12 படையெடுப்புகளை எதிர்கொண்டு, மங்கோலியர் களின் கொட்டத்தை அடக்கியது அலாவுதீன் கில்ஜியின் அருஞ்செயல்களில் ஒன்று. அவர் காலத்தில் சிந்து நதி வரை டில்லிப் பேரரசின் எல்லை சென்றது. காபூல் நகரையும் தாண்டி, மங்கோலியர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ள பகுதிகளை கட்டுக்குள் கொண்டு வந்து, மங்கோலியர்களின் ஆபத்துக்களிலிருந்து இந்தியாவை மீட்ட பெருமை அலாவுதீன் கில்ஜியையே சாரும்.
அலாவுதீன் கில்ஜியின் போர்த்திறன், எத்தகைய இன்னல் வரினும் மனம் தளராத நிலை, அஞ்சா நெஞ்சம், மேற்கொண்ட காரியத்தை விடாப்பிடியாக இருந்து சாதிக்கும் ஆற்றல், இத்தோடு அவரது திறமைமிக்க படைத் தளபதிகள் அவரின் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்தனர்.
அண்மைக் காலமாக அலாவுதீன் கில்ஜி மீது எத்தனை அபாண்டங்கள்! எவ்வளவு ஆர்ப்பாட்டங்கள்! ‘சித்தோரை கில்ஜி தாக்கி சண்டையிட்டது வரலாற்று உண்மை. பத்மாவதி கதையும் அவளை அடைய வேண்டும் என கில்ஜி படையெடுத்ததும் கற்பனை. கில்ஜி இறந்து 200 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட காவியத்தில் இருந்து உருவான கற்பனை தான் பத்மாவதி கதை. அவர் மீது சுமத்தப்படும் பழிகளைத் துடைத்தெடுத்து உண்மையான வரலாற்றை ஆதாரங்களுடன் விரிவாகவே தருகிறார் வரலாற்றாய்வாளர் செ. திவான்.