அழகுக்காகவும் மதிப்புக்காகவும் மற்றும் பண்பாட்டுப் பழக்க வழக்கம் காரணமாகவும் அணிகலன்கள் அணியப்படுகின்றன. அவரவர் செல்வநிலைக்கேற்ப அவரவர் அணியும் அணிகலன்கள் செய்பொருளாலும் செய்முறையாலும் பண்பாட்டு நெறியாலும் மதிப்புநிலையாலும் அழகுநீர்மையாலும் வேறுபடுகின்றன. இத்தகைய அணிகலன்களுள் பல எழுத்து ஆவணங்களில் பதிவுபெற்றுள்ளன. இவற்றில் பதிவு பெறாது பேச்சு வழக்கில் வழங்குவன பல. எழுத்து, பேச்சு என்னும் இரு வழக்குகளினின்றும் அணிகலன்கள் குறித்த தகவல்களை அரிதின் முயன்று திரட்டிச் திருமதி ந. ஆனந்தி அவர்கள் இந்த அகராதியை உருவாக்கியுள்ளார். எனக்குத் தெரிந்தவரை எந்த மொழியிலும் அணிகலன்களுக்கெனத் தனி அகராதி இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது முதல் முயற்சி; முன்னோடி முயற்சி எனலாம்.