போர்ச்சுக்கீசியர் முதன் முதலாக வந்து இறங்கிய கிபி 1498 முதல் 1600 வரை நான்கு கடற்படைத் தளபதிகளே மாறினார். கள்ளிக்கோட்டை மன்னர்களோ 15 பேர் மாறி மாறி பட்டத்துக்கு வந்து மாண்டனர். அவர்கள் அனைவரும் ஒரே சீரான கொள்கையைப் பின்பற்றவில்லை. சிலர் குஞ்சாலி மரைக்காயர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தனர். பலரோ பகைவருடன் கைகுலுக்கினர். ஆகையால் போர்ச்சுக்கீசியரை விரட்ட நீண்ட காலம் பிடித்தது.
அக்காலத்தில் போர்ச்சுக்கீசியரே கடற்படையில் சிறந்து விளங்கினர். அவ்வாறு இருந்தும் குஞ்சாலி மரைக்காயர்கள் வீரப் போராட்டத்தால் அவர்களுடைய சக்தி சிதறடிக்கப்பட்டது. அவர்கள் தென்னாட்டில் கால் கொள்ள விடாமல் விரட்டப்பட்டு கோவாவில் முடக்கப்பட்டனர்.
குஞ்சாலி மரைக்காயர்கள் நாட்டுப்பற்றிலும், வீரத்திலும், கடல் அனுபவத்திலும் பிரசித்தி பெற்ற ஆங்கில வீரர்களான நெல்சன், டிரேக் ஆகியோருக்கு எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்லர். ஒருபடி மேல் என்றே கூறலாம். குஞ்சாலி மரைக்காயரரகளின் வீரப் போராட்டம் தொடர்ந்து ஒரு நூற்றாண்டு காலம் நடைபெற்றது. அப்போராட்டத்தைக் கூறுவதே இந்நூலின் நோக்கமாகும்.
இவ்வாறு இன்னொரு ஆசிரியர் மகதி தமது முன்னுரையில் கூறியிருக்கிறார்.