மாதவையாவின் முழுமையான ஆளுமையைத் தற்காலத் தமிழ்ச் சூழலுக்கு அறிமுகம் செய்விக்கும் நோக்கில் ஆய்வடிப்படையில் தொகுக்கப்பட்ட இந்நூல் ஆசிரியர் ராஜ்கௌதமன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வேடாகும்.
மாதவையா,மேற்கத்திய இலக்கிய வகைகளில் நாவல்,சிறுகதை,ஓரங்க நாடகம்,ஆகியவற்றைத் தமிழில் படைத்து அவற்றின் வழியே புத்திலக்கியம் தோற்றுவித்தல், சமூக சீர்திருத்தக் கருத்துக்களைப் பரவச்செய்தல் ஆகிய மறுமலர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அவர் படைத்த புத்திலக்கியங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் அமைந்துள்ளன. தமிழில் அவர் படைத்த நாவல்களைக் குறிப்பான ஆய்வுக்குட்படுத்தி அவ் ஆய்வுக்கு வலுவூட்டுவதற்காக அவர் படைத்த ஆங்கில நாவல்களையும், சிறுகதைகளையும் கட்டுரை, பாடல்கள், தலைமையுரை போன்ற ஏனைய படைப்புக்களையும் பொதுவான ஆய்வுக்குட்படுத்துவதே இவ்ஆய்வின் நோக்கமாகும்.