இந்து சமயத் தத்துவத்தைக் கல்லூரி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு நோக்கத்தோடு இந்நூல் எழுதப்பெற்றது. இதில் இந்து சமயம் பற்றியும் அதன் தத்துவம் பற்றியும் மூலக்கருத்து விளக்கங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. அதனுடன் இந்து தத்துவக் கோட்பாடுகளையும், ஆசாரங்களையும் பற்றிய செய்திகளும் இடம்பெற்றுள்ளன. இந்து சமயம் பற்றிய செய்திகளைத் தெரிந்துகொள்ள விழையும் அனைவருக்கும் இச்சிறு நூல் உறுதுணையாய் இருக்கும் என நம்பப்படுகிறது.
சமயம் பற்றிய அடிப்படையான விஷயங்களை முதல் அத்தியாயத்தில் நூலைப் படிப்போருக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. இரண்டாவது அத்தியாயத்தில் இந்து சமய சாராமிசம் சொல்லப்படுகிறது.
அதன்பின் வரும் அத்தியாயங்கள் இந்து சமயத்தின் வேதங்கள், சடங்குகள், அறவியல், ஆன்மிக ஆசாரங்கள் ஆகியவை பற்றிக் கூறுகின்றன. ஏழாவது அத்தியாயத்தில் இந்து தத்துவ முறைகளின் கோட்பாடுகள் விளக்கப்படுகின்றன. தாந்திரிக முறைகளின் ஆசாரங்கள், கொள்கைகள் பற்றிய விவரம் எட்டாவது அத்தியாயத்தில் தரப்பட்டுள்ளது.நவ இந்தியாவின் சமயப் பெரியாரான ஸ்ரீராமகிருஷ்ணர், மகாத்துமா காந்தி, ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீரமணர் ஆகியோர் பற்றிக் கடைசி அத்தியாயமான ‘வாழும் இந்து மதம்’ விவரிக்கிறது.
இந்து சமய ஆசாரங்கள், கோட்பாடுகள் பற்றி ஒலிபரப்பான இரு சொற்பொழிவுகள் முதல் அனுபந்தத்தில் தரப்பட்டுள்ளன. இரண்டாவது அனுபந்தத்தில் ‘இன்றைய இந்தியாவில் மதம்’ என்ற கட்டுரை இடம் பெறுகிறது.