பிராமண போஜனம்
நிலம் தவிர உணவும் கொடைப்பொருளாக விளங்கியுள்ளது. வழிபாட்டின்போது உணவு படைத்து வழிபடுவது சைவ வைணவ சமயமரபு. இதைத் திருஅமுது செய்தல் என்று கூறுவர். இவ்வாறு திருஅமுது செய்யவும், சிவனடியார், பயணம் செய்வோர், பிராமணர் ஆகியோரின் பசி போக்கவும் உணவுக் கொடை வழங்கப்பட்டது. இவற்றுள் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட உணவுக் கொடை பிராமண போஜனம் எனப்பட்டது.
இப்பிராமண போஜனமானது மூன்று வகையில் நிகழ்ந்துள்ளது. முதலாவது நாள்தோறும் நிகழ்த்தப்படுவது. இதை நிசிதம் (நாள்தோறும்) என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இரண்டாவது, அம்மாவாசை யன்று நிகழ்வது. மூன்றாவது கோவில் திருநாட்களின் போது நிகழ்வது.