் அரசும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. வால்மீகி இராமாயணமும் வியாசரின் மகாபாரதமும் கொற்கையை ‘பாண்டிய கவாடம்’ என்று குறிப்பிடுகின்றன. “பொன் நிறைந்ததாயும், அழகு உடைத்தாயும், முத்து மயமான மணிகளால் அலங்கரிக்கப்பெற்றதாயும், பாண்டியர்க்கு யோக்கியமாயும் உள்ள கவாடம்” என்று வால்மீகி கொற்கையைக் குறிப்பிடுகிறார். கொற்கை முன்றுறை, கொற்கைப் பெருந்துறை, கொற்கையம்பேரூர், பாண்டியர் கொற்கை என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, கொற்கை மாநகரம் தோன்றியிருந்தது. கி.மு. நான்கு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில், கொற்கை பாண்டிய நாட்டின் தலைசிறந்த பண்டப் பெருநிலையமாகவும், வணிகமையமாக வும் விளங்கியது. சுமார் கி.பி.60-ல் எழுதப்பட்ட பெரிப்புளூஸ் என்னும் நூல், கொற்கையை கொல்ச்சிஸ் (Colchis) என்றும், கி.பி 77-ல் வந்த தாலமியின் ‘பூகோள விவரணம்’ என்னும் நூல் கொற்கையை கொல்காய் (Kolkhoi) என்றும் குறிப்பிடுகின்றன. அயல்நாட்டு மாலுமிகள், மன்னார் வளைகுடாவை’ ‘கொற்கை வளைகுடா என்று குறிப்பிடுகின்றனர். மேற்கண்ட நூல்களில் வெளிநாட்டு அறிஞர்கள் குறிப்பிட்டிருக்கும் நுண்ணிய விவரங்கள், சங்க நூல்கள் பலவற்றில் காணப்படும் கருத்துகளுக்கு மிகப் பொருத்தமாய் இருக்கின்றன.
பாண்டியர் கொற்கை
ஆசிரியர்: செ.மா.கணபதி
விலை: 300 + Shipping | பக்கங்கள் 400
உள்ளடக்கம்.
Buy: wa.me/919786068908
1. கொற்கைக் கிராமம் : ஓர் அறிமுகம்.
2. கொற்கையும் வரலாற்றுச் சான்றுகளும்.
3. கொற்கையும் கர்ண பரம்பரைக் கதைகளும்.
4. கொற்கை: ஊர்ப்பெயராய்வு.
5. புதிய கற்காலத்தில் (கி.மு.2000 – கி.மு.1000).
6. பெருங் கற்காலத்தில் (கி.மு.1000 -கி.மு. 550).
7. சங்க காலத்தில் (சுமார் கி.மு.300 -கி.பி.250)
8. களப்பிரர் ஆட்சியில் (கி.பி.250 -550).
9. முதல் பாண்டியப் பேரரசு காலத்தில் (கி.பி. 575 – 966).
10. பாண்டிய நாட்டில் சோழர் ஆட்சிக் காலத்தில் (கி.பி.991-1120).
11. சோழ பாண்டியர் ஆட்சிக்காலத்தில் (கி.பி.1018-1070).
12. இரண்டாம் பாண்டியப் பேரரசு காலத்தில் (கி.பி.1190-1310).
13. பழைய காயல் : ஒரு வரலாற்றுப் பார்வை
14.நிறைவுரை
15. துணைநூற்பட்டியல்