ஸாதத் ஹஸ்ஸன் மாண்ட்டோவின் சிறுகதைகள் உண்மையின் வெகு அருகில் நின்று எழுதப்பட்டவை. இதனால் ஒவ்வொரு சிறுகதையும் வாசகர்களின் உள்ளத்தை ஊடுருவி நேரடியாகப் பேசும் வகையில் படைத்துள்ளார். இந்தியாவில் பிறந்த மாண்ட்டோ இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் பாகிஸ்தானுக்கு புலம்பெயரும் சூழலுக்கு உள்ளானார். அப்போது அவர் கண்ணெதிரே நிகழ்ந்த கலவரங்கள், படுகொலைகளால் தீவிர மன உளைச்சலுக்கு ஆளானார். இந்தியாவின் விடுதலைப் போராட்டம் உச்சத்தை அடைந்த போது நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை இந்நூலில் சிறுகதைகளாக நூலாசிரியர் எழுதியுள்ளார். குறிப்பாக, 1950 முதல் 1955 வரையிலான கால கட்டத்தில் எழுதிய 20 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். டோபா டேக் சிங் எனும் சிறுகதையில் ஒரு மனநல காப்பகத்தில் நிகழும் சம்பவம் மூலம் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் கொடுமைகளை விவரிக்கிறார். தொடர்ந்து வரும் ஒவ்வொரு சிறுகதையும் சிறு புனைவுகளுடன் பல உண்மைகளை உரைப்பதாக உள்ளது. இதுகுறித்து அவர் வெளிப்படையாக எழுதும் போது பாகிஸ்தான் அரசின் மிரட்டலுக்கு உள்ளானார். இத்தனை நெருக்கடியிலும் மாண்ட்டோ தன் கதைகளில் பெண்களின் துயரம் குறித்தும், குடும்ப ரீதியான அழுத்தங்கள் மற்றும் அவர்களின் சுதந்திரம் குறித்தும் பதிவு செய்யத் தவறவில்லை. இதனால் மாண்டோவின் எழுத்துகள் தற்போது வரை தனித்துவமானதாக விளங்குகிறது. நாட்டின் சுதந்திரப் போராட்ட காலத்தையும் சுதந்திரத்துக்கு பிந்தைய நிலையையும் வேறொரு பார்வையில் பார்க்க விரும்புவோருக்கு இந்நூல் வரப்பிரசாதம்.
Page: 288