Description
கிரீஸ் நாட்டின் பொருளாதார சீர்குலைவு, கென்யாவின் நகர்ப்புற வறுமை, எகிப்து நாட்டின் புரட்சிக்கு முந்தைய சமூக வாழ்க்கை, தென்னாப்பிரிக்க சமூக சூழ்நிலை என பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து அங்குள்ள பிரச்னைகளைப் பதிவு செய்துள்ளார் இந்திய செய்தியாளர் நதிம் சிராஜ், அந்த வரிசையில் ஈரான்-அமெரிக்கா இடையே 2017-இல் நிலவிய நெருக்கடி சூழலையும், சர்வதேச அரசியலில் ஈரானின் கச்சா எண்ணெய் அரசியலை பற்றிய நேரடி அனுபவங்களையும் இந்நூலில் பகிர்ந்துள்ளார். ஈரானின் பல பகுதிகளுக்குச் சென்று, மக்களின் வாழ்க்கைமுறை, கலாசாரம், அரசியல் போன்றவற்றை காட்சிப்படுத்துகிறார். அதுபோல், பல்வேறு துறைகளில் மேம்பட்ட நிலையை அடைந்த ஈரான், பெண்களுக்கான கட்டுப்பாட்டில் இன்னமும் பழமைவாதத்தை பின்பற்றுவதையும் அவர் பதிவு செய்யத் தவறவில்லை. பாரசீக வளைகுடா நாடுகளில் நிலவும் எண்ணெய் போர்கள் குறித்தும், அதன்பின் உள்ள எண்ணெய் அரசியல், பெட்ரோ டாலர் அமைப்பு குறித்தும் எளிய நடையில் பதிவு செய்திருப்பது சிறப்பு. இந்தியா-ஈரான் இடையேயான கலாசார தொடர்பு, வர்த்தகம் மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்த பதிவு இரு நாடுகளுக்கிடையேயான உறவை பல கோணத்தில் காட்டுகிறது. ஆங்கில-அமெரிக்க நாடுகளும், சீன-ரஷிய முன்னணியும் உலகில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் வேளையில் ஒன்றுபட்ட சமுதாயமாக ஈரான் சர்வதேச அரசியலில் தனக்குரிய இடத்தைப் பெற்றுள்ளது. சர்வதேச அரசியல், வர்த்தகம் குறித்து தரவுகளுடன் அறிய இந்நூல் சிறந்தது.























