அரசியல் பொருளாதாரம் பற்றிய உலகின் முதல் ஆவணம் என்று அர்த்தசாஸ்திரம் அறியப்படுகிறது. இந்திய வர்த்தக வரலாற்றைப் பல பாகங்களில் அறிமுகப்படுத்தும் பெங்குவின் ஆலன் லேன் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் முதல் நூலாகவும் அர்த்தசாஸ்திரம் வெளியிடப்பட்டுள்ளது. அறம், பொருள், இன்பம் மூன்றையும் விவரிக்கும் அர்த்தசாஸ்திரத்தில் இருந்து செல்வம் பற்றிய பகுதிகளை மட்டும் எளிமையாகத் தனது புத்தகத்தில் (Arthashastra: The Science of Wealth) அறிமுகப்படுத்தியுள்ளார் தாமஸ் டிரவுட்மன். ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட அர்த்தசாஸ்திரம், ஓர் அரசன் தனது நாட்டை எப்படி நிர்வகிக்கவேண்டும், குடிமக்களை எப்படி நடத்தவேண்டும், வரிகள் எப்படி விதிக்கப்படவேண்டும், தானியங்கள் எப்படிப் பங்கிடப்படவேண்டும், ராணுவ நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்ளவேண்டும் உள்ளிட்ட பல அம்சங்களை ஆராய்கிறது. அர்த்தசாஸ்திரத்தை இயற்றிய ஆசிரியர் என்று கௌடில்யர், சாணக்கியர், விஷ்ணுகுப்தர் ஆகியவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.
மாக்கியாவெல்லியின் தி பிரின்ஸ் புத்தகத்தோடு ஒப்பிடப்படும் அர்த்தசாஸ்திரத்தை இப்போது வாசிக்கும்போது சில விஷயங்களில் நாம் கவனமாக இருக்கவேண்டும். முதலில் இந்த ஆவணத்தை அன்றைய காலகட்டத்து அரசியல், வரலாற்று, பொருளாதாரப் பின்னணியோடுப் பொருத்திப் புரிந்துகொள்ளவேண்டும். இரண்டாவதாக, இன்றைய சூழலோடு அதனைப் பொருத்திப் பார்த்து அதிலிருந்து நமக்கு ஏதேனும் பாடங்கள் கிடைக்காதா என்று பார்க்க முயற்சி செய்யக்கூடாது. மூன்றாவது, அர்த்தசாஸ்திரத்தின்படிதான் அன்றைய ஆட்சிமுறை நிலவியது என்று அவசரப்பட்டு முடிவுசெய்துவிடக்கூடாது. காரணம் அர்த்தசாஸ்திரத்தின்படிதான் அன்றைய அரசர்கள் ஆட்சி செய்தனரா என்பது நமக்குத் தெரியாது. அரசருக்கு ஆளிக்கப்பட்ட ஆலோசனைகளின் தொகுப்பு என்னும் அளவில் ஒரு வரலாற்றுப் பிரதியாக மட்டுமே அர்த்தசாஸ்திரத்தை நாம் அணுக இயலும்.
முடியரசு, குடியரசு இரண்டில் எது சிறந்தது என்னும் கேள்வியை எழுப்பும் அர்த்தசாஸ்திரம், முடியரசே சிறந்தது என்னும் முடிவுக்கு வருகிறது. இன்றைய சூழலுக்கு ஏன் அர்த்தசாஸ்திரம் பொருந்தாது என்பதற்கு இது ஓர் உதாரணம் மட்டுமே. அதே சமயம் இன்றைய யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் பல அம்சங்களும் அர்த்தசாஸ்திரத்தில் உள்ளன. ஓர் உதாரணம் : ‘நாக்கில் வைக்கப்பட்ட தேனையோ விஷத்தையோ சுவைக்காமல் இருக்க முடியாது. அதுபோல அரசனுடைய பணத்தைக் கையாளும் ஒருவனால், சிறிதளவே ஆனாலும், பணத்தைச் சுவைக்காமல் இருக்கமுடியாது. நீரில் நீந்துகிற மீன் தண்ணீரைக் குடிக்கிறதா இல்லையா என்று எப்படி அறிய-முடியாதோ அதுபோல பணிகளை நிறைவேற்ற நியமிக்கப்பட்ட அதிகாரிகள் பணமோசடி செய்வதை அறிய இயலாது. வானில் பறக்கும் பறவைகளின் வழியைக்கூட அறியமுடியும். ஆனால் தன் எண்ணங்களை மறைத்துச் செயல்படும் அதிகாரிகளின் வழிகளை அறியமுடியாது.’ (2.10.32-34).
அரசன் என்றால் ராஜபோக வாழ்க்கை, நிரம்பி வழியும் வசதிகள், கணக்கிடவியலா பொன், பொருள் என்று மட்டுமே நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவருடைய வாழ்க்கை சவாலானது என்கிறார் டிரவுட்மன். ஓர் அரசனுக்குத் தொடர்ந்து ஆபத்தும் அச்சுறுத்தல்களும் தோன்றிக்கொண்டே இருக்கும். அரண்மனைக்கு உள்ளிருந்தும், வெளியில் இருந்தும். தொடர்ந்து கண்காணித்து இந்தச் சவால்களை முறியடிக்கவேண்டிய கட்டாயத்தில் அரசர் இருக்கிறார். தன் சொந்தக் குடும்பத்திடம் இருந்து ஓர் அரசன் எப்படித் தன்னைக் காத்துக்கொள்ளவேண்டும் என்றும் அந்தப்புரத்தில்கூட எப்படியெல்லாம் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கவேண்டும் என்றும் விரிவாக அர்த்தசாஸ்திரம் விளக்குகிறது.